மற்றொரு பெண்

வேதபாடங்கள்  22

நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு திருமணமும் இருக்கவேண்டும். அதேபோலத்தான் கிறிஸ்துவுடன் நமக்கு இருக்கிற இணைப்பும்! 

அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் நாம் உண்மையாக இருக்கவேண்டும்.  வெளிப்படுத்தல் புத்தகம் கிறிஸ்துவின் மெய்யான மணவாட்டியைக்குறித்துப் பேசுகிறது.

ஆனால் தேவனுடைய வார்த்தையிலிருந்து கிறிஸ்தவர்களை மயக்கிவிடும்படி வேறொரு பெண்ணும் அங்கே இருக்கிறாள்.  மற்றொரு பெண்ணாகிய பாபிலோனைக் குறித்த அதிர்ச்சி தரும் செய்தி வெளிப்படுத்தலில் இருக்கிறது.  பாபிலோன் விழுந்தது:  சுயநினைவை இழக்கச்செய்யும் அவளுடைய தந்திரத்திலிருந்து கிறிஸ்துவின் மக்கள் தப்பவேண்டும்; அல்லது அழிந்துவிடுவார்கள்! இவ்வாறு முத்தூதின் இரண்டாவது பாகம் துவங்குகிறது.  ஆவிக்குரிய பாபிலோனின் மெய்யான அடையாளத்தை கற்று, அவளுடைய மயக்கும் அழகினால் எவ்விதம் வசீகரிக்கப்படாதிருக்கலாம் என்கிறதை இங்கே நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.  இதைவிடவும் வேறு என்ன முக்கியமானதாக இருக்கக்கூடும்?

1. இயேசு பாபிலேனை வெளிப்படுத்தலில் எவ்விதம் அடையாளப்படுத்துகிறார்?

“திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசி … அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்.”  “அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும்  உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.  அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த  பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.  மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது” – வெளிப்படுத்தல் 17:1-5.

பதில்:  சிவப்பிலும் இரத்தம்பரத்திலும் தன்னை அலங்கரித்த ஒரு வேசியாக இயேசு பாபிலோனை அடையாளங்காட்டுகிறார்.  அவள் இரத்தாம்பர நிறமாயிருக்கிற ஒரு மிருகத்தின்மேல் வீற்றிருக்கிறாள்.  அது ஏழு தலைகளோடும் பத்துகொம்புகளோடும் திரளான தண்ணீர்கள்மேல் இருக்கிறது.

2.வெளிப்படுத்தல் 12ல் வரும் அடையாளமான பரிசுத்தப்பெண் யார்?

பதில்: வெளிப்படுத்தல் 12:1-6வரையிலும் சூரியனை அணிந்திருக்கிற ஒரு தூய்மையான பெண் விவரிக்கப்படுகிறாள்.  தூய்மையான பெண், தான் நேசிக்கிற இயேசுவுக்கு உண்மையாக இருக்கிற தூய்மையான சபையை அடையாளப்படுத்துகிறது என்று பாடம் 20ல் படித்தோம்.  பாடம் 23ல் வெளிப்படுத்தல் 12ம் அதிகாரத்தை ஆழமாகப் படிப்போம்.

3. வேதாகம தீர்க்கதரிசனத்தில் வேசி எதைக் குறிக்கிறது?

“எருசலேமின் அருவருப்புகளை  அதற்கு அறிவித்து” “நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து” – எசேக்கியேல் 16:2,15.

பதில்:  தூய்மையான பெண் இயேசுவுக்கு விசுவாசமாயிருக்கிற தூய்மையான சபையை அடையாளப்படுத்துகிறதுபோல, தூய்மையற்ற பெண் இயேசுவுக்கு விசுவாசமாயிராத, அசுத்தமடைந்த, விழுந்துபோன சபையை எடுத்துக்காட்டுகிறது (யாக்கோபு 4:4).

4. வெளிப்படுத்தல் 17ல் வரும் “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்று அழைக்கப்படுகிற வேசியை  (சபையை) நம்மால் அடையாளம் காணமுடியுமா?

பதில்:  ஆமாம்.  தாய் சபை என்று தன்னை அழைத்துக்கொள்ளுகிற ஒரே ஒரு சபைதான் இருக்கிறதென்றும் அது மாபெரும் ரோமன் கத்தோலிக்க சபைதான் என்றும் எங்கும் அறியப்பட்டிருக்கிறது.  முக்கியத்துவம் வாய்ந்த கத்தோலிக்க  பாதிரி John A. O’Brien என்பவர்:  “கத்தோலிக்கரல்லாத கூட்டம் எதிலிருந்து பிரிந்துசென்றதோ, அந்த தாய்சபையின் நினைவாக ஞாயிறு ஆசரிப்பு இன்னும் இருக்கிறது”1 என்று சொல்லியிருக்கிறார். வெளிப்படுத்தல் 17ல் தாய் பாபிலோனையும் அவள் ஏறியிருக்கும் மிருகத்தையும் விவரிக்கிற குறிப்புகள் போப்புமார்க்கத்திற்கு தெளிவாகப் பொருந்துகின்றன.

அ. அவள் பரிசுத்தவான்களைக் கொலை செய்தாள் (வசனம் 6) (பாடங்கள் 15, 20).

ஆ. அவள் இரத்தாம்பரத்திலும் சிவப்பிலும் உடை உடுத்தியிருந்தாள் (வசனம் 4). போப்புமார்கள் முக்கிய நிகழ்ச்சிகளில் இரத்தாம்பர நிற உடை அணிகிறார்கள்.  கத்தோலிக்க கார்டினல்களின் அங்கி சிவப்பு நிறமானது.

இ. அவள் உட்கார்ந்திருக்கிற மிருகத்தின் ஏழு தலைகளும் (வசனம் 3) ஏழு மலைகளாம் (வசனம் 9). போப்புமார்க்கத்தின் தலைமையகமான ரோம், ஏழு மலைகளின் மேல் கட்டப்பட்டிருக்கிறது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று.

ஈ. மிருகம் தூஷணத்தைக்குறித்த குற்றத்திலிருக்கிறது (வசனம் 3).  இந்த குறிப்பும் போப்புமார்க்கத்திற்கு தெளிவாகப் பொருந்துகிறது. (பாடங்கள் 15, 20).

