வேதபாடங்கள் 10
இன்றைக்கு அதிகம் தவறாக புரிந்துகொள்ளப்படுகிற சத்தியங்களில் மரணத்தைக்குறித்த சத்தியம் ஒன்று.

அநேகருக்கு இது முழுவதும் இரகசியமாக மறைக்கப் பட்டதைப்போலத் தோன்றி, பய உணர்வுகளையும், நிச்சயமில்லாத, நம்பிக்கையின்மையைக் கொண்டுவருகிறது. வேறு சிலர், மரித்த தங்களுடைய அன்பானவர்கள் மரிக்கவில்லை, மாறாக தங்களோடேயே வசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றோ, அல்லது உலகில் வேறெங்கோ இருக்கிறார்கள் என்றோ நம்புகிறார்கள். இன்னும் அநேகர் சரீரத்திற்கும் ஆவிக்கும் ஆத்துமாவிற்கும் இருக்கிற உறவைக்குறித்த குழப்பத்தில் இருக்கிறார்கள். நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியமா? முக்கியம்தான்! ஏனேனில் கடைசி நாட்களில் நடக்கவிருக்கும் சம்பவங்கள், மரணத்தைக்குறித்த உங்கள் நம்பிக்கையைப்பொறுத்து சொல்லக்கூடிய தாக்கத்தை உங்களில் ஏற்படுத்தும். எதையாவது யூகித்துக்கொள்ள அங்கே இடமே இல்லை. எனவே இந்தக் காரியத்தைக்குறித்து தேவன் என்ன சொல்லுகிறார் என்பதை மிகச் சரியாக இந்தப் பாடம் உங்களுக்குக் காண்பிக்கும். ஆயத்தமா?
1. முதலில், நாம் இங்கே எப்படி வந்தோம்?

“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி,. ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” – ஆதியாகமம் 2:7.
பதில்: தேவன் ஆதியிலே மண்ணிலிருந்து நம்மை உண்டாக்கினார்.

2. ஒரு நபர் மரிக்கும்போது என்ன நடக்கிறது?
“மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, அவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும்” – பிரசங்கி 12:7.
பதில்: மரிக்கிற நபர் நீதிமானாயிருந்தாலும் துன்மார்க்கனாயிருந்தாலும், அவருடைய சரீரம் மீண்டும் மண்ணிற்குத் திரும்ப, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்குத் திரும்புகிறது.
3. மரணத்தில் தேவனிடம் திரும்புகிற இந்த ஆவி என்ன?
“ஆவியில்லாத (சுவாசமில்லாத) சரீரம் செத்ததாயிருக்கிறது” – யாக்கோபு 2:26; “தேவன் தந்த ஆவி (அவர் கொடுத்த சுவாசம்) என் நாசியிலும் இருக்குமட்டும்” – யோபு 27:3.
பதில்: மரணத்தில் தேவனிடம் திரும்பும் ஆவி அவர்களுடைய சுவாசமே. ஒரு நபர் மரித்தபின்பு அவருடைய “ஆவிக்கு” உயிர் இருப்பதாகவோ அறிவு இருப்பதாகவோ அல்லது உணர்வு இருப்பதாகவோ தேவனுடைய புத்தகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அது “மூச்சுக்காற்றே” ஒழிய வேறு ஒன்றுமில்லை.
4. ஆத்துமா என்றால் என்ன?
“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” – ஆதியாகமம் 2:7.

பதில்: ஆத்துமா என்பது உயிருள்ள நபரையே குறிக்கிறது. ஆத்துமா என்பது எப்போதும் சரீரம் மற்றும் சுவாசம் ஆகிய இரண்டு காரியங்களின் இணைப்பே. சரீரமும் மூச்சும் ஒன்றாகாத பட்சத்தில் ஒரு ஆத்துமா இருக்கமுடியாது. நாம் ஆத்துமாக்கள் என்று தேவனுடைய வார்த்தை போதிக்கிறது.

5. ஆத்துமா மரிக்குமா?
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” – எசேக்கியேல் 18:20. “… சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின” (வெளிப்படுத்தல் 16:3).
பதில்: தேவனுடைய வார்த்தையின்படி ஆத்துமா மரிக்கும். நாம் ஆத்துமாக்கள்; ஆத்துமாக்கள் மரிக்கின்றன. மனிதன் அழியக்கூடியவன் (யோபு 4:17 mortal man). தேவன் மாத்திரமே சாவாமை உள்ளவர் (1 தீமோத்தேயு 6:15,16). ஆத்துமா சாகாதது என்னும் கருத்து ஆத்துமாக்கள் சாகும் என்று போதிக்கிற வேதாகமத்திற்கு எதிரானது.

