விண்வெளியிலிருந்து தூதனின் செய்திகள்

வேதபாடங்கள் 16

தூதர்கள் மெய்யானவர்கள்.  சிலவேளைகளில் கேரூபீன் என்றும் சேராபீன் என்றும் அழைக்கப்படுகிற வல்லமையான இந்த பணிவிடை ஆவிகள்,

வேதாகம சரித்திரம் முழுவதிலும், பலவேளைகளில் தேவனுடைய பிள்ளைகளை பாதுகாத்து வழிநடத்துபவர்களாயும், சிலவேளைகளில் தீமையை தண்டிப்பவர்களாயும் காணப்படுகின்றனர்.  தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்தி விளக்குவதும் அவர்களுடைய முக்கியமான ஊழியங்களில் ஒன்று.  நம்முடைய பரபரப்பான உலகத்தின் பாரஞ்சுமந்த மக்களுக்கு தேவன் தமது தூதர்களின் வழியாக விசேஷ செய்திகளை வைத்திருக்கிறார்! வெளி. 14ல் பறக்கிற மூன்று தூதர்களின் அடையாளத்தினால் சில அற்புதமான கடைசிகால செய்திகளை வெளிப்படுத்துகிறார்.  இந்த செய்திகள் நிறைவடையும்போது இயேசு திரும்ப வருகிறார்.  முக்கியமான செய்திகள்!  இந்த பாடம் உங்கள் கண்களைத் திறக்கிற ஒரு மேலோட்டத்தைக் கொடுக்க, அடுத்து வருகிற 8 பாடங்களும் நம்புவதற்கரிய விளக்கங்களைக் கொடுக்கும்.  உங்களுக்கான தேவனுடைய தனிப்பட்ட செய்தி விவரிக்கப்படவிருக்கிறது; ஆயத்தமாகுங்கள்.

1. வெளிப்படுத்தல் புத்தகம் முத்தரிக்கப்பட்டதல்லவா?  அதை நாம் ஏன் படிக்கவேண்டும்?

பதில்:   வெளிப்படுத்தலை படிப்பதற்கு ஆறு முக்கிய காரணங்கள் உள்ளன.

  • அ. அது ஒருபோதும் முத்தரிக்கப்பட்டிருக்கவில்லை (வெளி. 22:10), கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்குமிடையே நெடுங்காலமாக நடந்துவருகிற யுத்தமும், பிசாசின் தந்திரங்களும் கடைசிகால நேர்மையற்ற திட்டங்களும் வெளிப்படுத்தலில் வெளியாக்கப்பட்டிருக்கின்றன.  சாத்தானின் பொய் வஞ்சகங்களை அறிந்திருக்கிறவர்களை அவனால் எளிதாக ஏமாற்றமுடியாது.  எனவே வெளிப்படுத்தல் முத்தரிக்கப்பட்ட புத்தகம் என்று மக்கள் நம்பவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
  • “வெளிப்படுத்தல்” என்கிற பெயர்தானும் முத்தரிக்கப்பட்டது என்பதற்கெதிராக “திறக்குதல்,”  “திரைநீக்குதல்,” “வெளிப்படுத்தல்” எனப்படுகிறது. அது திறக்கப்பட்டிருக்கிறது.
  • வெளிப்படுத்தல் தனிப்பட்டவிதத்தில் இயேசுவிடமிருந்து வந்த புத்தகம்.  “தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும்,இவர்…..வெளிப்படுத்தினதுமான விசேஷம்” என்று அது துவங்குகிறது.  வெளி. 1:13-16, அது இயேசுவை படம்பிடித்துக் காட்டுகிறது.  இதைப்போல வேதாகமத்தின் வேறு எந்த புத்தகமும் இயேசுவையும், அவருடைய கடைசிகால போதனைகளையும், திட்டங்களையும் வெளிக்காட்டுவதில்லை.
  •  இயேசுவின் வருகைக்குமுன்பு இருப்பவர்களுக்காக இது எழுதப்பட்டது (வெளி. 1:1-3; 3:11; 22:6,7,12,20).
  • இதை வாசிக்கிறவர்களுக்கும் அதன்படி செய்கிறவர்களுக்கும் விசேஷ ஆசீர்வாதம் கூறப்பட்டிருக்கிறது (வெளி. 1:3; 22:7).
  • திகைக்கவைக்கும் தெளிவோடு கடைசிகால மக்களையும் சபையையும் அது விவரிக்கிறது.  வெளிப்படுத்தலில் விவரிக்கப்பட்டுள்ள கடைசிகால சம்பவங்கள் வேதாகமத்தை உயிருள்ள புத்தகமாக்குகிறது.  கடைசிநாட்களில் தேவனுடைய சபை எதை போதிக்கவேண்டுமென்பதைம் அது குறிப்பாக சொல்லுகிறது (வெளி. 14:6-14).  இந்த பாடம் அந்த போதனையைக் குறித்த மேலோட்டத்தை உங்களுக்குக் கொடுக்கும்.  அதினால் அச்செய்தியை கேட்கும்போது எளிதாக உணருவீர்கள்.
குறிப்பு: மேற்கொண்டு செல்லுமுன்பாக உங்கள் வேதாகமத்தைத் திறந்து வெளிப்படுத்தல் 14:6-14 வரை வாசியுங்கள்.
2. இந்த சுவிசேஷம் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (மாற்கு 16:15). இந்த பவித்திரமான பரிசுத்தமான வேலையை வெளிப்படுத்தலில் அவர் எவ்விதம் அடையாளப்படுத்துகிறார்?

“பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் … நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து … வேறொரு தூதன் பின்சென்று … அவர்களுக்குப் பின்னே மூன்றாம்தூதன் வந்து …” – வெளிப்படுத்தல் 14:6-9.

பதில்: “தேவதூதன்” என்கிற வார்த்தை “தூதுவன்” என்று பொருள் தருகிறது.  எனவே கடைசிகால செய்தியை கொடுக்க தேவன் மூன்று தூதர்களை உபயோகிப்பது அர்த்தமுள்ளது.  இந்த செய்தியை இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை துணை செய்யும் என்று நமக்கு நினைவுபடுத்தும்படியாக தேவன் தூதர்களின் அடையாளத்தை உபயோகிக்கிறார்.