உ. அவள் “பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்” பண்ணினாள் (வசனம் 18). பதிமூன்றாம் நூற்றாண்டில் போப்பு “கோட்பாட்டிலும் கொள்கையிலும் … இவ்வுலக மற்றும் ஆவிக்குரிய காரியங்களில் முழு உலகத்திற்கும் அதிபராக இருக்கிறார்”2 என்கிறார் அலெக்சாண்டர் ஃபிளிக் என்பவர்.  இந்த குறிப்பு பூமிக்குரிய எந்த இராஜ்யத்திற்கும் அரசாங்கத்திற்கும் பொருந்தாது.  சந்தேகத்திற்கு இடமின்றி போப்புமார்க்கமே வெளிப்படுத்தல் 17ல் விவரிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பு:  சீர்திருத்தவாதிகளில் நேக தலைவர்கள் (“ஸ், விக்ளிஃ, லுத்தர், கேல்வின், சுவிங்ளி, மெலாங்தன், கிரான்மர், டின்டேல், லேட்டிமர், ரிக்ளியும் மற்றவர்களும்) இங்கே சொல்லப்பட்டிருக்கிற வல்லமை போப்புமார்க்கமே என்று போதித்தார்கள்.3

  1. John A. O”Brien, The Faith of Millions (Huntington, IN: Our Sunday Visitor, Inc., 1974), P. 401.
  2. The Rise of the Mediaeval Church (New York: Burt Franklin, 1959), PP. 575, 576.
  3. George Eldon Ladd, The Blessed Hope (Grand Rapids, MI: William B. Eerdman’s Publishing Co., 1956), PP. 32,34.
5. பாபிலோன் என்கிற வார்த்தையின் பொருள் என்ன?  அதன் துவக்கம் எங்கே இருக்கிறது?

“வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி,” “அப்பொழுது கர்த்தர் … நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.”  “பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது;” – ஆதியாகமம் 11:4,6,7,9.

பதில்: “பாபேல்” அல்லது “பாபிலோன்” என்கிற வார்த்தைகள் “குழப்பம்” என்று பொருள் தருகின்றன.  பாபிலோன் என்கிற பெயர் வெள்ளத்திற்குப்பிறகு இணக்கமற்ற புறஜாதிகளால் கட்டப்பட்ட பாபேல் கோபுரத்தில் துவங்கியது.  அவர்கள் இனி ஒருபோதும் வெள்ளம் மூழ்கடிக்காத ஒரு உயரத்தில் அதைக் கட்ட எத்தனித்திருந்தனர் (வசனம் 4).  ஆனால் ஆண்டவர் அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்கினார்.  அதனால் வந்த குழப்பம் மிகப் பெரியதாக இருந்ததினால், கட்டுமானப்பணியை நிறுத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.  பின்னர் அவர்கள் அந்தக் கோபுரத்தை “பாபேல்” (பாபிலோன்) அல்லது “குழப்பம்” என்று அழைத்தனர்.  பின்னர், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் உலகமுழுவதும் பரவியிருந்த ஒரு புறஜாதி சாம்ராஜ்யம் பாபிலோன் என்ற பெயரில் எழும்பியது.  அது தேவனுடைய மக்களான இஸ்ரவேலருக்கு சத்துருவாயிருந்து, கலகத்தையும், கீழ்ப்படியாமையையும், தேவனுடைய மக்களை வாதிப்பதையும், பெருமையையும், விக்கிரகாராதனையையும் உள்ளடக்கியிருந்தது (ஏரேமியா 39:6,7; 50:29, 31-33; 51:24,34,47; தானியேல் 3,5). ஏசாயா 14ல் தேவன் சாத்தனைத் தாமும் பாபிலோன் என்று அடையாளமாகக் குறிப்பிடுகிறார்.  ஏனெனில் பாபிலோன் மிகவும் விரோதிக்கிறதும், தேவனுடைய வேலைக்கும் அவருடைய மக்களுக்கும் அழிவு உண்டாக்குகிறதுமாயிருந்தது.  புதிய ஏற்பாட்டில் தேவனுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலாகிய அவருடைய சபைக்கு சத்துருவாயிருக்கும் மத இராஜ்யத்தை குறிப்பதற்கு பாபிலோன் என்கிற வார்த்தை வெளிப்படுத்தலில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது (வெளிப்படுத்தல் 14:8; 16:19).

6. வெளிப்படுத்தல் 17:5ல் விவரிக்கப்பட்டிருக்கிற தாய் பாபிலோனுடைய வேசி குமாரத்திகள் யார்?

பதில்:  மாபெரும் புரொட்டஸ்டண்டு சீர்திருத்தத்தில் சில சபைகள் தாய் பாபிலோனுடைய பொய் போதனைகளை எதிர்த்து அவளைவிட்டு வெளியேறின.  ஆனால் பின்னர் தாயினுடைய செயல்களுக்கும் கொள்கைகளுக்கும் ஒப்பாக நடக்கத் துவங்கினர்.  இவ்விதம் அவர்களும் விழுந்தனர்.  எந்த பெண்ணும் வேசியாகப் பிறப்பதில்லை.  எந்த புரொட்டஸ்டண்டு சபையும் விழுந்துபோன சபையாக துவங்கவில்லை.  ஆனால் எந்த சபை பாபிலோனின் பொய்க்கோட்பாடுகளையும் பழக்கங்களையும் போதித்து பின்பற்றுகிறதோ, அது விழுந்துபோன சபையாக அல்லது மகளாக ஆகமுடியும்.  எனவே பாபிலோன் என்பது ஒரு குடும்பப் பெயர்.  அதில் தாய் சபையும், விழுந்துபோன குமாரத்திகளான மகள் சபைகளும் இருக்கின்றன.

7. வெளிப்படுத்தல் 17ல் ஏன் தாய் பாபிலோன் ஒரு மிருகத்தின்மேல் ஏறி வருவதாக காட்டப்பட்டுள்ளது? மிருகம் எதைக் குறிக்கிறது?

பதில்:  இயேசு போப்புமார்க்கத்தை, சபையும் அரசாங்கமும் இணைந்த ஒன்று என்று வெளிப்படுத்தல் 13:1-70ல் விவரிக்கிறார்.  (அதிக விளக்கத்திற்கு பாடம் 20ஜ பார்க்கவும்)

சபையும் அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாயிருப்பினும், வெளிப்படுத்தல் 17ல் அவைகளை வெவ்வேறு நிறுவனங்களாக இயேசு சித்தரிக்கிறார்.  இந்த பெண் மிருகத்தின்மேல் ஏறியிருக்கிறாள்.  அது, சபை அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிறதை அடையாளப்படுத்துகிறது.

8. முடிவுகால சம்பவங்களை நிறைவேற்ற வேறு என்ன வல்லமைகள் போப்புமார்க்கத்தோடு இணைகின்றன?

 “அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.  அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது” – வெளிப்படுத்தல் 16:13,14.