6. நல்ல மனிதர்கள் மரிக்கும்போது பரலோகத்திற்குப் போகிறார்களா?
“பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது …. எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்” – யோவான் 5:28,29; “தாவீதைக்குறித்து … அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.” “தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே” – அப்போஸ்தலர் 2:29,34;
“அப்படி நான் காத்துகொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்” – யோபு 17:13.
பதில்: இல்லை. மரிக்கும்போது எவரும் பரலோகத்திற்கோ அல்லது நரகத்திற்கோ போவதில்லை. உயிர்த்தெழும்நாள்வரைக்கும் காத்திருக்கும்படியாக அவர்கள் தங்கள் கல்லறைகளுக்குள் போகிறார்கள்.
7. மரணத்திற்குப்பிறகு ஒரு நபர் எவ்வளவு காரியங்களை அறிந்துகொள்ளமுடியும்? அல்லது புரிந்துகொள்ள முடியும்?

“உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.” “நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” – பிரசங்கி 9:5,6,10;
“மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்” – சங்கீதம் 115:17.
பதில்: மரித்தவர்கள் ஒன்றுமே அறியார்கள் என்று தேவன் கூறுகிறார்.

8. மரித்தவர்கள் உயிரோடிருக்கிறவர்களோடு தொடர்புகொள்ள முடியாதா? உயிரோடிருக்கிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மரித்தவர்களுக்குத் தெரியாதா?
“மனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.” “அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்” – யோபு 14:12,21;
“சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை” – பிரசங்கி 9:6.
பதில்: இல்லை. மரித்தவர்கள் உயிரோடிருக்கிறவர்களோடு தொடர்புகொள்ள முடியாது. உயிரோடிருக்கிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்களால் அறியவும் முடியாது. அவர்கள் மரித்தவர்கள், அவர்களுடைய நினைவுகள் அழிந்துபோயின (சங்கீதம் 146:4).
9. யோவான் 11:11-14-ல் மரித்தவர்களின் நினைவற்ற நிலையை இயேசு “நித்திரை” என்று அழைக்கிறார். அவர்கள் எவ்வளவு காலம் நித்திரை செய்வார்கள்?

“மனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை” – யோபு 14:12;
“கர்த்தருடைய நாள் … வரும்; அப்பொழுது வானங்கள் … அகன்றுபோம்” – 2 பேதுரு 3:10.
பதில்: உலக முடிவில் ஆண்டவருடைய மாபெரும் நாள்வரையிலும் மரித்தவர்கள் நித்திரை செய்வார்கள். மரணத்தில் மனிதர்கள் எந்தவித செய்கையும் அறிவுமின்றி முழுவதும் சுயநினைவற்று இருக்கிறார்கள்.

10. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் மரித்த நீதிமான்களுக்கு என்ன சம்பவிக்கும்?
“இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” – வெளிப்படுத்தல் 22:12;
“கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும் … வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் … இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” – 1 தெசலோனிக்கேயர் 4:16,17;
“ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறு௹பமாக்கப்படுவோம் … மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்;.…அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கோதுவாகிய இது சாவாமையையும் தரித்துகொள்ளவேண்டும்” – 1 கொரிந்தியர் 15:51-53.
பதில்: அவர்களுக்கு பலனளிக்கப்படும். அவர்கள் எழுப்பப்பட்டு, சாகாத சரீரங்கள் கொடுக்கப்பட்டு, ஆகாயத்தில் ஆண்டவரைச் சந்திக்கும்படி எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மரிக்கும்போதே மக்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களானால், உயிர்த்தெழுதல் அர்த்தமற்றதாக இருக்கும்.