3. கடைசிகாலத்திற்கான தேவனுடைய செய்தியின் என்ன இரண்டு முக்கியமான குறிப்பை வெளிப்படுத்தல் 14:6 வெளிப்படுத்துகிறது?

“பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து” – வெளிப்படுத்தல் 14:6.

பதில்:  1. அது “நித்திய சுவிசேஷம்,”  2. அது பூமியில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த இரண்டு முக்கிய குறிப்புகள்.  இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தினாலும் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதினாலும் மாத்திரமே மக்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் (அப்போஸ்தலர் 4:12; மாற்கு 10:26,27) என்பதை தெளிவாக்குகிற சுவிசேஷத்தை முத்தூது அழுத்திகூறுகிறது.  இரட்சிப்பிற்கு வேறு எந்த ஒரு வழியும் இல்லாதபடியால், வேறொரு வழி இருக்கிறது என்று சொல்லுவது தீமையானது.

சாத்தானுடைய போலிகள்

சாத்தானுடைய போலிகள் அநேகமாக இருந்தாலும், அதில் இரண்டு போலிகள் முக்கியமானவை. அவை: 1. கிரியையினால் இரட்சிப்பு  2. பாவத்துடனேயே இரட்சிப்பு என்பதே. இந்த இரண்டு போலிகளும் முத்தூதில் உடைக்கப்ட்டு வெளியாக்கப்படுகின்றன.  அதை உணராத அநேகர், இந்த தவறுகளில் ஒன்றை பற்றிக்கொண்டு அதன்மேல் தங்கள் இரட்சிப்பைக் கட்டும் சாத்தியமில்லாத சாதனையை நடத்த முயற்சிக்கின்றனர்.  முத்தூதை உள்ளடக்காத கடைசிகால செய்தியை கொடுக்கிற எவரும் கடைசிகாலத்திற்கான இயேசுவின் சுவிசேஷத்தை போதிக்கவில்லை என்று நாம் அழுத்திக் கூறவேண்டும்.

4. முதல் தூதனின் தூது எந்த நான்கு குறிப்பிட்ட கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது?

 “மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்;  அவர் நியாத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்” – வெிப்படுத்தல் 14:7.

பதில்:

  • “தேவனுக்கு பயந்து.” இதன் பொருள் நாம் தேவனிடம் பயபக்தியோடிருந்து, அன்போடும், நம்பிக்கையோடும், மரியாதையோடும், அவர் சொல்லுவதைச் செய்யும் வாஞ்சையோடும் அவரைப் பார்க்கவேண்டும் என்பதே.  இது நம்மை தீமையினின்று பாதுகாக்கிறது (நீதிமொழிகள் 16:6).  ஞானியாகிய சாலமோன்: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (பிரசங்கி 12:13) என்று கூறினான்.
  • “தேவனை மகிமைப்படுத்துங்கள்.”  தேவன் நமக்கு காண்பித்திருக்கிற தயவிற்காக அவரை துதித்து, அவருக்கு கீழ்ப்படிந்து நன்றி சொல்லும்போது இந்த கட்டளையை நிறைவேற்றுகிறோம். கடைசி நாட்களில் இருக்கும் பெரிய பாவங்களில் ஒன்று நன்றியில்லாதிருப்பது. (2 தீமோத்தேயு 3:1,2).
  • “அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது.” ஒவ்வொருவரும் தேவனுக்கு கணக்குக் கொடுக்கவேண்டும் என்று இது காட்டுகிறது.  கூடவே நியாயத்தீர்ப்பு இப்போது நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக்குகிறது.  நியாயத்தீர்ப்பின் விவரங்கள் 18 மற்றும் 19-ம் வேத பாடங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
  • “உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்.”  இந்த கட்டளை சுயஆராதனை உட்பட அனைத்து விக்கிரக ஆராதனைகளையும் நெகிழும்படி கட்டளையிட்டு, தேவனை சிருஷ்டிகரென்றும் மீட்பரென்றும் மறுதலிக்கிற பரிணாமக் கொள்கையை முழுமையாக மறுக்கிறது. (சுய ஆராதனைக்கு நடத்துகிற சுயமதிப்பிற்கு இன்றைக்கு அநேக புத்தகங்களும் ஒளிபரப்புகளும் அதிகம் கவனம் கொடுக்கின்றன.  பரலோக இராஜாவிற்கு நம்மை குமாரரும் குமாரத்திகளுமாக்கியிருக்கிற கிறிஸ்துவிலேயே ஒரு கிறிஸ்தவனுடைய மதிப்பு இருக்கிறது

பரலோகத்தின் ஆண்டவரால் இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது என்பதை சுவிசேஷம் உள்ளடக்கியிருக்கிறது.  சிருஷ்டிகரை தொழுதுகொள்வது-சிருஷ்டிப்பின் நினைவாக அவர் வைத்திருக்கிற நாளில் (ஏழாம்நாள் ஓய்வுநாளில்) அவரை தொழுதுகொள்ளுவதை உள்ளடக்குகிறது.  வெளிப்படுத்தல் 14:7 ஓய்வுநாளையே சுட்டிக்காட்டுகிறது என்பதை, ஓய்வுநாள் கற்பனையிலிருந்தே, “வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் … உண்டாக்கி” (யாத்திராகமம் 20:11) என்கிற வார்த்தைகள் எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற உண்மை தெளிவுபடுத்துகிறது.  மனுக்குலத்தின் வேர்கள் ஆதியில் தம்முடைய ஓய்வுநாளைக்குறித்த அதிகமான விவரங்களுக்கு வேதபாடம் 7-ல் படிக்கவும்.  சாயலாக நம்மை உண்டாக்கின தேவனில் மாத்திரமே இருக்கிறது.  தேவனை சிருஷ்டிகராக தொழுதுகொள்ளாதவர்கள், வேறு எதை தொழுதாலும் தங்களுடைய உண்மையான வேர்களை ஒருபோதும் கண்டுபிடிக்கமாட்டார்கள்.