பதில்:  வெளிப்படுத்தல் 12:3,4 ன் வலுசர்ப்பமும், வெளிப்படுத்தல் 13:11-14;  19:20-ன் கள்ளத்தீர்க்கதரிசியும், வெளிப்படுத்தல் 13:1-8 ன் மிருகத்துடன் அல்லது போப்புமார்க்கத்துடன் ஒரு கூட்டணியை உண்டாக்குகின்றன.

அ. வெளிப்படுத்தல் 12 ல் வரும் வலுசர்ப்பம், அஞ்ஞான ரோமின் வழியாக வேலை செய்கிற சாத்தானாக எடுத்துக்காட்டப் பட்டிருக்கிறது.  (பாடம் 20). இந்த கடைசி நாட்களில் அது புத்தமதம், சின்டோயிசம், இந்து மதம், புதுயுக இயக்கம், லௌகீக மனிதநல கோட்பாடுகள் போன்ற கிறிஸ்தவமல்லாத அமைப்புகளையும் உள்ளடக்குகிறது.

ஆ. மிருகத்தை வணங்கவேண்டுமென்று உலகமுழுவதையும் நிர்பந்தித்து தாக்கப்போகிற, அமெரிக்காவில் மையங் கொண்டிருக்கிற மருளவிழுந்த புரொட்டஸ்டண்டுகளை கள்ளத்தீர்க்கதரிசி எடுத்துக்காட்டுகிறது (பாடம் 21).

இ. மிருகம் போப்புமார்க்கமே (பாடம் 20).

ஈ. தேவனுக்கும், அவருடைய பிரமாணத்திற்கும், அவரை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களுக்கும் எதிரான கடைசி யுத்தமான அர்மகெதோனில், கிறிஸ்தவமல்லாத மதங்களும் அரசாங்கங்களும், ரோமன் கத்தோலிக்கமும் மருளவிழுந்த புரொட்டஸ்டண்டு மார்க்கமும் ஒன்றிணையும்.  இந்த இணைப்பு வெளிப்படுத்தல் 18:2ல் “மகா பாபிலோன்” என்று இயேசுவால் அழைக்கப்படுகிறது.

9. எவ்விதம் மிகவும் வேறுபட்ட அமைப்புகள் ஒன்றிணையும்?

“இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்”-வெளிப்படுத்தல் 17:13.

பதில்:  “தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள்,” தங்கள் அற்புதங்களால் அவர்களை இணைக்கும் என்று வெளிப்படுத்தல் 16:13,14 சொல்லுகிறது.  மரித்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள் எனவும், உயிரோடிருக்கிறவர்களோடு அவர்களால் தொடர்புகொள்ளமுடியும் எனவும் நம்பியிருக்கிற ஆவிமார்க்கம், அனைவரையும் ஒன்றுபடுத்தும் கருவியாக இருக்கும்.  மரித்த அன்பானவர்கள், முற்கால தீர்க்கதரிசிகள், பரலோகத் தூதர்கள் (2 கொரிந்தியர் 11:13,14), மற்றும் கிறிஸ்துவுமாகவே (மத்தேயு 24:24) தோற்றமளிக்கிற சாத்தானும் அவனுடைய தூதர்களும் தங்களுடைய இயக்கம் பரலோகத்திலிருந்து உண்டானதென்று உலகத்தை நம்பவைப்பார்கள் (பாடம்10).  இன்று மூன்று அமைப்புகளுமே மரித்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்று நம்புகின்றன.

அ. கத்தோலிக்கமார்க்கம் மரியாளிடமும், மரித்த மற்ற பரிசுத்தவான்களிடமும் ஜெபித்து, அவர்களை பின்பற்றுகிறவர்களை இந்த பரிசுத்தவான்கள் அற்புதங்கள் செய்து ஆசீர்வதிப்பார்களென்று நம்புகிறது.

ஆ. கிறிஸ்தவமல்லாத மதங்களுங்கூட கிட்டதட்ட மரித்தவர்களைக்குறித்த இந்த நம்பிக்கையிலும் அவர்களைத் தொழுவதிலும் அஸ்திபாரப்பட்டிருக்கிறது.  புதுயுக இயக்கம் மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுவதை அழுத்திக் கூறுகிறது.

இ. மரித்தவர்கள் மரிக்கவில்லையெனவும், அவர்கள் பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ உயிரோடிருக்கிறார்கள் எனவும் மருள விழுந்த புரொட்டஸ்டண்டு மார்க்கமும் நம்புகிறது.  இவ்விதம் மரித்தவர்களாக தங்களைக் காண்பிக்கும் பிசாசுகளால் வஞ்சிக்கப்பட அவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் இருக்கிறது.

10. என்ன பாவங்களுக்காக தேவன் பாபிலோன்மேல் குற்றப்பதிவு செய்கிறார்?

அ. “மகா பாபிலோன் விழுந்தது” –வெளிப்படுத்தல் 18:2.

பதில்:  விழுதல் என்றால், வேதாகம சத்தியத்திலிருந்தும், மெய்யான ஆராதனையிலிருந்தும், மெய்யான தேவனை மெய்யாக ஆராதிப்பதிலிருந்தும் விலகிச்செல்வதே (2 பேதுரு 3:17).

ஆ. “அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று;” “உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே” – வெளிப்படுத்தல் 18:2,23.

பதில்:  இங்கே தேவன் பாபிலோனை 1. ஆவிமார்க்கத்தின் வழியாக தீய ஆவிகளை தனக்கு நடுவில் வரவேற்று, பிசாசுகளோடு தனிப்பட்ட விதத்தில் ஆலோசனை பண்ணினதாலும், 2. பொய் சொல்லுகிற பிசாசின் ஆவிகளினால் ஏறக்குறைய முழு உலகத்தையும் வஞ்சித்ததாலும் தண்டிக்கிறார்.

இ. “அவளுயை வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்” – வெளிப்படுத்தல் 17:2,4; 18:3.

பதில்:  அருவருப்பு என்கிற வார்த்தை வேதாகமத்தில் பொய்யை அடையாளம் காட்டுகிறது (நீதிமொழிகள் 12:22).  பொய்போதகங்களைக் கொண்டிருக்கிற பாபிலோனின் மது, அதைக் குடிக்கிறவர்களை குழப்பி உணர்வற்றவர்களாக்கி, ஆவிக்குரிய குடிகாரராக்குகிறது.

ஈ. “பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்” – வெளிப்படுத்தல் 18:3.