11. பிசாசினுடைய முதல் பொய் என்ன?
“அப்பொழுது சர்ப்பம் ஸ்திரியை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை” – ஆதியாகமம் 3:4;
“பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” – வெளிப்படுத்தல் 12:9.
பதில்: நீங்கள் சாவதில்லை
12. மரணத்தைக்குறித்து பிசாசு ஏன் ஏவாளிடம் பொய் சொன்னான்? அநேகர் நினைப்பதைக்காட்டிலும் இந்தக் காரியம் அதிக முக்கியமானதா?
பதில்: பிசாசினுடைய இராஜ்யத்தின் மூலைக்கற்களில் இது ஒன்று. மரித்தவர்களின் ஆவிகளிடமிருந்து வல்லமை பெற்றதாகக் கூறுகிறவர்களால் காலங்கள் நெடுகிலும் வல்லமையான அற்புதங்களை நடத்தியிருக்கிறான் அவன். (உதா. எகிப்தின் மந்திரவாதிகள் – யாத். 7:11; எந்தோரின் பெண் – 1 சாமு. 28:3-25; சூனியக் காரர்கள் – தானி. 2:2; ஒரு குறிப்பிட்ட பெண் – அப். 16:16-18).
பவித்திரமான ஒரு எச்சரிப்பு
தானியேலின் நாட்களில் செய்ததைப்போலவே சாத்தான் கடைசி காலத்தில் உலகத்தை வஞ்சிக்கும்படியாக மீண்டும் சூனியவித்தையை உபயோகிப்பான். (வெளி. 18:23). சூனியவித்தை என்பது, மரித்தவர்களின் ஆவிகளிடமிருந்து வல்லமையையும் ஞானத்தையும் பெற்றுக் கொண்டதாக உரிமை கோருகிற
முகவர்களின் செயல்.
இயேசுவின் சீடர்களாக தங்களைக் காண்பிப்பார்கள்:
மரித்த பக்தியான அன்பானவர்களைப் போலவும், மரித்த பரிசுத்த சபைத்தலைவர்களைப் போலவும், ஏன் கிறிஸ்துவின் சீடர்கள் மற்றும் அப்போஸ்தலர்களைப் போலவுங்கூட (2 கொரி. 11:13), சாத்தானும் அவனுடைய தூதர்களும் தங்களைக் காண்பித்து. கோடிக்கணக்கானோரை ஏமாற்றுவார்கள். மரித்தவர்கள் எந்தவிதத்திலாவது உயிரோடிருக்கிறார்கள் என்று நம்புகிறவர்கள் அதிக நிச்சயமாக வஞ்சிக்கப்படுவார்கள்.

13. பிசாசுகள் உண்மையிலேயே அற்புதங்கள் செய்கின்றனவா?
“அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்” – வெளி. 16:14;
“ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” – மத்தேயு 24:24.
பதில்: ஆமாம், உண்மையிலேயே செய்கின்றன. நம்பமுடியாத, மனதை உணர்த்துகிற அற்புதங்களை பிசாசுகள் செய்கின்றன (வெளிப்படுத்தல் 13:13,14). சாத்தானும் அவனுடைய தூதர்களும் ஒளியின் தூதர்களாகத் தோன்றுவார்கள் (2 கொரிந்தியர் 11:14). இன்னும் அதிர்ச்சியளிக்கும்படி கிறிஸ்துவாகவே தோன்றுவார்கள் (மத்தேயு 24:23,24). கிறிஸ்துவும் அவரது தூதர்களும் உலகளாவிய எழுப்புதலை அற்புதமாக நடத்திக்கொண்டிருப்பதாக உலகம் எண்ணிக்கொண்டிருக்கும். முழு வேலையும் ஆவிக்குரியதுபோலவும், இயற்கையின் வல்லமைக்கு அப்பாற்பட்டதைப்போலவும் தோன்றுவதால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே வஞ்சிக்கப்படமாட்டர்கள்.
14. ஏன் தேவனுடைய பிள்ளைகள் வஞ்சிக்கப்படமாட்டார்கள்?

“அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்,” – அப்போஸ்தலர் 17:11;
“இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” – ஏசாயா 8:20.
பதில்: மரித்தவர்கள் மரித்தவர்கள் என்றும், அவர்கள் உயிரோடில்லை என்றும், தேவனுடைய புத்தகத்தை ஊக்கமாக ஆராய்வதினால் அவருடைய மக்கள் அறிந்திருப்பார்கள். மரித்தவர்களின் ஆவிகள் என்று ஒன்றுமேயில்லை. எனவே விசேஷ ஒளி பெற்றிருப்பதாகவோ, அல்லது மரித்தவர்களின் ஆவிகளோடு தொடர்புகொண்டதினால் அற்புதங்களைச் செய்கிறதாகவோ கூறுகிற அனைத்து போதகர்களையும், அற்புதம் செய்கிறவர்களையும் அவர்கள் நிராகரிப்பார்கள். அதைப்போலவே மரித்தவர்கள் ஏதோ உருவத்தில் எங்கேயோ இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிற அனைத்து போதனைகளையும் ஆபத்தான பொய் போதனை என்று நிராகரிப்பார்கள்.