5. பாபிலோனைக்குறித்த என்ன பவித்திரமான வாக்கியத்தை இரண்டாம் தூதன் சொல்லுகிறான்? வெளிப்படுத்தல் 18ல் வரும் தூதன் தேவனுடைய பிள்ளைகளுக்கு என்ன கட்டளை கொடுக்கிறான்?

“வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது … என்றான்.”  “இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் … வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்;… அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! … பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன், அது என் ஜனங்களே, நீங்கள் … அவளைவிட்டு வெளியே வாருங்கள்” – வெளிப்படுத்தல் 14:8; 18:1-4.

பதில்:  இரண்டாம் தூதன் பாபிலோன் விழுந்தது என்று தீவிரமாக அறிவிக்கிறான்.  மேலும் பரலோகத்திலிருந்து உண்டான சத்தம் உடனடியாக பாபிலோனைவிட்டு வெளியே வரும்படி தேவனுடைய மக்களை நிர்பந்திக்கிறது.  பாபிலோன் என்றால் என்ன என்பதை அறியாதபோது, நீங்கள் அதற்குள்ளேயே இருந்துவிடக்கூடும்.  இதைக்குறித்து சி்ந்தியுங்கள்.  இப்போது பாபிலோனிற்குள் இருக்கும் சாத்தியம் உங்களுக்கு உண்டா? பாபிலோன் பற்றிய விவரங்களை 20-ம் வேதபாடத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

6. மூன்றாம் தூதனின் தூது எதற்கெதிராக எச்சரிக்கிறது?

“அவர்களுக்குப் பின்னே மூன்றாம்தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே … அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து,” – வெளிப்படுத்தல் 14:9.10.

பதில்:  மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி, கைகளிலாவது நெற்றியிலாவது அதன் முத்திரையை பெற்றுக்கொள்பவர்களை மூன்றாம் தூதனின் தூது எச்சரிக்கிறது.  முதலாம் தூதன் மெய்யான தொழுகையை கட்டளையிடுகிறான்.  மூன்றாம் தூதன் பொய்யான தொழுகையோடு இணைந்திருக்கிற பயங்கரமான விளைவுகளைச் சொல்லுகிறான்.  இந்த மிருகம் யார் என்பதும், அதனுடைய முத்திரை என்ன என்பதும் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா? மிருகம் யார் என்பதையும் அதன் முத்திரை என்ன என்பதையும் அறியாவிட்டால், உணராமலேயே அதை நீங்கள் தொழுதுகொள்ளக்கூடும்.  வேதபாடம் 20-ல் மிருகமும் அதினுடைய முத்திரையை பற்றின விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  வேதபாடம் 21-ல் அதினுடைய சொரூபத்தை குறித்து விவரிக்கிறது.

7. வெளிப்படுத்தல் 14:12ல் முத்தூதை ஏற்று பின்பற்றுகிற தமது மக்களுக்கு என்ன நான்கு குறிப்புகளை தேவன் கொடுக்கிறார்?

“தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்” – வெளிப்படுத்தல் 14:12.

பதில்:

  • அவர்கள் பொறுமையானவர்கள், உறுதியானவர்கள், முடிவுவரை உண்மையானவர்கள்.  “எதையும் உடனே செய்துவிடவேண்டும்” என்று நினைக்கிற சந்ததிக்கு இது ஒரு பெரிய ஒழுங்கு.  தேவனுடைய மக்கள் தங்கள் பொறுமையினாலும் அன்பான நடக்கையினாலும் அவரை வெளிப்படுத்துவார்கள்.
  • தேவனுடைய பக்கத்தில் முழுமையாக இருப்பதினால் அவர்கள் பரிசுத்தவான்கள்.
  • அவர்கள் தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்வார்கள்.  இந்த மக்கள் தேவனுடைய பத்து கற்பனைகள் உட்பட அவர் கொடுத்திருக்கிற அனைத்து கட்டளைகளுக்கும் மகிழ்ச்சியோடு கீழ்ப்படிவார்கள்.  அவர்களுடைய முதல் நோக்கம் தாங்கள் நேசிக்கிற அவரை திருப்திப்படுத்துவதே (1 யோவான் 3:22). பத்து கற்பனையை குறித்த அதிகமான விவரங்கள் வேதபாடம் 6-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
  • அவர்கள் இயேசுவில் விசுவாசம் வைத்திருப்பார்கள். இயேசுவின் விசுவாசத்தை பெற்றிருப்பார்கள் என்றுங்கூட இது மொழிபெயர்க்கப்படலாம்.  இரண்டுவிதத்தில் தேவனுடைய மக்கள் அவரை முழுமையாகப் பின்பற்றி அவரை முழுமையாக நம்புவார்கள்.
8. அனைத்து மக்களுக்குமான மூன்றாம் தூதனின் தூதை எது உடனடியாக தொடர்கிறது?

“பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் … உடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்” – வெளிப்படுத்தல் 14:14.

பதில்:  முத்தூது சகல மக்களுக்கும் கொடுக்கப்பட்டவுடனேயே தம்முடைய மக்களை அவர்களுடைய பரலோக வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி மேகங்கள்மேல் இயேசு திரும்ப வருவார் (இரண்டாம் வருகை).  அவர் வரும்போது வெளிப்படுத்தல் 20ன் மாபெரும் இருண்ட ஆயிரம் வருடம் துவங்குகிறது.  1000 வருட அரசாட்சியை குறித்த விவரங்கள் வேதபாடம் 12-ல் கொடுக்கப்பட்டுள்ளது.  இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்த விவரங்கள் 8-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

9. பேதுரு 1:12 ல் அப்போஸ்தலன்: “இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியம்” என்று கூறுகிறாரே, அதன் பொருள் என்ன?