பதில்:  சபை கிறிஸ்துவின் மணவாட்டி (வெளிப்படுத்தல் 19:7.8).  எனவே அது அவரை நேசித்து அவருக்கு மாத்திரமே உண்மையாக இருக்கவேண்டும்.  தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே தம்மை நேசித்து தமக்குக் கீழ்ப்படிவதென்று இயேசு கூறுகிறார் (யோவான் 14:15).  தனது கணவனான இயேசுவை விட்டுச்சென்றதற்காகவும் (யாக்கோபு 4:4), தன்னுடைய ஆதரவிற்காக அரசாங்கத்தோடு தவறான உறவு ஏற்படுத்தினதாலும் (சபையையும் அரசாங்கத்தையும் இணைத்ததில்) போப்புமார்க்கம் இங்கே கடிந்துகொள்ளப்படுகிறது.

உ. “மனுஷருடைய ஆத்துமாக்களைக்” கொண்டு வியாபாரம் செய்ததினால் (வெளிப்படுத்தல் 18:11-13).

பதில்:  மக்களை, தேவனுடைய விலையேறப்பெற்ற பிள்ளைகளாகக் காண்பதை விடுத்து வியாபாரப் பொருளாக நடத்தினதால் தேவன் இங்கே பாபிலோனை கண்டிக்கிறார்.

11. மக்களுக்கு ஆவிக்குரிய போதையேற்றி குழப்பின பாபிலோனின் மதுவிலிருக்கும் சில பொய் போதனைகள் யாவை?

பதில்:  ஆச்சரியப்படும்விதமாக இன்றைக்கு மிகவும் முன்னணியிலிருக்கும் அநேக புரொட்டஸ்டண்டு போதனைகள் வேதாகமத்தில் இல்லவே இல்லை.  இவைகள் தாய்சபையாகிய கத்தோலிக்கத்திலிருந்து புரொட்டஸ்டண்டு சபைகளுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.  தாய்சபை அவைகளை அஞ்ஞான மார்க்கத்திலிருந்து பெற்றிருந்தது.  அவைகளுள் சில:

அ. தேவனுடைய பிரமாணம் மாற்றப்பட்டிருக்கிறது அல்லது நீக்கப்பட்டிருக்கிறது. 

தேவனுடைய பிரமாணம் ஒருபோதும் மாற்றப்படவோ அல்லது நீக்கப்படவோ முடியாது (லூக்கா 16:17).  மறுக்கமுடியாத சான்றுகளை பாடம் 6 சுட்டிக்காண்பிக்கிறது.

ஆ. ஆத்துமா அழியாதது.

“ஆத்துமா” அல்லது “ஆவி” என்பதை வேதாகமம் 1,700 முறைகள் குறிப்பிடுகின்றது. எனினும் ஒருமுறைகூட அது அழியாதது என்று கூறவில்லை.  மக்கள் அழியக்கூடியவர்கள்; (யோபு 4:17)  இயேசுவின் இரண்டாம் வருகைவரையிலும் ஒருவரும் அழியாமையை தரித்துக்கொள்ளப்போவதில்லை.(1 கொரிந்தியர் 15:51-54) (பாடம் 10).

இ. பாவிகள் நரகத்தில் நித்தியமாக எரிவார்கள்.

பாவிகளுடைய ஆத்துமா, சரீரம் முழுமையும் அக்கினியினால் முழுமையாக அழிக்கப்படும் (இல்லாமற்போகும்) என்று வேதாகமம் போதிக்கிறது (மத்தேயு 10:28).  நரகத்தில் நித்திய உபத்திரவம் என்பது வேதாகமத்தால் போதிக்கப்படவில்லை (பாடம் 11).

ஈ. முழுக்கு ஞானஸ்நானம் அவசியமில்லை.

முழுக்கு ஞானஸ்நானம் மாத்திரமே வேதாகமம் அங்கீகரிக்கிற ஒரே ஞானஸ்நானம் (பாடம் 9).

உ. ஞாயிற்றுக்கிழமை தேவனுடைய பரிசுத்தநாள்.

ஏழாம்நாள் ஓய்வுநாளான சனிக்கிழமையே தேவனுடைய பரிசுத்தநாள் என்று எவ்வித கேள்வியுமின்றி வேதாகமம் போதிக்கிறது (பாடம்7).

குறிப்பு:  இந்த பொய்போதனைகளை நம்பும்போது, அவை “குழப்பத்திற்கே” நம்மை நடத்தி, (பாபிலோன்” என்கிற வார்த்தையின் பொருள் இதுவே) வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்வதை மிக அதிக கடினமாக்கிவிடுகிறது.

ஒரு பவித்திரமான சிந்தனை

சிலர் அறியாமலே பாபிலோனின் மதுவை குடித்துக்கொண்டிருக்கலாம் என்பதை நினைக்கும்போது பயமாக இருக்கிறது.  ஒருவேளை இவை அனைத்தும் உங்களுக்கு புதிதாக இருக்கலாம்.  அப்படியானால் உங்களை நடத்தும்படி தேவனிடம் கேளுங்கள். (மத்தேயு 7:7,8) பின்னர் இவைகள் உண்மைதானா என்று வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் (அப்போஸ்தலர் 17:11).  இயேசு எங்கு நடத்தினாலும் அவரைப் பின்செல்லுவதாக வாக்குக்கொடுங்கள்.  அவர் உங்களை தவறில் முடிவடைய விமாட்டார் (யோவான் 7:17).

12.அர்மகெதோன் யுத்தத்தில் யார் ஆண்டவர் பக்கம் இருப்பார்கள்?

பதில்:  இந்த கடைசி யுத்தத்தில் பரலோக தூதர்களும் (எபிரெயர் 1:13,14; மத்தேயு 13:41,42), மீதமான தேவனுடைய மக்களும் (வெளிப்படுத்தல் 12:17),

சாத்தானுக்கும் அவனுடைய ஆதரவாளருக்கும் எதிராக பரலோகத்தின் சேனைகளை நடத்திச் செல்லுகிற (வெளிப்படுத்தல் 19:11-16) இயேசுவோடு இணைந்திருப்பார்கள்.  பாபிலோனின் பொய்போதனைகளை மறுக்கிறவர்கள் தேவனுடைய மீதமானவர்களாக இருப்பார்கள். (பாடம் 23). அவர்கள், (1) இயேசுவின்மேலிருக்கிற அன்பிற்காக (1யோவான் 5:2,3), (2) இயேசுவிற்கு உண்மையாக இருந்து அவர்மேல் விசுவாசமாயிருப்பதற்காக (வெளிப்படுத்தல் 14:12) மற்றும் (3) அவருடைய வார்த்தைக்கும் கற்பனைகளுக்கும் உறுதியாக கீழ்ப்படிவதற்காக (வெளிப்படுத்தல் 12:17; யோவான் 8:31,32) அறியப்பட்டிருப்பார்கள்.

13. தேவனுடைய சத்தியத்திற்கும் சாத்தானுடைய பொய்களுக்கும் இடையே இருக்கிற இந்த முடிவு யுத்தத்தில் சாத்தானுடைய தந்திரம் என்னவாயிருக்கும்?