15. மரித்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்று போதித்தவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவர் மோசேயின் நாட்களில் கட்டளையிட்டிருந்தார்?
“அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக” – லேவியராகமம் 20:27.
பதில்: குறிசொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் (மரித்தவர்களோடு தொடர்பு கொள்ளுவதாகச் சொல்லுகிறவர்கள்) கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று ஆண்டவர் வலியுறுத்தினார். மரித்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற பொய்போதனையை தேவன் எவ்விதம் பார்க்கிறார் என்று இது காண்பிக்கிறது.

16. உயிர்த்தெழுதலில் எழுப்பப்படும் நீதிமான்கள் மீண்டும் எப்போதாவது மரிப்பார்களா?
“மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ … இனி மரிக்கவுமாட்டார்கள்” – லூக்கா 20:35,36;
“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின” – வெளிப்படுத்தல் 21:4.

பதில்: இல்லை. மரணமும் துக்கமும் அழுகையும் துயரமும் தேவனுடைய புதிய இராஜ்யத்தில் ஒருபோதும் நுழையாது. “அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்” – 1 கொரிந்தியர் 15:54.

17. மறுபிறவியைக் குறித்த நம்பிக்கை இன்று வேகமாக பரவிக்கொண்டிருக்கிறதே, இது வேதாகமப் போதனையா?
“உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்;…. சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை” – பிரசங்கி 9:5,6.
பதில்: ஆத்துமா ஒருபோதும் சாகாது என்றும், அடுத்தடுத்த தலைமுறைகளில் வெவ்வேறு உருவங்களில் அது தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறக்கும் என்றும் போதிக்கிற மறுபிறவியைக்குறித்த போதனையை ஏறக்குறைய உலகத்தின் பாதி மக்கள் நம்புகிறார்கள். இந்தப் போதனை வேத வாக்கியங்களுக்கு எதிரிடையானது.
வேதாகமம்
மரணத்திற்குப்பிறகு ஒரு நபர் மண்ணிற்குத் திரும்புகிறார் (சங்கீதம் 104:29), ஒன்றுமறியார் (பிரசங்கி 9:5), அவருக்கு யோசனைகள் கிடையாது (சங்கீதம் 146:4), பூமியின்மேல் நடக்கிற எதிலும் அவருக்குப் பங்கில்லை (பிரசங்கி 9:6), உயிரோடிருப்பதில்லை (2 இராஜாக்கள் 20:1), கல்லறையில் காத்திருக்கிறான் (யோபு 17:13), இல்லாதேபோகிறான் (யோபு 14:1,2) என்றே போதிக்கிறது.
சாத்தானுடைய கண்டுபிடிப்பு
மாித்தவா்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற போதனையை சாத்தான் கண்டுபிடித்தான் என்கிறதை 11 மற்றும் 12-ம் கேள்விகளில் நாம் பார்த்தோம். மனிதர் மரிக்கும்போது உண்மையில் அவர்கள் மரிக்கவில்லை என்று மக்களை நம்பவைக்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்தைக்கொண்ட – “மறுபிறவி,” “ஆவிகளோடு தொடர்புகொள்ளுதல்,” “ஆவிகளை தொழுதுகொள்ளுதல்,” “சாகாத ஆத்துமா” என்ற அனைத்தும் சாத்தனுடைய கண்டுபிடிப்புகளே. மரித்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்று மக்கள் நம்பும்போது, அற்புதங்களைச் செய்து (வெளிப்படுத்தல் 16:14), மரித்தவர்களின் ஆவிகளாக தங்களைக் காண்பிக்கப்போகிற பிசாசுகளின் ஆவிகள், அவர்களை வஞ்சித்து நூறு சதவிகிதம் தவறாக நடத்தமுடியும் (மத்தேயு 24:24).