பதில்:  “இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியம்” என்பது, குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அவசரத்தோடு கொடுக்கப்படுகிற நித்திய சுவிசேஷத்தின் ஒரு பகுதி. உதாரணங்கள்:

  • வெள்ளத்தைக்குறித்த நோவாவின் செய்தி (ஆதியாகமம் 6:7; 2 பேதுரு 2:5).  நோவா நீதியை பிரசங்கித்தான்.  உலகத்தை அழிக்க வரவிருக்கிற வெள்ளத்தைக்குறித்து எச்சரித்தபோது தேவனுடைய அன்பை அவன் போதித்தான்.  வெள்ளத்தைக்குறித்த செய்தி “இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியமாக” – “நிகழ்கால சத்தியமாக” அவர்களுக்கு இருந்தது.  “பேழைக்குட்படுங்கள்” என்பது அதனுடைய அவசர அறிவிப்பாயிருந்தது.  அது அவ்வளவு முக்கியமானதாயிருந்ததால், அதை போதிக்காதிருப்பது சன்மார்க்கத்திற்கு எதிரானதாக இருந்திருக்கும்.
  • நினிவேக்கு வந்த யோனாவின் செய்தி (யோனா 3:4). யோனாவின் “நிகழ்கால சத்தியம்,” நினிவே 40 நாட்களில் கவிழ்க்கப்படும் என்றிருந்தது. யோனாவும் இரட்சகரை உயர்த்தினான்; அந்தப் பட்டணம் மனந்திரும்பியது. 40 நாட்கள் எச்சரிப்பை தராதிருந்திருந்தால், அது விசுவாசமற்றதும் மன்னிப்பு பெறக் கூடாததாயும் இருந்திருக்கும்.  அது “நிகழ்கால சத்தியம்.” அந்த காலத்திற்கு அது விசேஷமாகப் பொருந்தியது.
  • யோவான் ஸ்நானகனுடைய செய்தி (மத்தேயு 3:1-3; லூக்கா 1:17), யோவானுடைய “நிகழ்கால சத்தியம்:”  மேசியாவாகிய இயேசு வரப்போகிறார் என்பதே! இந்த சுவிசேஷத்தைக் கொடுத்து இயேசுவின் முதல் வருகைக்கு மக்களை ஆயத்தப் படுத்துவதே அவன் வேலையாயிருந்தது.  அவனுடைய நாட்களின் சுவிசேஷமாகிய இயேசுவின் முதல் வருகையை அறிவிக்காதிருந்தால் அதன் விளைவு என்னவாயிருந்திருக்கும் என்பது யோசிக்க முடியாத ஒன்று.
  • முத்தூது (வெளிப்படுத்தல் 14:6-14). இன்றைக்கான தேவனுடைய “நிகழ்கால சத்தியம்” முத்தூதில் இருக்கிறது.  ஆம், இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே இரட்சிப்பு என்பது இந்த செய்திகளின் மையம். எனினும், இயேசுவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்தவும், சாத்தானின் மயக்கும் வஞ்சனைகளுக்கு கண்களைத் திறக்கவும் இந்த முத்தூது கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இந்த செய்திகளை புரிந்துகொள்ளாவிடில் சாத்தான் அவர்களை அழித்துவிடுவான். இந்த விசேஷ செய்திகள் நமக்கு அவசியம் என்று இயேசு அறிவார்.  எனவே அன்பினால் கொடுத்திருக்கிறார்.  இவைகள் நெகிழப்படக்கூடாது.  அடுத்த எட்டு வேதபாடங்களில் ஒவ்வொரு குறிப்பாக அவைகளை ஆராய்வோம்.  நீங்கள் கண்டுபிடிக்கிறவைகளில் சில அதிர்ச்சியூட்டுவதாயிருக்கலாம்.  எனினும் அனைத்தும் முழுமையானதாக இருக்கும்.  உங்கள் இருதயம் தூண்டப்படும். இயேசு உங்களிடம் பேசுவதை நீங்கள் உணருவீர்கள்.  இவைகள் அவரின் செய்திகளே.
10. ஆண்டவருடைய பெரிய நாளுக்குமுன்பாக “நிகழ்கால சத்தியத்தை” கொடுப்பதற்கு யார் வருவார்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது?

“இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்” – மல்கியா 4:5.

பதில்:  எலியா தீர்க்கதரிசி வருவான்.  இந்த எலியாவையும் அவனுடைய செய்தியையுங்குறித்த குறிப்பிடத்தக்க சில காரியங்கள் இருக்கின்றன.  அடுத்த சில கேள்விகளில் அதை நாம் காணலாம்.

11. தேவன் தன்மேல் கவனம் வைக்கும்படி எலியா என்ன செய்தான்?

குறிப்பு:  இந்த கேள்விக்கு பதில் பெறுமுன் தயவுசெய்து உங்கள் வேதாகமத்தைத் திறந்து 1 இராஜாக்கள் 18:17-40 வரை படியுங்கள்.

பதில்:  யாரை சேவிக்கப்போகிறோம் என்பதைக்குறித்து தங்கள் மனதில் தீர்மானிக்கும்படி எலியா மக்களை அழைத்தான் (வசனம் 21). தேசம் ஏறக்குறைய முழுமையான விக்கிரக தேசமாகியிருந்தது; மக்கள் மெய்யான தேவனையும் அவருடைய கற்பனைகளையும் ஏறக்குறைய மறந்திருந்தனர்.  எலியா என்கிற ஒரு தேவனுடைய தீர்க்கதரிசியும், பாகாலின் 450 தீர்க்கதரிசிகளும் அங்கே இருந்தனர் (வசனம் 22). இருவரும் பலிபீடங்கள் எழுப்பி, அதன்மேல் கட்டைகளையும் காளைகளையும் வைக்கவேண்டுமென்று எலியா ஆலோசனை கூறினான்.  பின்னர் தம்முடைய பலிபீடத்தின்மேல் அக்கினியை அனுப்புவதன்வழியாக மெய்யான தேவன் தம்மை வெளிப்படுத்த வேண்டுமென்று அறிவித்தான். அஞ்ஞான தெய்வம் பதில் தரவில்லை.  ஆனால் எலியாவின் மெய்யான தெய்வம் பரலோகத்திலிருந்து அக்கினி அனுப்பி எலியாவின் பலியை எரித்துப்போட்டார்.