பதில்:  சாத்தான் தேவனையும் அவருடைய குமாரனையும் வெறுத்தபோதிலும், அதை வெளிப்படையாக அபூர்வமாகவே ஒப்புக்கொள்கிறான்.  உண்மையில் அவனும் அவனுடைய பிசாசுகளும் பரிசுத்த தூதர்களைப்போலவும், பயபக்தியான கிறிஸ்தவ தலைவர்களைப்போலவும் காட்சியளிப்பார்கள் (2 கொரிந்தியர் 11:13-15). தனக்குச் சான்றாக அவன் கொடுப்பவைகள், நீதியானதும், ஆவிக்குரியதும், ஏறக்குறைய பூமியிலிருக்கிற ஒவ்வொருவரும் வஞ்சிக்கப்பட்டு அவனைப் பின்பற்றுவதற்கேதுவாக இயேசுவைப்போன்றதாயும் இருக்கும். (மத்தேயு 24:24).  இயேசுவை வனாந்தரத்தில் சோதித்தபோது உபயோகித்ததைப்போன்று வேதவசனங்களை அவன் சந்தேகத்திற்கிடமின்றி உபயோகிப்பான் (மத்தேயு 4:1-11). சாத்தானுடைய விளக்கங்கள், பரலோகத் தூதர்களில் மூன்றில் ஒரு பங்கையும், ஆதாம் ஏவாளையும், ஜலப்பிரளயத்தின் காலத்தில் எட்டுபேரைத்தவிர பூமியிலிருந்த ஒவ்வொருவரையும் வஞ்சித்ததைப்போன்று வசீகரிக்கக்கூடியதாக இருக்கும்.

14. தேவனுடைய எதிர்நடவடிக்கை என்ன?

 “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” – ஏசாயா 8:20.

பதில்:  தேவன் சாத்தானுடைய பொய்களோடு வேதாகம சத்தியங்களைக்கொண்டே எப்போதும் வாதிடுகிறார்.  வனாந்தரத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, இயேசு மீண்டும் மீண்டும் வேதவாக்கியங்களைச் சுட்டிக்காட்டினார் (மத்தேயு 4:1-11). தமது மீதமான மக்கள்வழியாக வேதாகமத்திற்குப் புறம்பான மகா பாபிலோனைக் குறித்த உண்மைகளை தேவன் கூறுவார்.  கோடிக்கணக்கானோர் வஞ்சிக்கப்பட்டு இரட்சிப்பை இழந்துபோவதற்கேதுவாக வாசலை விரிவாகத்திறந்திருக்கிற பொய் சுவிசேஷங்களை (கலாத்தியர் 1:1-12) பாபிலோன் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர் தெளிவாக்குவார்.  நாம் படித்துக்கொண்டிருக்கிற 27 பாடங்களில், வெளிப்படுத்தல் 14:6-14 ன் முத்தூதைக்குறித்த 9 பாட வரிசையிலிருந்து தேவனுயை எதிர்  இயக்கத்தை நாம் படித்துக்கொண்டிருக்கிறோம்.  இந்த மூன்று அற்புதமான செய்திகளும் சாத்தானுடைய பொய்களையும் போலிகளையும் வெளிக்கொண்டுவந்து, அவைகளுக்கெதிராக எச்சரித்து, ஆவியோடு மாத்திரமல்ல வேதாகம உண்மையோடும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரை தொழுதுகொள்ள மக்களை அழைக்கிறது.

15. தேவனுடைய கடைசிகால எச்சரிப்பு மற்றும் நம்பிக்கையின் செய்திகள் வல்லமையானவையாக இருக்குமா?

“இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று” – வெளிப்படுத்தல் 18:1

பதில்:  வேதவாக்கியங்களில் தூதர்கள் தூதுவர்களை அல்லது தூதுகளை எடுத்துக்காட்டுகின்றனர் (எபிரெயர் 1:13,14). தேவனுடைய முடிவுகால முறையீடு, தேவனுடைய சத்தியத்தினாலும் மகிமையினாலும் பூமிமுழுவதையும் பிரகாசிக்கச் செய்த வல்லமைகொண்ட தூதனால் அடையாளப்படுத்தப்படுகிறது.  தேவன் கொடுக்கும் இந்த முடிவான செய்தி முழு உலகத்திற்கும் சென்று சேரும் (வெளிப்படுத்தல் 14:6; மாற்கு 16:15; மத்தேயு 24:14).

16. பாபிலோனில் இருக்கிறவர்களுக்கு என்ன முடிவான அவசரமான அழைப்பை இயேசு கொடுப்பார்?

பதில்:  அவர்:  “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.  அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்” (வெளிப்படுத்தல் 18:4,5) என்று கூறுவார்.

பாபிலோனில் இருக்கும்  அநேக மக்களை இயேசு “என் மக்களே” என்று குறிப்பிடுவதை தயவாக கவனியுங்கள்.  இந்த அவசரமான எச்சரிப்பின் செய்தியை இதுவரை கேட்டிராத இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாபிலோனில் இருக்கிறார்கள்.  இந்த மக்கள் தேவனை மிக அதிகமாக நேசிக்கிறார்கள்.  இயேசு இவர்களை தனது மக்களென்று குறிப்பிடுகிறார்.

17. வெளியே வரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு பாபிலோனில் இருக்கும் இயேசுவின் மக்கள் எவ்விதம் பதில் கொடுப்பார்கள்?

பதில்:  இயேசுதாமே பதில் கொடுக்கிறார்.  அவர்: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.”  “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:16,27) என்கிறார்.

பாபிலோனிலிருக்கும் தமது பிள்ளைகளை இயேசு அடையாளம் காண்கிறார். மேலும் அது அழிக்கப்படுமுன்பாக அவர்களை அதிலிருந்து வெளியே அழைப்பதாக வாக்குக்கொடுக்கிறார்.  இவை எல்லாவற்றைக் காட்டிலும் மிக மகிமையுள்ளதாக, பாபிலோனில் இருக்கும் தம்முடைய மக்கள் தம்முடைய சத்தத்தைக் கேட்டு பத்திரமாக வெளியே வருவார்களென்றும் அவர் வாக்களிக்கிறார்.

குறிப்பு: வெளிப்படுத்தல் 14:6-14 வரை வரும் முத்தூதின் செய்தியைக் குறித்த 9 பாடங்களில் இது ஏழாவது பாடம்.  நமது அடுத்த பாடம், நீங்கள் புரிந்துகொள்ளுவதில் தவறிவிடாதபடி தேவனுடைய கடைசிகால சபையை விவரிக்கும்.