18 மரணம் என்கிற மிகவும் உணர்ச்சிப்பூர்வமான காரியத்தைக்குறித்த சத்தியத்தை சொல்லுகிற வேதாகமத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிரீர்களா?
உங்கள் பதில்: _____________
சிந்தனைக் கேள்விகள்
1. சிலுவையில் தொங்கின கள்ளன், மரித்த அன்றைய தினம் கிறிஸ்துவோடுகூட பரலோகத்திற்குப் போகவில்லையா?
பதில்: இல்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் “நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை” (யோவான் 20:17) என்று இயேசு மரியாளிடம் கூறினார். கிறிஸ்து மரித்தபோது பரலோகத்திற்குப் போகவில்லை என்பதை இது காண்பிக்கிறது. மற்றொரு காரயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். அதாவது, வேதாகமத்தில் இருக்கிற காற்புள்ளிகள் எல்லாம் ஆவியானவரால் ஏவப்பட்டதல்ல, மனிதர்களால் சோ்க்கப்பட்டது. லூக்கா 23:43-ல் வருகிற காற்புள்ளி, “இன்றைக்கு” என்கிற வார்த்தைக்கு அடுத்ததாக வரவேண்டும். அப்போது அந்த வாக்கியம்: “இன்றைக்கு, நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று, அல்லது “இன்றைக்கு நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒருவரையும் என்னால் இரட்சிக்கமுடியாது என்று தோன்றினாலும், நானே ஒரு குற்றவாளியைப்போல சிலுவையில் அறையப்பட்டிருக்கிறபோதும், நீ என்னோடு பரலோகத்தில் இருப்பாய் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்” என்று அர்த்தம் கொடுக்கும். கிறிஸ்துவின் இராஜ்யம் மரணத்திலல்ல, அவருடைய இரண்டாம் வருகையிலேயே ஸ்தாபிக்கப்படும் (மத்தேயு 25:31). அப்போது, அனைத்து யுகங்களிலும் மரித்த நீதிமான்கள் அவரோடுகூட அதற்குள் பிரவேசிப்பார்கள் (1 தெச. 4:15-17)
2. சாகாத ஆத்துமாவைக்குறித்து வேதாகமம் பேசவில்லையா?
பதில்: இல்லை. மரிக்காத அல்லது சாகாத ஆத்துமா என்று எதுவும் வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. சாவாமை என்கிற வார்த்தை வேதாகமத்தில் ஒருமுறையே காணப்படுகிறது. அது தேவனையே குறிப்பிடுகிறது் (1 தீமோத்தேயு 1:17).
3. மரணத்தில் சரீரம் மண்ணிற்கும், ஆவி (சுவாசம்) தேவனிடத்திற்கும் திரும்புகிறது; ஆத்துமா எங்கே போகிறது?
பதில்: அது எங்கும் போகவில்லை, மாறாக, அது முடிவடைகிறது. ஆத்துமா என்பது சரீரமும் சுவாசமும் இணைந்த ஒன்று. இவ்விரண்டும் இணைந்த ஒன்றுதான் ஆத்துமா என்பதால், சுவாசம் பிரியும்போது ஆத்துமா முடிவிற்கு வருகிறது. நீங்கள் ஒளியை நிறுத்தும்போது அந்த ஒளி எங்கே போகிறது? இது எங்கும் போகவில்லை; முடிந்துபோகிறது. வெளிச்சத்தைக் கொண்டுவர இரண்டு காரியங்கள் இணையவேண்டும். 1. மின்விளக்கு, 2. மின்சாரம். இந்த இணைதல் இல்லாமல் வெளிச்சம் வராது. அப்படியேதான் ஆத்துமாவிலும்! சரீரமும் சுவாசமும் இணையாதபோது அங்கே ஆத்துமா இல்லை. ஆவியற்ற ஆத்துமா என்று ஒன்றுமில்லை. சரீரமற்ற ஆத்துமா என்று ஒன்றுமே இல்லை.
4. ஆத்துமா என்பது உயிருள்ள நபரைத்தவிர வேறு எதையாவது குறிப்பிடுகிறதா?