இந்த செய்தி ஒரு தீர்மானத்தைக் கோரியது

மிக ஆழமான ஆவிக்குரிய நெருக்கடியின் காலத்திலும் தேசத்தின் மருளவிழுகையிலும் எலியாவின் செய்தி வந்தது.  மேலே பரலோகத்திலிருந்து வல்லமையோடு வந்ததால், அது அவர்களுடைய “அன்றாட வேலைகளை” நிறுத்தி, முழு தேசத்தின் கவனத்தையும் கவர்ந்தது.  தேவனையா அல்லது பாகாலையா யாரை சேவிப்பார்கள் என்பதை தீர்மானிக்க எலியா வலியுறுத்தினான்.  ஆழமாக உணர்த்தப்பட்டு அசைக்கப்பட்டவர்களாக மக்கள் தேவனை தெரிந்துகொண்டனர் (வசனம் 39).

12 எலியாவின் செய்தி இரண்டு விதமாக பொருந்துகிறது.  அது இயேசுவின் முதலாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்தின “நிகழ்கால சத்தியமாகவும்,” இயேசுவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துகிற “நிகழ்கால சத்தியமாகவும்” இருக்கிறது.  தமது முதல் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்த எலியாவின் செய்தியை யார் கொடுத்ததாக இயேசு கூறினார்?

“யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை;” “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய  எலியா இவன்தான்” – மத்தேயு 11:11,14.

பதில்:  தம்முடைய முதல் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்தின யோவானின் செய்தியை இயேசு எலியாவின் செய்தி என்று அழைத்தார்.  யோவானின் செய்தியும் எலியாவின் நாளைப்போலவே சத்தியத்தை தெளிவாக்கி ஒரு தீர்மானத்தை வலியுறத்தியது.  வேதாகமம் யோவான் ஸ்நானகனைக்குறித்து: “அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்” (லூக்கா 1:17) என்று சொல்லுகிறது.

13. அந்த தீர்க்கதரிசனம் இரண்டாம் வருகைக்கு சற்று முன்பாக நம்முடைய காலத்திற்குப் பொருந்தும் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

“கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்” – மல்கியா 4:5;  “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்” – யோவேல் 2:31.

பதில்:  யோவேல் 2:31ல் குறிப்பிடப்பட்டிருக்கிற “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே” இரண்டு சம்பவங்கள் நடக்கும் என்பதை கவனியுங்கள்.  1. எலியா வருவான்;  2. வானங்களில் பிரம்மாண்டமான அடையாளங்கள் நடக்கும். இருண்ட நாள் மே 11, 1780 ல் நடந்தது. அந்த இரவிலேதானே சந்திரன் இரத்தம்போல காட்சியளித்தது.  நட்சத்திரங்களின் விழுகை என்னும் மற்றொரு அடையாளத்தையும் மத்தேயு 24:29 சேர்த்துக்கொள்ளுகிறது.  அது நவம்பர் 13, 1883 ல் நடந்தது.  இவைகளிலிருந்து, ஆண்டவருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்பாக தரப்படவேண்டிய கடைசிநாளுக்கான எலியாவின் செய்தி 1833 க்கு அருகிலோ அல்லது அதைத் தொடர்ந்தோ கொடுக்கப்படவேண்டும் என்று நாம் அறிகிறோம்.

வானத்தின் அடையாளங்களுக்குப் பின்பான எலியாவின் இரண்டாவது செய்தி

தேவனுடைய மிகப்பெரிய வானத்தின் அடையாளங்கள் யோவானுக்கு 1700 வருடங்கள் கடந்து நடந்ததால், யோவான் கொடுத்த “எலியாவின்” செய்தி, இரண்டாவது “எலியாவின்” செய்திக்கு பொருந்தாது என்பது வெளிப்படையாக இருக்கிறது.  யோவேல் 2:31 லிருக்கும் “எலியாவின்” செய்தி, வானத்தின் அடையாளம் தோன்றிய 1833 க்குப் பின்னர் கொடுக்கப்பட்டு இயேசுவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்தவேண்டும்.  வெளிப்படுத்தல் 14:6-14ல் வரும் முத்தூதான “நிகழ்கால சத்தியம்” இதில் பூரணமாகப் பொருந்துகிறது.  இது 1844 ம்

வருடத்தில் துவங்கி, இயேசுவின் இரண்டாம் வருகைக்கு (வசனம் 14) மக்களை உலகம் முழுவதிலும் ஆயத்தப்படுத்துகிறது.  முத்தூது பூமியிலிருக்கும் ஒவ்வொரு நபரையும் சென்று அடைந்தபிறகு இயேசுவின் வருகை இருக்கும். (1844-ம் வருஷத்தின் விவரங்கள் வேதபாடம் 18-ல் மற்றும் 19-ம் வேதபாடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.)

இந்த செய்தி ஒரு தீர்மானத்திற்கு அழைக்கிறது

தீமை நேருக்குநேர் சந்திக்கப்படவேண்டும் என்றும், யாரை சேவிப்போம் என்கிறதை அனைவரும் தீர்மானிக்கவேண்டும் என்றும் எலியா வலியுறுத்தினான்.  அவ்விதமே நமக்கான இன்றைய முத்தூதும் இருக்கிறது. ஒரு தீர்மானம் எடுக்கப்படவேண்டும். முத்தூது சாத்தானையும் அவனுடைய திட்டங்களையும் திரைநீக்கம் செய்கிறது. அது தேவனுடைய அன்பையும் அவருடைய கோரிக்கைகளையும் தெளிவாக வெளிக்காட்டுகிறது.  தேவன் மக்களை மெய்யான ஆராதனைக்கு-தேவனை மாத்திரமே தொழுதுகொள்ளுவதற்கு அழைக்கிறார்.  வேறு எவரையோ அல்லது வேறு எந்த காரியத்தையோ அறிந்தே சேவித்து ஆராதிப்பது, தேவனுக்கு உண்மையற்றிருப்பதைக் காண்பித்து, நித்திய மரணத்திலேயே முடிவடையும்.  எலியாவின் நாளிலும் (1 இராஜாக்கள் 18:37,39), யோவான் ஸ்நானாகனுடைய நாட்களிலும் தேவன் அற்புதமானவிதத்தில் இருதயங்களைத் தொட்டார்.  தேவனுடைய மக்கள் முத்தூதுக்கு செவிசாய்க்கும்போது இந்த கடைசி நாட்களிலும் அதேவிதமாக நடக்கும். (வெளிப்படுத்தல் 18:1-4).