18. நீங்கள் பாபிலோனில் இருப்பீர்களானால் அவளைவிட்டு வெளியே வரும்படியான இயேசுவின் அவசரமான அழைப்பிற்கு பதிலளிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா?

பதில்: _____________________________

சிந்தனைக் கேள்விகள்

1. அவளைவிட்டு வெளியே வருவதற்குபதிலாக பாபிலோனிலேயே தங்கியிருந்து அவளைத் திருத்த நான் முயற்சிக்கக்கூடாதா?

பதில்:  இல்லை.  பாபிலோன் திருத்தப்படாது; மாறாக அழிக்கப்படும் என்று இயேசு கூறுகிறார். நம்பிக்கையற்றவிதமாக அவள் தனது மதுவை (பொய்ப்போதனைகளாக வெளிப்படுத்தல் 18:2-6 ல் அடையாளங்காட்டப்பட்டிருக்கிறதை) குடிப்பாள்.  இந்த காரணத்திற்காகவே அவர் தமது மக்களை வெளியே அழைக்கிறார் (வெளிப்படுத்தல் 18:4).

2. வெளிப்படுத்தல் 16:12ன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து வரும் இராஜாக்கள் யார்?

பதில்:  சூரியன் உதிக்குந்திசையிலிருந்து வரும் இராஜாக்கள் பரலோகத்தின் இராஜாக்கள் (பிதாவும் குமாரனும்). பரலோகவாசிகள் கிழக்கிலிருந்து பூமியை நெருங்குவதால், அவர்கள் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து வரும் இராஜாக்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

கீழ்வருவனவற்றை கவனியுங்கள்.

  • இயேசுவின் இரண்டாம் வரகை கிழக்கிலே இருக்கும் (மத்தேயு 24:27).
  • தேவனுடைய மகிமை கிழக்கேயிருந்து வருகிறது (எசேக்கியேல் 43:2).
  • வெளிப்படுத்தலில் வரும் முத்திரிக்கும் தூதன் கிழக்கிலிருந்து வருகிறான் (வெளிப்படுத்தல் 7:2).
  • கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிற சூரியன் கிழக்கே உதிக்கிறது (மல்கியா 4:2).
3. பாபிலோனின் விழுகையைக் குறித்த எச்சரிப்பு பாபிலோன் எப்போதுமே விழுந்ததாக இல்லை என்று காட்டவில்லையா?

பதில்:  ஆமாம், அப்படிக் காட்டுகிறது.  பாபிலோனைக் குறிக்கிற அநேக சபைகள் கடந்த காலத்தில் கிறிஸ்துவிற்கு உண்மையாகவும் உறுதியாகவும் நின்றிருக்கின்றன.  அதை ஸ்தாபித்தவர்கள் தேவனுடைய முதன்மையான மனிதர்களாக இருந்தார்கள்.  அவர்கள் வேதாகமத்தின் சத்தியங்கள் அனைத்தையும் கண்டுபிடிக்கும்படி அதை ஜாக்கிரதையாக தேடியிருந்தார்கள்.  அனைத்து சபைகளும் இன்றைக்கு விழுந்துபோனவை அல்ல.  எனினும் தாய் பாபிலோனின் பொய் போதகங்களை போதித்து அவளுடைய பழக்கங்களைப் பின்பற்றுகிற எந்த சபையும் விழுந்துபோன அவளுடைய குமாரத்திகளில் ஒன்றாக இருக்கிறது.

4. பாபிலோனைவிட்டு வெளியே வரும்படி அழைக்கப்படும்போது ஒரு கிறிஸ்தவன் எங்கே போகவேண்டும்?

பதில்:  தேவனுடைய கற்பனைகளைக் பெற்றிருந்து, இயேசுவின் விசுவாசத்தைக் கொண்டிருந்து, முத்தூதின் செய்திகளை உலகமுழுவதும் போதிக்கிற தேவனுடைய மக்களை கண்டுபிடித்து அவர்களோடு சேரவேண்டும் (வெளிப்படுத்தல் 14:6-12).  கடைசி நாட்களிலிருக்கும் தேவனுடைய சபையை பாடம் 23 முழுமையாக விவரிக்கும்.

5. வெளிப்படுத்தல் 17:12-16வரை வரும் பத்து இராஜாக்கள் யாரை எடுத்துக்காட்டுகிறார்கள்?

பதில்:  பத்து இராஜாக்களும் உலக தேசங்களை அடையாளப்படுத்துகிறார்கள்.  தானியேல் 2 ல் வரும் சிலையின் பத்து விரல்களும், தானியேல் 7 ல் வரும் கொடிய மிருகத்தின் பத்து கொம்புகளும் ஐரோப்பாவின் பத்து இராஜ்யங்களை அடையாளப்படுத்தின.  எனினும் “பூமியின் அனைத்து இராஜாக்களையும்” அல்லது “அனைத்து தேசங்களையும்” குறிப்பிடும்படி வெளிப்படுத்தல் 11-18 வரை அது விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது (வெளிப்படுத்தல் 16:14, 18:3 ஐ பார்க்கவும்).

6. வெளிப்படுத்தல் 16:13,14ல் வரும் “தவளைகள்” எதை அடையாளப்படுத்துகின்றன?

தில்:  தவளை தன்னுடைய இரையை தன் நாவினால் பிடிக்கிறது.  அது இன்று உலகம் முழுவதையும் அடித்துக்கொண்டு செல்லுகிற நாவின் போலி வரங்களை அடையாளப்படுத்தலாம்.  அந்நிய பாஷை வரங்கள் உட்பட அற்புதங்கள் அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையையே நிரூபிக்கின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள்.  இந்த வல்லமை தேவனிடமிருந்து வரலாம் அல்லது சாத்தானிடமிருந்து வரலாம் என்று வேதாகமம் அறிவிக்கிறது. மேலும் சாத்தான் பரலோகத்திலிருந்து வரும் ஒளியின் தூதனாக தன்னைக் காண்பித்து (2 காரிந்தியர் 11:13-15), ஏறக்குறைய முழு உலகமும் வஞ்சிக்கப்பட்டு தன்னைப் பின்பற்றுவதற்கேதுவாக இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை வல்லமையாக உபயோகிப்பான் என்று வேதாகமம் விளக்குகிறது (வெளிப்படுத்தல் 13:3).  இப்போதைக்கு, சபைகளையும் அனைத்து மதங்களையும்-அஞ்ஞான மதங்களையும் ஆவிகளை ஆராதிப்பவர்களையுங்கூட – ஒன்றிணைப்பதற்காக போலியான அந்நிய பாஷை வரத்தை உபயோகிக்கிறான்.  இவர்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையின் வரத்தை அதிகாரத்தின் சான்றாக உணருகிறார்கள்.

