வேதபாடங்கள் 11
உண்மையிலேயே தேவன் பிசாசிற்குக் கூலி கொடுக்கிறாரா?
இரட்சிப்பை இழந்துபோனவர்களுக்குத் தரப்படும் தண்டனையை நரகத்தில் அளந்து கொண்டிருக்கும் மேலதிகாரியா அவன்?

நரகத்தைப்பற்றின வேதாகமத்திற்கு எதிரான பார்வையையே ஏறக்குறைய முழு உலகமும் கொண்டிருக்கிறது. வேதாகமம் இதைக்குறித்து என்ன சொல்லுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். முட்டாளாக்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் நரகத்தைக்குறித்து நீங்கள் யோசிப்பது தேவனுடைய குணத்தைக்குறித்த உங்கள் சிந்தனையை நிச்சயமாக பாதிக்கிறது! நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஆச்சரியமான உண்மையை அறிந்துகொள்ள இன்று சற்று நேரம் செலவிடுங்கள்.
1. இரட்சிப்பை இழந்த எத்தனை ஆத்துமாக்கள் இன்று நரகத்தில் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன?
“கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காராரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்” – 2 பேதுரு 2:9.

பதில்: இன்றைக்கு நரக அக்கினியில் ஒரு ஆத்துமாகூட இல்லை. துன்மார்க்கர் தண்டிக்கப்படும் நியாயத்தீர்ப்பின் நாள் வரையிலும் தேவன் காத்திருக்கிறார் அல்லது பொறுத்திருக்கிறார் என்று வேதாகமம் சொல்லுகிறது.

2. எப்போது பாவிகள் நரக அக்கினியில் தள்ளப்படுவார்கள்?
“ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்” – மத்தேயு 13:40-42; “நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்” – யோவான் 12:48.
பதில்: பாவிகள் மரிக்கும்போது அல்ல, உலகத்தின் முடிவில் மாபெரும் நியாயத்தீர்ப்பின் நாளிலேயே நரக அக்கினிக்குள் தள்ளப்படுவார்கள். ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையும் விசாரிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் உலகமுடிவு வரையிலும் தேவன் எந்த ஒரு நபரையும் அக்கினியில் தண்டிப்பதில்லை. கூடவே ஐந்தாயிரம் வருடங்களுக்குமுன்பு கொலை செய்த ஒருவனை, இன்று அதே பாவத்தை செய்து அதே தண்டனைக்குப் பாத்திரவானான ஒருவனைக்காட்டிலும் ஐயாயிரம் வருடங்கள் அதிகமாக அவர் தண்டிக்கமாட்டார். (ஆதியாகமம் 18:25ஐ படிக்கவும்).
3. மரித்த பாவிகள் எங்கே இருக்கிறார்கள்?
“பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்” – யோவான் 5:28,29; “துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்” “அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்” – யோபு 21:30,32.
பதில்: மரித்த நீதிமான்களும் துன்மார்க்கரும் உயிர்த்தெழுதலின் நாள் வரையிலும் தங்கள் கல்லறைகளில் நித்திரையாயிருக்கிறார்கள் என்று வேதாகமம் குறிப்பாக சொல்லுகிறது.
4. பாவத்தின் முடிவான பலன் என்ன?
“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” – ரோமர் 6:23;

“பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” – யாக்கோபு 1:15;
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி …. அன்புகூர்ந்தார்” – யோவான் 3:16.

பதில்: பாவத்தின் சம்பளம் மரணமே. நித்திய நரக அக்கினியில் நித்திய வாழ்வு அல்ல. துன்மார்க்கர் “அழிந்துபோவார்கள்;” அல்லது “மரித்துப் போவார்கள்; நீதிமான்கள் “நித்திய ஜீவனை” அடைவார்கள்.
5. நரக அக்கினியில் துன்மார்க்கருக்கு என்ன சம்பவிக்கும்?

“பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாரதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்” – வெளிப்படுத்தல் 21:8.
பதில்: துன்மார்க்கர் நரக அக்கினியில் இரண்டாம் மரணத்தில் மரிப்பார்கள். அவர்கள் நரகத்தில் எந்நாளும் என்றென்றைக்கும் வாதிக்கப்பட்டு உயிரோடிருப்பார்களெனில், சாவாமையுள்ளவர்களாயிருப்பார்கள். ஆனால் அது கூடாத காரியம். ஏனெனில் தேவன் மாத்திரமே சாவாமையுள்ளவர். (1 தீமோத்தேயு 6:16) என்று வேதாகமம் சொல்லுகிறது. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டபோது, பாவிகள் ஜீவவிருட்சத்தின் கனியை புசித்து என்றென்றும் உயிரோடிருக்கக்கூடாது (ஆதியாகமம் 3:22-24) என்று ஒரு தூதன் அந்த மரத்திற்கு காவலாக நிறுத்தப்பட்டான். பாவிகள் நரகத்தில் சாகமாட்டார்கள் என்ற போதனை சாத்தானிடமிருந்து துவங்கியிருக்கிறது. அது முற்றிலும் பொய்யானது. பாவம் நுழைந்தபோது ஜீவவிருட்சத்தைக் காவல் காத்ததன் வழியாக தேவன் இதைத் தடுத்துவிட்டார்.

6. எங்கே எப்போது நரக அக்கினி கொளுத்தப்படும்?
“ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷ குமாரன் … அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்” – மத்தேயு 13:40-42;
“அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துபோட்டது” – வெளிப்படுத்தல் 20:9; “இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்” – நீதிமொழிகள் 11:31.
பதில்: உலகத்தின் முடிவில் தேவன்தாமே நரக அக்கினியை கொளுத்துவார். பரிசுத்த பட்டணம் பரலோகத்தில் தேவனிடமிருந்து கீழே வரும்போது (வெளிப்படுத்தல் 21:2) துன்மார்க்கர் அதைப் பிடிக்க முயற்சிப்பார்கள். அந்த நேரத்தில் தேவன் வானத்திலிருந்து பூமியின்மீது அக்கினியை அனுப்புவார். அது துன்மார்க்கரைப் பட்சிக்கும். இந்த அக்கினியே வேதாகமம் சொல்லுகிற நரக அக்கினி.
7. நரக அக்கினி எவ்வளவு பெரிதாகவும் எவ்வளவு உக்கிரமானமாகவும் இருக்கும்?

“கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்” – 2 பேதுரு 3:10.
பதில்: நரக அக்கினி என்பது இந்த பூமியின் அளவு பெரிதாயிருக்கும். ஏனெனில் பூமியே அந்த அக்கினியில் இருக்கும். பூமியை உருக்கி, “அதன் கிரியைகள் அனைத்தையும்” அழித்துப்போடுமளவு உக்கிரமானதாயிருக்கும். வானங்கள் வெடித்து “மடமட என்று அகன்றுபோம்”

8. துன்மார்க்கர் அக்கினியில் எவ்வளவு காலம் வாதிக்கப்படுவார்கள்?
“இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” – வெளிப்படுத்தல் 22:12;
“அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்” – மத்தேயு 16:27;
“தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் … அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான்” – லூக்கா 12:47,48.
பதில்: அக்கினியில் மரிப்பதற்குமுன் துன்மார்க்கர் எவ்வளவு காலம் தண்டிக்கப்படுவார்கள் என்று வேதாகமம் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர்களுடைய கிரியைகளுக்குத்தக்கதாக தண்டிக்கப்படுவார்கள் என்று தேவன் குறிப்பாகச் சொல்லுகிறார். சிலர் அவர்களுடைய கிரியைகளைப்பொறுத்து அதிக தண்டனையைப் பெறுவார்கள் என்று இது காட்டுகிறது.
9. கடைசியில் அக்கினி அணைந்துபோகுமா?

“இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜீவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல” – ஏசாயா 47:14;
“பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்;” “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின” – வெளிப்படுத்தல் 21:1,4.
பதில்: ஆமாம். நரக அக்கினி அணைந்துபோகும் என்று வேதாகமம் குறிப்பாகப் போதிக்கிறது. அதில் குளிர்காயத்தக்க தழல் மீந்திருக்காது; எதிரே உட்காரத்தக்க அடுப்புமிருக்காது.” தேவனுடைய புதிய இராஜ்யத்தில் பழையவைகளனைத்தும் ஒழிந்துபோகும் என்றும் அது போதிக்கிறது. நரகமும் பழையவைகளில் ஒன்றாக இருப்பாதினால் தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி அழிந்துபோகும்.
தேவன் கொடுமைப்படுத்துகிறவரா? தேவன் அவருடைய சத்துருக்களை நித்தியமாக அக்கினியில் உபத்திரவப்படுத்துவாரானால், யுத்த கொடுமைகளைச் செய்த மனிதர்களைக் காட்டிலும் மிகவும் தீயவராகவும் இரக்கமற்றவராகவும் இருப்பார். நித்தியமாக உபத்திரவப்படும் நரகம் என்பது மிகவும் கொடிய பாவியையும் நேசிக்கிற தேவனுக்குங்கூட நரகமாகவே இருக்கும்.

10. அக்கினி அவியும்போது என்ன மீந்திருக்கும்?
“இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” “துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” – மல்கியா 4:1,3.
பதில்: இன்று அநேகர் நம்புவதைப்போல துன்மார்க்கர் கல்நாரைப்போல (ஆஸ்பெஸ்டாசைப்போல) எரியமாட்டார்கள். மாறாக, எரிந்து முடிந்துபோகிற குப்பைகளைப்போல எரிந்துபோவார்கள் என்று வசனம் சொல்லுகிறதை கவனியுங்கள். “சுட்டெரிக்கும்” என்கிற வார்த்தை முழுமையை குறிக்கிறது. எரிந்து முடியும்போது சாம்பலைத் தவிர வேறு எதுவும் மீதமிருக்காது. துன்மார்க்கர் புகையாய் பிகைந்து போவார்கள் என்று சங்கீதம் 37:10,20 கூறுகிறது.
11. துன்மார்க்கர் நரகத்தில் சரீரத்தோடு நுழைவார்களா? அவர்களுடைய ஆத்துமாவும் சரீரமும் அழிந்துபோகுமா?

“உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.” “ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” – மத்தேயு 5:30; 10:28;
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” – எசேக்கியேல் 18:20.
பதில்: ஆமாம். உண்மையான உயிருள்ள மக்கள் நரக அக்கினிக்குள் சரீரத்தோடு நுழைவார்கள். அவர்களுடைய ஆத்துமாவும் சரீரமும் அழிக்கப்படும். வானத்திலிருந்து வரும் அக்கினி உண்மையான மக்கள்மேல் விழுந்து அவர்களை முற்றிலும் அழிக்கும்.