14. எலியாவின் செய்தியை (முத்தூதை) போதிப்பது வேறு என்ன ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்?

“எலியா … பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்” – மல்கியா 4:5,6.

பதில்:  தேவனுக்கு ஸ்தோத்திரம்.  எலியாவின் செய்தி அல்லது முத்தூதின் செய்தி குடும்ப நபர்களை அன்பான, நெருக்கமான, மகிழ்ச்சியான பரலோக உறவிற்குள் கொண்டுவரும். என்ன ஆசீர்வாதமான வாக்குத்தத்தம்!

15. “சுவிசேஷம்” என்றால் “நற்செய்தி” என்று பொருள்.  வெளிப்படுத்தல் 14ல் முத்தூது நற்செய்தியை கொடுக்கிறதா?

பதில்:  ஆமாம்! உண்மையாகவே! முத்தூதைக்குறித்த இந்த மேலோட்டமான மேற்பார்வையில் நற்செய்திகளைத் திருப்பிப்பார்ப்போம்.

  • கடைசிநாளுக்கான சுவிசேஷத்தை கேட்கவும் புரிந்துகொள்ளவும் ஒவ்வொரு நபரும் ஒரு சந்தர்ப்பம் பெறுவார். ஒருவரும் விடப்படுவதில்லை.
  • நம்மை கண்ணியில் பிடித்து அழிக்கும் பிசாசின் ஞானமான வல்லமையான திட்டங்கள் நமக்கு வெளிப்படுத்தப்படுவதால் நாம் கண்ணியில் அகப்பட அவசியமில்லை.
  • இந்த கடைசி நாட்களில் தேவனுடைய செய்தியை அறிவிப்பதில் இயற்கைக்கு மேலான பரலோக வல்லமை உதவிசெய்யும்.
  • தேவனுடைய மக்கள் பொறுமையாயிருப்பார்கள். அவர் அவர்களை பரிசுத்தவான்களென்று அழைக்கிறார்.
  • தேவமக்கள் இயேசுவின் விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள்.
  •  தேவனுடைய மக்கள் அன்பினால் அவர் கற்பனைகளைக் கைக்கொள்வார்கள்.
  • தேவன் நம்மை அதிகம் நேசிப்பதால், இயேசுவின் இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்த விசேஷ செய்தியை அனுப்பியிருக்கிறார்.
  • இந்த கடைசி நாட்களுக்கான தேவனுடைய செய்தி குடும்ப நபர்களை அன்பிலும் இணக்கத்திலும் ஒன்றாகக் கொண்டுவரும்.
  • இயேசுகிறிஸ்துவினால் மாத்திரமே இரட்சிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதே இந்த முத்தூதின் முக்கியமான வலியுறுத்தும் செய்தி, நம்முடைய கடந்த காலத்தை மூடும் தம்முடைய நீதியை அவர் கொடுத்து, கிருபையில் வளர்ந்து அவரைப்போலவே மாறுவதற்கான நீதியையும் அற்புதமாக அனுதினமும் அருளுகிறார்.  அவரோடு இருக்கும்போது நாம் தோல்வியடையமுடியாது. அவரில்லாதபோது நம்மால் வெற்றியடைய முடியாது.

மேலும் ஒரு வார்த்தை

 வரும் பாடங்களில் விளக்கப்படவிருக்கிற முத்தூதின் குறிப்புகள்:

  1. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வேளை வந்துவிட்டது.
  2. விழுந்துபோன பாபிலோனைவிட்டு வெளியே வா.
  3. மிருகத்தின் முத்திரையை பெற்றுக்கொள்ளாதே

அடுத்த 8 பாடங்களையும் ஜெபத்தோடு படிக்கும்போது இன்னும் அதிக நற்செய்திகள் விளக்கப்படும்.  சிலவற்றைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சிலவற்றால் திகைப்பீர்கள்; மற்றவைகளால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.  சில குறிப்புகள் ஏற்றுக்கொள்ள கடினமானதாயிருக்கும். எனினும் இந்த கடைசி நாட்களில் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவிதத்தில் வழிநடத்தும்படியாக விசேஷசெய்தியை இயேசு பரலோகத்திலிருந்து அனுப்பியிருப்பதால், இதை கேட்டு முழுமையாக அறிந்துகொண்டு பின்பற்றுவதைக்காட்டிலும் வேறு எதுவும் நமக்கு முக்கியமானதாக இருக்கமுடியாது.

16. பூமியின் இந்த கடைசி நாட்களில், தமது மக்களை வழிநடத்தி அவர்களுக்கு உதவிசெய்யும்படி இயேசு முத்தூதை அனுப்பியிருக்கிறார் என்பதை அறிந்து அவருக்கு நன்றி சொல்வாயா?

பதில்: _____________________________________________________

சிந்தனைக் கேள்விகள்

1. இயேசு வரும்முன்பாக பூமியிலிருக்கும் ஒவ்வொரு நபரும் சந்திக்கப்படுவாரா? இன்று வசிக்கும் கோடிக்கணக்கான மக்களில் இது எவ்வாறு சாத்தியம்?

பதில்:  ஆமாம்! தேவன் வாக்குக்கொடுத்திறக்கிறபடியால் (மாற்கு 16:15) இது நடக்கும். தன்னுடைய நாளில் “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” (கொலோசெயர் 1:23) சுவிசேஷம் சென்றதாக பவுல் கூறுகிறார். தேவனுடைய கிருபையினால் நாற்பது நாட்களுக்குள்ளாகவே யோனா நினிவே பட்டணம் முழுவதையும் சென்றடைந்தான் (யோனா 3:4-10). தேவன் தம்முடைய வேலையை சீக்கிரமாகவே நிறைவேற்றி முடிப்பார் என்று (ரோமர் 9:28) வேதாகமம் சொல்லுகிறது. கவனியுங்கள். அது வெகு விரைவாக நம்முடைய நாட்களில்தானே நடக்கும்.

2. மோசேயும் எலியாவும் மறுரூபமலையில் உண்மையிலேயே இயேசுவிற்குக் காணப்பட்டார்களா? அல்லது அது ஒரு தரிசனமா?