நாம் ஆவிகளை சோதிக்கவேண்டும்

நாம் ஆவிகளை சோதித்துப்பார்க்கவேண்டும் என்று (1 யோவான் 4:1) வேதாகமம் எச்சரிக்கிறது.  அவைகள் வேதாகமத்தோடு இணைந்து போகாதபட்சத்தில் போலிகளே (ஏசாயா 8:19,20). மேலும் அறிந்தே தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருக்கிற ஒருவருக்கு பரிசுத்த ஆவியானவரின் உண்மையான வரங்கள் கொடுக்கப்படமாட்டாது (அப்போஸ்தலர் 5:32).  அந்நிய பாஷையின் வரம் என்கிற மெய்யான வரம் இருக்கிறது.  பேசுகிறவர் இதற்குமுன் கற்றிராத அல்லது அறிந்திராத ஒரு மொழியை தடங்கலின்றி பேச ஆச்சரியப்படும் விதத்தில் மனிதனைத் தகுதிப்படுத்துகிற ஒரு வரமே அது (அப்போஸ்தலர் 2:4-12).  வேறுமொழி பேசுகிறவர்களுக்கு தம்முடைய கடைசிகால செய்தியை கொடுக்க தேவைப்படும் நேரத்தில் தேவன் இந்த வரத்தை உபயோகிக்கிறார்.  இது பெந்தெகொஸ்தேயில் அவசியப்பட்டது.  ஏனெனில் அங்கே பதினேழு வெவ்வெறு பாஷை பேசிய கூட்டம் இருந்தது.  சீடர்கள் ஒருவேளை ஒரு மொழியை மாத்திரமே அறிந்திருக்கவேண்டும்.

7. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான முடிவான கடைசிகால போராட்டத்தில் புதுயுக இயக்கம் முக்கிய பங்கு வகிக்குமா?

பதில்:  சந்தேகமின்றி! அது அமானுஷ்யத்துடனும் (Occult), மனம்சார்ந்த சக்திகள் கொண்டவர்களுடனும் (Psychic) மற்றும் ஆவிமார்க்கத்தோடும் ஆர்வமாக ஈடுபட்டிருக்கிறது.  பூமியின் கடைசி சம்பவங்களில் ஆவிமார்க்கம் நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும்.  போலி அந்நிய பாஷை வரத்தின் இயற்கைக்கு அப்பாலான வல்லமையோடும், முடிவுகால உலகளாவிய சபை கூட்டணியோடும் இணைந்து இந்த ஆவிமார்க்கம் முழு உலகத்தையும் அடித்துச் செல்லும்.  ஆவிகளோடு தொடர்புகொள்ளுவதையும் பிறவிகள் எடுப்பதையுங்குறித்த இந்த புதுயுக இயக்கத்தின் நம்பிக்கைகள், முற்கால புறஜாதி மார்க்கத்தின் புதிய ஆடையே.  ஆத்துமா அழியாதது என்றும், பூமியிலிருக்கிற மக்களோடு அதனால் தொடர்புகொள்ளமுடியும் என்றும் அது கொண்டிருக்கும் நம்பிக்கை, சாத்தான் ஏதேனில் ஏவாளிடம் சொன்ன “நீங்கள் சாகவே சாவதில்லை” (ஆதியாகமம் 3:4) என்ற பழைய பொய்யே. (பாடம் 10).

8. தானியேல் 7லும் வெளிப்படுத்தல் 13,17,18ம் அதிகாரங்களிலும் அந்திகிறிஸ்துவின் செய்கைகளை தேவன் வெளிப்படுத்தியிருக்கிறது தெளிவாக இருக்கிறது.  வேதாகமத்தில் வேறு எங்காவது அந்திகிறிஸ்து குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

பதில்:  ஆம்.  குறிப்பிடப்பட்டிருக்கிறது.  வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களில் 9 இடங்களில் அந்திகிறிஸ்துவின் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  தானியேல் 7,8,9,11; வெளிப்படுத்தல் 12,13,16,17,18 மற்றும் 19 ம் அதிகாரங்களின் வெவ்வேறு இடங்களில் தேவன் ஒரே வல்லமைளை 9 முறை அழுத்திக் கூறியிருக்கும்போது, நாம் அதை கவனிக்கவேண்டும் என்று நிச்சயமாகவே விரும்புகிறார்.

9. பாபிலோன் என்று அழைக்கப்படுகிற சாத்தானின் இராஜ்யம் பாபேல் கோபுரத்தில் துவங்கியதா?

பதில்:  இல்லை.  சாத்தான் பரலோகத்தில் தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணினபோது துவங்கியது. உண்மையில் ஏசாயா தீர்க்கதரிசி அவன் பரலோகத்திலிருந்து விழுந்ததை பாபிலோனின் இராஜாவாக (ஏசாயா 14:4,  12-15) அடையாளப்படுத்துகிறான்.  பாவத்தின் துவக்கத்திலிருந்தே தேவன் சாத்தானின் இராஜ்யத்தை பாபிலோனாக பார்த்திருக்கிறார்.  சாத்தானுடைய ஆனையுடனான நோக்கமெல்லாம், தேவனை வெற்றிகொண்டு அவருடைய இராஜ்யத்தை அழித்து தன்னுடைய சொந்த பாபிலோனின் கலக இராஜ்யத்தை பிரபஞ்சம் முழுவதிலும் ஸ்தாபிப்பதே. இரண்டு பக்கங்களே இருக்கிறதாக (மத்தேயு 7:13,14) இயேசு கூறினார்.  பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் முடிவாக இயேசுவின் பக்கமோ அல்லது பாபிலோனின் பக்கமோ தன்னை வைத்துக்கொள்ளும்.  இது வாழ்வா சாவா என்கிறதைப் பற்றியது.  இயேசுவை சேவித்து அவருக்கு ஆதரவாயிருப்பவர்கள் அவருடைய பரலோக இராஜ்யத்தில் இராட்சிக்கப்படுவார்கள்.  பாபிலோனுக்கு ஆதரவளிப்பவர்கள் அக்கினியினால் அழிக்கப்படுவார்கள்.  தீர்மானம் எடுப்பதற்கு கொஞ்சகாலமே இருக்கிறது.  இதினிமித்தமே பாபிலோனுக்கெதிரான முடிவுகால எச்சரிப்புகளுக்குச் செவிகொடுப்பது மிக அதிக முக்கியமும் அவசரமுமான ஒன்றாக இருக்கிறது.

10. சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி ஜபிராத்து நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று என்று வெளிப்படுத்தல் 16:12ல் சொல்லப்பட்டிருப்பதன் பொருளென்ன?