பதில்: ஆமாம், அது,
- உயிரையும்
- மனம் அல்லது அறிவையும் குறிப்பிடுகிறது.
எந்த அர்த்தம் கொடுத்தாலும், ஆத்துமா என்பது இன்னமும் சரீரமும் சுவாசமும் இணைந்த ஒன்றுதான். அது மரணத்தில் முடிவடைகிறது.
5. “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவான் 11:26) என்கிற வசனத்தை விளக்கமுடியுமா?
பதில்: இது அனைவரும் மரிக்கிற முதலாவது மரணத்தை (எபிரெயர் 9:27) குறிப்பிடவில்லை. மாறாக, துன்மார்க்கர் மாத்திரமே மரிக்கிற-அதற்குப்பின்பு உயிர்த்தெழுதலே இல்லாத இரண்டாம் மரணத்தை (வெளிப்படுத்தல் 2:11; 21:8) குறிப்பிடுகிறது.
6. “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு” என்று மத்தேயு 10:28 சொல்லுகிறது. ஆத்துமா சாகாது என்று இது நி௹பிக்கவில்லையா?
பதில்: இல்லை. அதற்கு எதிராகவே இது போதிக்கிறது. இந்த வசனத்தின் கடைசி பகுதி ஆத்துமா சாகும் என்றே காட்டுகிறது. “ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” என்கிறது. “ஆத்துமா” என்கிற வார்த்தை ஈவாகக் கொடுக்கப்படப்போகிற (ரோமர் 6:23) ஜீவனையும் நித்திய ஜீவனையும் சுட்டிக்காட்டுகிறது. அது நீதிமான்களுக்கு கடைசி நாளில் கொடுக்கப்படும் (யோவான் 6:54). தேவன் கொடுக்கிற நித்திய ஜீவனை எவரும் எடுக்கமுடியாது. (லூக்கா 12:4,5ஐ பார்க்கவும்).
7. சுவிசேஷம் மரித்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது என்று 1 பேதுரு 4:6 சொல்லவில்லையா?
பதில்: இல்லை. “மரித்தவர்களுக்கு” சுவிசேஷம் “அறிவிக்கப்பட்டது” என்று, கடந்த காலத்தையே அது குறிப்பிடுகிறது. அவர்கள் இன்று மரித்திருக்கலாம். ஆனால் அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
8. வெளிப்படுத்தல் 6:9,10-ல் பலிபீடத்தின் கீழேயிருந்து அழும் ஆத்துமாக்களைக்குறித்து என்ன சொல்லுகிறீர்கள். ஆத்துமா சாகாதது என்று இது காட்டவில்லையா?
பதில்: இல்லை. ஆபேலின் இரத்தத்தின் அழுகையைப்போல இந்த அழுகையும் அடையாளமானதே (ஆதியாகமம் 4:10). ஆத்துமா என்பது இங்கு தங்கள் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட மனிதர்களைக் குறிப்படுகிறது. நிச்சயமாகவே மரித்தவர்கள் பலிபீடத்தின்கீழ் இருக்கிறார்கள் என்றோ, அல்லது தங்கள் சத்துருக்களை தண்டிக்கவேண்டும் என்று நீதிமான்கள் கெஞ்சிக்கொண்டிருப்பதாகவோ எவரும் நம்புவதில்லை. மாறாக, கிறிஸ்து சிலுவையில் செய்ததைப்போலவே, தங்கள் சத்துருக்களின்மேல் கிருபை காண்பிக்கவேண்டும் என்றே நீதிமான்கள் வேண்டுகிறார்கள் (லூக்கா 23:34).
9. கிறிஸ்து தமது மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் நடுவில் இழந்துபோன ஆத்துமாக்களுக்குப் போதித்தார் என்று வேதாகமம் சொல்லவில்லையா?
பதில்: இல்லை. இந்த கேள்வியில் வரும் குறிப்பு, 1 பேதுரு 3:18-20 வரையிலும் இருக்கிறது. அந்த உபதேசம் நோவாவின் காலத்தில்-அப்போது வசித்த மக்களுக்கு (வசனங்கள் 19,20) “ஆவியிலே” (வசனம் 18,19) கொடுக்கப்பட்டது. “காவலிலுள்ள ஆவிகள்” என்ற குறிப்பு சாத்தானுக்கு அடிமைப்பட்டிருக்கிற மக்களை குறிக்கிறது (சங்கீதம் 142:7; ஏசாயா 42:6,7; 61:1; மற்றும் லூக்கா 4:18ஐ பார்க்கவும்)