பதில்:  இந்த சம்பவம் நடந்த சம்பவம். “தரிசனம்” என்று வசனம் 9ல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற “ொறாமா” என்கிற கிரேக்க வார்த்தையின் பொருள்: “எதைப் பார்த்தார்களோ” என்பதாகும். மோசே மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் (யூதா 1:9). எலியா பின்னர் மரணத்தைக் காணாது மறுரூபமாக்கப்பட்டான் (2 இராஜாக்கள் 2:1,11,12). பிசாசினுடைய கொடுமைகளினாலும் தேவனுடைய மக்களின் கீழ்ப்படியாமையினாலும் பூமியில் பயங்கரமாக உபத்திரவப்பட்ட இந்த இருவரும், இயேசு எப்படிப்பட்ட வேதனையில் கடந்துவருகிறார் என்பதை புரிந்திருந்தனர். நம்முடைய பாவங்களுக்கான அவருடைய தியாகத்தினால் (எலியாவைப்போன்று) மரணத்தைக் காணாது மறுரூபமடைந்தும், (மோசேளைப்போன்று) கல்லறைகளிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டும் அவருடைய இராஜ்யத்திற்குள் நுழையப்போகிற அனைவரையும் ஞாபகத்தில் கொண்டுவந்து அவரை உற்சாகப்படுத்தும்படியாக அவர்கள் வந்தனர்.

3. யோவான்ஸ்நானகனை எலியா என்று இயேசு குறிப்பிட்டிருக்க (மத்தேயு 11:10-14), தான் எலியா அல்ல (யோவான் 1:19-21) என்று யோவான் ஏன் கூறினான்?

பதில்:  இதற்கான பதில் லூக்கா 1:3-17 ல் இருக்கிறது. யோவானுடைய பிறப்பை அறிவித்த தூதன்: “உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக … அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான் … அவன் … பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்” (வசனம் 13-17) என்று கூறினான். இயேசு யோவானை எலியாவாக குறிப்பிட்டபோது, அவர் அவனுடைய வாழ்க்கையையும், ஆவியையும், வல்லமையையும் எலியாவைப்போன்ற ஊழியத்தையும் குறிப்பிட்டார்.  இதேதான் இந்த கடைசி நாட்களில் எலியாவின் செய்திக்கும் பொருந்தும்.  அழுத்தம் செய்திக்குத்தானே ஒழிய மனிதனுக்கு அல்ல. யோவான் எலியா அல்ல, அவன் எலியாவின் செய்தியைக் கொடுத்தான்.

4. இந்த முத்தூதை சேர்க்காது, கடைசிகாலத்திற்கான இயேசுவின் முழு செய்தியையும் போதிப்பது எவருக்காவது சாத்தியமா?

பதில்:  இல்லை.  முத்தூது சேர்க்கப்படவேண்டும். வெளிப்படுத்தல் புத்தகத்தில் இயேசுகிறிஸ்துதாமே கடைசிகால செய்தியை வெளிப்படுத்தி அல்லது வரையறுத்து, இந்த புத்தகத்தில் தாம் சொல்லியிருக்கிறவைகளை அவருடைய மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்கிறார் (வெளிப்படுத்தல் 1:3; 22:7). எனவே, கடைசிகாலத்தின் உண்மையான போதகர்கள் இயேசுவினுடைய வெளிப்படுத்தல் புத்தகத்திலிருக்கும் செய்தியை கண்டிப்பாக போதிக்கவேண்டும். இது வெளிப்படுத்தல் 14:6-14 வரையிலான அவருடைய விசேஷ முத்தூதையும் அடக்கியிருக்கிறது. இயேசு வசனம் 6 ல் இந்த செய்தியை “நித்திய சுவிசேஷம்” என்று அழைக்கிறதை கவனியுங்கள். தம் மக்களுக்காக தாம் திரும்பி வருமுன்பாக இது பூமியிலிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொண்டுசெல்லப்படவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

மூன்று பவித்திரமான சிந்தனைகள்:

  1. முத்தூதின் செய்தியை சொல்லாத எவரும் இயேசுவின் நித்திய சுவிசேஷத்தைப் போதிக்கவில்லை.
  2. முத்தூதை நிராகரிக்கும்பட்சத்தில் எவரும் தங்களுடைய செய்தியை “நித்திய சுவிசேஷம்” என்று அழைக்கும் உரிமை பெற்றிருக்கவில்லை.
  3. முத்தூது இயேசுவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துகிறது (வெளிப்படுத்தல் 14:12-14). நீங்கள் இயேசுவின் கடைசிகால முத்தூதை கேட்டு, புரிந்து, ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படமுடியாது.

கடைசி காலத்திற்கான விசேஷ செய்தி

நமக்கு என்ன தேவை என்பதை அறிந்திருக்கிற இயேசுவானவர் கடைசி காலத்திற்காக மூன்று விசேஷ செய்திகளை கொடுத்திருக்கிறார். அவைகளை நாம் புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். கடைசி எட்டு பாடங்களும் இந்தச் செய்திகளை உங்களுக்குத் தெளிவாக்கும்.

5. எலியாவின் செய்தி “கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கு” திருப்பும் என்று லூக்கா 1:17 சொல்லுகிறதே! இதன் பொருளென்ன?

பதில்:  “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” – ரோமர் 1:17. தங்களுடைய இரட்சிப்பிற்கு இரட்சகர்மேல் விசுவாசம் வைக்க நீதிமான்கள் ஞானம் பெற்றிருக்கிறார்கள். “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” – அப்போஸ்தலர் 4:12. யோவானுடைய செய்தி இதை அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக்கவேண்டியிருந்தது. இயேசுகிறிஸ்துவைத்தவிர வேறு நபர்மேலோ அல்லது பொருள்மேலோ வைக்கும் விசுவாசம் ஒருபோதும் மக்களை பாவத்திலிருந்து இரட்சித்து புதிய வாழ்க்கைக்கு நடத்தாது. மக்கள் இந்த மிகப் பெரிய சத்தியத்தை கட்டாயம் கேட்டு புரிந்துகொள்ளவேண்டும். இந்த சத்தியம் இன்றைக்குரிய எலியாவின் செய்தியின் முக்கிய குறிப்புகளின் மையமாயிருக்கிறது.