பதில்:  மேதியர்களின் தளபதி தரியுவினால் முற்கால பாபிலோன் பிடிக்கப்படுவதற்கு முன்பாக, நகரத்தின் சுவர்களுக்குக் கீழே சென்ற ஜபிராத்து நதியின் தண்ணீர்கள் மனிதன் உண்டாக்கின ஒரு ஏரிக்கு திருப்பிவிடப்பட்டது.  இப்படி திருப்பிவிடப்பட்டதினால் இரவிலே, வற்றிப்போன ஆற்றுப்படுகையின் வழியாக சுவர்களுக்குக் கீழாகச் சென்று, தரியுவின்  படையினால் நகரத்தைப் பிடிக்க முடிந்தது. வெளிப்படுத்தின தீர்க்கதரிசனங்களில் தண்ணீர் “மக்களை” அடையாளப்படுத்துகிறது (வெளிப்படுத்தல் 17:15). இவ்விதம் “மகா பாபிலோனை” பின்பற்றுகிறவர்களை ஜபிராத்து நதியின் தண்ணீர்கள் குறிப்பிடுகிறது.  பாபிலோனை அழிக்கும் நோக்கத்தோடு (வெளிப்படுத்தல் 17:16) அவர்கள் அதற்கு எதிராகத் திரும்பும்போது, அதற்கு அவர்கள் கொடுத்த ஆதரவு வற்றிப்போகும்.  “மகா பாபிலோனுக்கு” கொடுத்த ஆதரவு விலக்கிக்கொள்ளப்படுவது, சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் பரலோகப் பிதாவிற்கும் குமாரனுக்கும் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

கேள்விகள்

1. பாபிலோன் என்றால்:  (1)

_____ குழப்பம்.
_____ கலகம்.
_____ வஞ்சிக்கிறவன்.


2. வேதாகம தீர்க்கதரிசனத்தில் தாய் பாபிலோன் அடையாளப்படுத்துவது: (1)

_____ ஐக்கிய நாடுகள்.
_____ போப்புமார்க்கம்.
_____ இயேசுவின் தாயாகிய மரியாள்.


3. தாய் பாபிலோனின் குமாரத்திகள்: (1)

_____ புதிய ஏற்பாட்டின் பெண்களான பிரிசில்லாளும் எலிசபெத்தும், தொற்காளும்.
_____ ஐரோப்பாவின் இராணிகள்.
_____ தாய் பாபிலோனின் பொய் போதகங்களையும் வழக்கங்களையும் பின்பற்றும் சபைகள்.


4. தாய் பாபிலோன் சிவப்பான மிருகத்தின் மேல் ஏறியிருப்பதன் அடையாளம்: (1)

_____ சபை தனக்கு அதிக ஆதரவு கொடுத்த அரசைக் கட்டுப்படுத்தும்.
_____ பெண்கள் மிருகங்களை பயிற்றுவிப்பார்கள்.
_____ பெண்கள் நடக்கக்கூடாது, சவாரி செய்யவேண்டும் என்பதே.


5. பாபிலோனின் எந்த பொய் போதனை மக்களை ஆவிக்குரியதாக குழப்பும்? (4)

_____ திருமணத்தின் பரிசுத்தம்.
_____ மரணம் என்பது ஒரு நித்திரை.
_____ பாவிகள் நரகத்தில் நித்தியமாக எரிவார்கள்.
_____ ஞாயிற்றுக்கிழமை தேவனுடைய பரிசுத்தநாள்.
_____ ஆவிகள் அல்லது ஆத்துமாக்கள் அழியாதவை.
_____ முழுக்கு ஞானஸ்நானம்.
_____ அகற்றப்பட்ட அல்லது மாற்றப்பட்ட தேவனுடைய பிரமாணம்.


6. “பாபிலோன் விழுந்தது” என்றால்: (1)

_____ ஒரு தூதன் பரலோகத்திலிருந்து விழுந்தான்.
_____ பாபிலோன் ஒரு பூமியதிர்ச்சியினால் தாக்கப்பட்டிருக்கிறது.
_____ தாய் சபையும் அதன் பொய் போதகத்தைத் தழுவிய மற்ற சபைகளும் வேதாகம சத்தியத்திலிருந்தும் மெய் தேவனை மெய்யாக ஆராதிப்பதிலிருந்தும் விழுந்துவிட்டன.


8. ஜபிராத்து நதியின் தண்ணீர்கள் வற்றப்போவது என்றால்: (1)

_____ கடைசிநாட்களில் பயங்கரமான தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும்.
_____ கடைசி நாட்களில் உணவு இருக்காது.
_____ பாபிலோன் அதன் பின்னடியார்களின் ஆதரவை இழக்கும்.


9. ஏறக்குறைய அனைத்து மதங்களையும் சபைகளையும் உள்ளடக்கிய குடும்பப் பெயரே பாபிலோன். (1)

_____ ஆம்.
_____ இல்லை.


10. யார் பாபிலோனிலிருந்து மக்களை வெளியே அழைக்கிறார்கள்? (1)

( ) தூதுவர்கள்.
( ) லூசிபர்.
( ) பத்து இராஜாக்கள்.
( ) இயேசு


11. விழுந்துபோன சபையைவிட்டு வெளியே வருவதைக்காட்டிலும் அதை திருத்துவது மேன்மையாயிருக்குமல்லவா? (1)

_____ ஆம்.
_____ இல்லை.


12. பாபிலோனின் மதுவினால் வெறிகொள்ளுவது என்றால்: (1)

_____ ஒரு மதுபான அடிமையாயிருப்பது.
_____ அவளுடைய விருந்துகளில் பங்கெடுப்பது.
_____ சுகவீனமடைவது.
_____ அவளுடைய பொய் போதகங்களால் குழம்புவது.


13. கடைசி நாட்களில் இயேசுவிற்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக இணையும் மூன்று வல்லமைகள்: (3)

_____ கிறிஸ்தவமல்லாத மதங்கள்.
_____ ஐக்கிய நாடுகள்.
_____ மருளவிழுந்த புரொட்டஸ்டண்டு.
_____ விண்வெளி மனிதர்.
_____ போப்புமார்க்கம்.


14. இயேசு தமது மக்களை பாபிலோனிலிருந்து வெளியே அழைக்கும்போது அவர்கள் வெளியே வருவார்களா? (1)

_____ ஆம்.
_____ இல்லை.


15. அநேகர் பாபிலோன் என்று அறியாமலே பாபிலோனில் இருக்கிறார்கள். (1)

_____ ஆம்.
_____ இல்லை.


16. நீங்கள் பாபிலோனில் இருப்பீர்களானால் அதிலிருந்து வெளியே வரும்படி மன்றாடும் இயேசுவிற்கு செவிகொடுப்பீர்களா?

_____ ஆம்.
_____ இல்லை.