கேள்விகள்
1. வேதாகமம் மரணத்தை:(1)
_____ நித்திரை என்கிறது.
_____ வேறொரு வாழ்க்கைக்கான மாற்றம் என்கிறது.
_____ விளக்கக்கூடாத இரகசியம் என்கிறது.
2. மரணத்தில் தேவனிடம் திரும்பும் “ஆவி”:(1)
_____ ஒரு நபருடைய உள்ளான மனிதன்.
_____ ஆத்துமா.
_____ ஜீவசுவாசம்.
3. மரிக்கிற ஒரு நபர்:(1)
_____ பரலோகத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்லுகிறார்.
_____ கல்லறைக்குச் செல்லுகிறார்.
_____ உத்தரிக்கும் ஸ்தலத்திற்குச் செல்லுகிறார்.
4. ஆத்துமா என்பது: (1)
_____ ஒரு நபருடைய ஆவிக்குரிய தன்மை.
_____ ஒரு நபருடைய மரிக்காத பகுதி.
_____ உயிரோடிருக்கும் நபர்.
5. ஆத்துமாக்கள் மரிக்குமா? (1)
_____ ஆம்.
_____ இல்லை.
6. நீதிமான்கள் எப்போது பதிலளிக்கப் படுகிறார்கள்? (1)
_____ இந்த வாழ்க்கையில்.
_____ மரணத்தில்.
_____ கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில்.
7. மரித்தவர்கள் மரிக்கவில்லை என்று கூறி சாத்தான் ஏன் மக்களை வஞ்சிக்க முயற்சிக்கிறான்? (1)
_____ அப்போதுதான் அவனுடைய அற்புதங்களை நம்பி ஏமாந்து அவர்கள் இரட்சிப்பை இழப்பார்கள்.
_____ ஏனெனில் அவன் அவர்களுக்காக வருத்தப்படுகிறான்.
_____ ஏனெனில் அவன் இழிவான துன்மார்க்கன்.
8. மரித்தவர்களோடு தொடர்புகொள்ளுகிற நபர்கள் யாருடன் பேசுகிறார்கள்? (1)
_____ சாகாத ஆத்துமாக்களோடு.
_____ பரிசுத்த தூதர்களோடு.
_____ மரித்தவர்களைப்போல வருகிற தீய ஆவிகளோடு
9. மரித்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்று போதித்த அனைவரும் என்ன செய்யப்பட வேண்டும் என்று தேவன் மோசேயின் நாட்களில் கட்டளையிட்டிருந்தார்? (1)
_____ ஆசாரியர்களாக்கப்படவேண்டும் என்று.
_____வர்களுடைய ஞானத்திற்காக கனப்படுத்தப்படவேண்டுமென்று.
_____ கொலை செய்யப்படவேண்டுமென்று.
10. ஒரு நபர் தான் பாதுகாப்பாகவும் சரியாகவும் இருப்பதை எவ்விதம் நிச்சயிக்கலாம்? (1)
_____ வானத்திலிருந்து விசேஷமான அடையாளத்திற்காக தேவனிடம் கேட்கவேண்டும்.
_____ போதகரோ அல்லது ஊழியக்காரரோ செய்யச் சொல்லுகிறவைகளை செய்யவேண்டும்.
_____ வேதாகமத்தை ஜெபத்தோடு கவனமாக ஆராய்ந்து அதைப் பின்பற்றவேண்டும்.
11. ஒரு நபர் மரிக்கும்போது: (1)
_____ அவருடைய ஆவி அல்லது ஆத்துமா உயிரோடிருக்கிறது.
_____ அவரால் உயிரோடிருக்கிறவர்களை கவனித்து, அவர்களோடு தொடர்பு கொள்ளமுடியும்.
_____ அவருடைய சரீரம் மரித்து, ஆத்துமா முடிந்துபோய், உயிரோடிருக்கிறவர்களோடு எந்த தொடர்பும் கூடாது-போக-எல்லாவிதத்திலும் அவர் மரித்தவரே.
12. இவை தேவனிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதற்கு அற்புதங்கள் ஆதாரமா? (1)
_____ ஆம், தேவன் மாத்திரமே அற்புதங்கள் செய்யமுடியும்.
_____ இல்லை, பிசாசுகளும் மாபெரும் அற்புதங்களை நடப்பிக்கும்.
13. இந்த உணர்வுப்பூர்வமான சத்தியத்தைச் சொல்லுகிற வேதாகமத்திற்கு நான் நன்றியோடு இருக்கிறேன்.
_____ அம்.
_____ இல்லை.