கேள்விகள்

1. வெளிப்படுத்தல் 14ன் முத்தூது: (1)

_____ கேட்கப்படும்படி சத்தமாக அறிவிக்கப்படவேண்டும்.
_____ வேகத்தோடும் வல்லமையோடும் சொல்லுகிற தேவனுடைய கடைசிகால செய்தியை குறிக்கிறது.
_____ யாரோ ஒருவருடைய கற்பனையின் ஒரு பகுதி.


2. வெளிப்படுத்தின புத்தகத்தைக் குறித்த சத்தியம்: (3)

_____ அந்த புத்தகம் முத்தரிக்கப்பட்டது.
_____ “திரைநீக்கம்செய்வது” அல்லது “வெளிப்படுத்துவது” - அதன் பொருள்.
_____ கடைசி நாட்களில் தேவனுடைய மக்கள் என்ன செய்தியை அறிவிப்பார்கள் என்று சொல்லுகிறது.
_____ இயேசுவை வார்த்தைகளைப் படம்பிடித்து காட்டுகிறது.
_____ அதை படிக்கிறவர்கள்மேல் தேவன் சாபத்தை அறிவித்திருக்கிறார்.


3. முத்தூதின் செய்தி இயேசுவின் வருகைக்குமுன் ஒவ்வொரு நபரையும் சென்றடையவேண்டும். (1)

_____ ஆம்.
_____ இல்லை.


4. முதல்தூது முக்கியப்படுத்துபவை: (3)

_____ அது கொடுக்கப்பட்டுவருகிற நித்திய சுவிசேஷம்.
_____ அது புரிந்துகொள்ளப்படமுடியாது.
_____ பரிணாமம் நேர்ந்த கிறிஸ்தவக்கொள்கை.
_____ இப்போது நியாயத்தீர்ப்பு நடந்துகொண்டிருக்கிறது.
_____ நாம் தேவனை மதித்து உண்மையாகவே நம்பவேண்டும்.
_____ ஒவ்வொரு நபரும் தான் விரும்புகிற எதையும் ஆராதிக்கலாம்.


5. இரண்டாம் தூதனின் தூது பாபிலோன் விழுந்தது என்று சொல்லுகிறது. வெளிப்படுத்தல் 18ல் வரும் தூதன் பாபிலோனில் இருக்கிறவர்களை வெளியே வரும்படி அழைக்கிறான். (1)

_____ ஆம்.
_____ இல்லை.


6. மூன்றாம் தூதனின் தூது தேவனுடைய மக்களை மிருகத்தின் முத்திரையை பெற்றுக்கொள்ளும்படி அழைக்கிறது. (1)

_____ ஆம்.
_____ இல்லை.

7. வெளிப்படுத்தல் 14:12 தேவனுடைய மக்களைக் குறித்து எவ்விதம் சொல்லுகிறது? (2)

_____ அவர்கள் பொறுமையானவர்கள்.
_____ அவர்கள் பரிசுத்தவான்கள்.
_____ அவர்கள் தேவனுடைய பத்து கற்பனைகளை நம்பமாட்டார்கள்.
_____ அவர்கள் குறைவான விசுவாசம் கொண்டிருக்கிறார்கள்.


8. சுவிசேஷம் ஒவ்வொரு நபரையும் சென்றடைந்ததும்: (1)

_____ தேசங்கள் அனைத்தும் மனமாறும்.
_____ தேவன் நியுயார்க்கையும் இலண்டனையும் புதுப்பிப்பார்.
_____ இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும்.


9. இன்றைய “நிகழ்கால சத்தியங்கள்”: (1)

_____ நினிவேக்குக் கொடுக்கப்பட்ட யோனாவின் செய்தி.
_____ வெள்ளத்துக்குமுன்பான நோவாவின் செய்தி.
_____ வெளிப்படுத்தல் 14:6-14 வரையிலான முத்தூது.


10. முத்தூதைக்குறித்த உண்மைகள்: (6)

______ இந்த செய்திகள் இப்போது போதிக்கப்படுகின்றன.
_____ இயேசுகிறிஸ்துவினால் மாத்திரமே இரட்சிப்பு என்று அழுத்திக் கூறுகின்றன.
_____ அவைகள் “எலியாவின் செய்திகள்” என்றும் அழைக்கப்படலாம்.
_____ செய்தியை அறிவிக்க எலியாதானே தோன்றுவார்.
_____ பரிணாமக் கொள்கையைக்குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டத்தை இது முக்கியப்படுத்துகிறது.
_____ அநேக மக்கள் இதைக்குறித்து கேள்விப்படவே மாட்டார்கள்.
_____ குடும்ப நபர்களை இது நெருக்கமான அன்பின் உறவிற்குள் கொண்டுவரும்.
_____ இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை இதற்குத் துணை செய்யும்.
_____ இயேசுவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்பட இது மக்களுக்கு உதவும்.


11. யோவான்ஸ்நானகன் அவனுடைய காலத்தின் எலியாவாக என்னப்பட்ட காரணம்: (1)

_____ வானத்திலிருந்து அக்கினியை கொண்டுவர அவன் விரும்பினான்.
_____ பிரதான ஆசாரியன் அந்த பெயரை முன்மொழிந்தான்.
_____ அவனுடைய போதனை எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் இயேசுவின் முதல் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்தினது.


12. “சுவிசேஷம்” என்பதன் பொருள் “நற்செய்தி.” (1)

_____ ஆம்.
_____ இல்லை.



13. இந்த கடைசி நாட்களில் குடும்ப நபர்களை அன்பிலும் ஐக்கியத்திலும் நெருக்கிக் கொண்டுவருவதாக இயேசு வாக்களிக்கிறார். உங்கள் குடும்பத்தில் இந்த அனுபவத்தை கேட்டு நீங்கள் ஜெபிக்கிறீர்களா?

_____ ஆம்..
_____ இல்லை.


14. கடைசிகாலத்தில் தமது மக்களை நடத்திச் செல்ல இயேசு விசேஷ செய்தியை வைத்திருக்கிறார் என்பதில் நீங்கள் நிம்மதியையும் நன்றியையும் உணருகிறீர்களா?

_____ ஆம்.
_____ இல்லை.