12. பிசாசு நரக அக்கினிக்குப் பொறுப்பாளியாக இருப்பானா?
“அவர்களை மோசம்போக்கின பிசாசானவன் … அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்” – வெளிப்படுத்தல் 20:10;
“உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன் … இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்” – எசேக்கியேல் 28:18,19.
பதில்: இல்லவே இல்லை. பிசாசு அக்கினியில் தள்ளப்படுவான். இது அவனை சாம்பலாக்கும்.
13. “பாதாளம்” என்று வேதாகமத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள வார்த்தை எரிகிற இடத்தை அல்லது தண்டனையைத்தான் எப்போதுமே குறிக்கிறதா?
பதில்: இல்லை. பாதாளம் என்கிற வார்த்தை வேதாகமத்தில் 54 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளில் 12 மாத்திரமே எரியும் இடத்தைக் குறிக்கிறது.
கல்லறையைக் குறிப்பிடுகிற “சியோல்” என்னும் வார்த்தையிலிருந்து 31 முறை:
புதிய ஏற்பாட்டில்:
கல்லறையை குறிக்கிற “ஹேசட்ஸ்” என்கிற வார்த்தையிலிருந்து 10 முறை; எரியும் இடம் என்கிற “கெகன்னா” விலிருந்து 12 முறை;
இருண்ட இடம் என்கிற “டார்டரஸ்” என்னும் வார்த்தையிலிருந்து 1 முறை:
ஆகமொத்தம் 54 முறை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
குறிப்பு: கெகன்னா என்கிற கிரேக்க வார்த்தை, “கி-ஹின்னோம்” என்கிற எபிரெய வார்த்தையின் மொழிபெயர்ப்பே. “கி-ஹின்னோம்” என்றால், “இன்னோமின் பள்ளத்தாக்கு” என்று பொருள். எருசலேமிற்கு தென்மேற்காக இருக்கிற இந்தப் பள்ளத்தாக்கில் மரித்த மிருகங்களும் குப்பைகளும் மற்ற கூழங்களும் குவிக்கப்பட்டன. இன்றைக்கு இருக்கிற நவீன கழிப்பிடங்களில் எரிவைதைப்போல அங்கு தொடர்ச்சியான அக்கினி எரிந்துகொண்டிருக்கிறது. கெகன்னா அல்லது இன்னோமின் பள்ளத்தாக்கு என்கிறதை, காலங்களின் முடிவில் இரட்சிப்பை இழைந்துபோனவர்களை அழிக்கிற அக்கினிக்கு அடையாளமாக வேதாகமம் உபயோகிக்கிறது. கெகன்னா என்பது முடிந்துபோகாத அக்கினி அல்ல. அப்படி இருந்தால் இன்றைக்கும் எருசலேமின் தென்மேற்குப்பகுதியில் அது எரிந்துகொண்டிருக்கும். அதைப்போலவே நரக அக்கினி என்பதும் முடிந்துபோகாத ஒன்று அல்ல.

14. நரக அக்கினியைக்குறித்த தேவனுடைய உண்மையான நோக்கம் என்ன?
“அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்:
சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” – மத்தேயு 25:41;
“ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்” – வெளிப்படுத்தல் 20:15; “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்;” “கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்” – சங்கீதம் 37:10,20.
பதில்: சாத்தானையும் அனைத்து பாவங்களையும் பாவிகளையும் அழித்து, உலகத்தை நித்தியத்திற்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதே நரகத்தைக்குறித்த தேவனுடைய நோக்கமாக இருக்கிறது. இந்த பூமியில் ஒரு பாவி விட்டுவைக்கப்பட்டாலும், அவன் அண்ட சராசரத்தையும் என்றைக்கும் பயமுறுத்துகிற ஒரு வைரஸ் கிருமியாக இருப்பான். பாவத்தைப் பிரித்து என்றென்றைக்கும் அதை துடைத்துப்போடுவதே தேவனுடைய திட்டம்.
நித்திய நரகம் பாவத்தை நிலைக்கச் செய்யும்
நித்திய அக்கினியின் உபத்திரவம் என்பது பாவத்தை நிலைக்கச் செய்து அதை முற்றிலும் அழிப்பதை கூடாததாக்கிவிடும். எனவே நித்திய அக்கினி என்பது தேவனுடைய திட்டமே அல்ல. அப்படிப்பட்ட பயங்கரமான கொள்கை அன்பான தெய்வத்தின் பரிசுத்த நாமத்திற்கு எதிரான தூஷணமே. நம்முடைய அன்பான சிருஷ்டிகரை பயங்கரமான கொடுங்கோலனாக படம் பிடித்துக் காட்டுவதில் பிசாசிற்கு அதிக மகிழ்ச்சி. அப்படிப்பட்ட போதனைகளிலிருந்து அவனுக்கு மாத்திரமே நன்மைகள் கிடைக்கிறது.
நித்திய அக்கினி என்பது மனிதன் உண்டாக்கின ஒரு போதனை
நித்திய உபத்திரவத்தின் நரகம் என்கிற போதனை வேதாகமத்திலிருந்து துவங்கினதல்ல; பிசாசினால் தவறான வழியில் நடத்தப்பட்ட மனிதர்களிடமிருந்தே (பெரும்பாலும் கவனக்குறைவாக செய்திருக்கலாம்) தோன்றியிருக்கிறது. மேலும் நரகத்திற்கு பயப்பட்டதினால் எவரும் பரலோகத்தில் இருக்கப்போவதில்லை. கிறிஸ்துவை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிவதினாலேயே மக்கள் இராட்சிக்கப்படுகிறார்கள்.
15. பாவிகளை அழிப்பதென்பது தேவனுடைய குணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று இல்லையா?

“நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார்” – எசேக்கியேல் 33:11;
“மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்” – லூக்கா 9:56;
“கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும் கோபங்கொள்வார்” – ஏசாயா 28:21.

பதில்: ஆமாம். தேவனுடைய செய்கை எப்போதுமே அழிப்பதல்ல, காப்பதுதான். துன்மார்க்கரை நரக அக்கினியில் அழிப்பதென்பது தேவனுடைய குணத்திற்கு அப்பாற்பட்டது.
எனவே வேதாகமம் அதை “அபூர்வ செய்கை” என்று அழைக்கிறது. துன்மார்க்கரின் அழிவில் தேவனுடைய அன்பான இருதயம் துடிக்கும். ஒவ்வொரு ஆத்துமாவையும் காக்கும்படி எவ்வளவு ஜாக்கிரதையாக அவர் கிரியை செய்கிறார்! ஆனால் ஒருவர் அவருடைய அன்பை உதறித்தள்ளி பாவத்தோடு இணைந்திருக்கும்போது, அண்டசராசரத்திலிருந்தும் பயங்கரமான தீமை என்கிற பாவத்தை கடைசிநாளில் அக்கினியால் அழிக்கும்போது அதோடுகூட பாவிகளையும் அழிப்பதைத்தவிர தேவனுக்கு வேறு தெரிந்துகொள்ளுதல் இல்லை.
16. நரகத்திற்குப்பின்பு இந்த பூமியைக் குறித்தும் தேவனுடைய பிள்ளைகளைக் குறித்தும் அவர் வைத்திருக்கும் திட்டமென்ன?

“அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.” – நாகூம் 1:9;
“இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” – ஏசாயா 65:17;
“இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின” – வெளிப்படுத்தல் 21:3,4.

பதில்: நரக அக்கினி அணைந்துபோனபின்னர் தேவன் புதிய பூமியை சிருஷ்டித்து, பாவம் நுழைவதற்குமுன் ஏதேனில் இருந்த அனைத்து அழகோடும் மகிமையோடும் அதை தமது பிள்ளைகளுக்கு திரும்ப கொடுப்பார்.
பாவம் மற்றும் கடந்த காலத்தின் அனைத்து பயங்கரங்களும் மறக்கப்பட்டிருக்கும். வலியும், மரணமும், துயரமும், ஆபத்தும், கண்ணீரும், வியாதியும், ஏமாற்றமும், துக்கமும், அனைத்து பாவமும் என்றென்றுமாக அழிக்கப்படும்.
பாவம் மீண்டும் எழும்பாது
பாவம் மீண்டும் ஒருபோதும் எழும்பாது என்று தேவன் வாக்குக்கொடுக்கிறார். அவருடைய மக்கள் பரிபூரண அன்பாலும், சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும், திருப்தியாலும் நிறையப்படுவார்கள். முழுமையான சந்தோஷம்கொண்ட அவர்களுடைய வாழ்க்கை இன்னும் அதிக மகிமையுள்ளதாகவும், வெறும் வார்த்தைகள் விவரிக்கக்கூடாத ஆச்சரியம்கொண்டதாகவும் இருக்கும். நரகத்தினுடைய உண்மையான துயரம் பரலோகத்தை இழந்துபோனதே. இந்த மேன்மையான இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க தவறின ஒரு நபர் தன் வாழ்க்கையில் மிக சோகமான தெரிந்துகொள்ளுதலைச் செய்திருக்கிறார்.
17. துன்மார்க்கரை தேவன் நித்தியத்திற்குமாக நரக அக்கினியில தண்டிக்கமாட்டார் என்பதை அறிந்துகொண்டதினால் நன்றியுள்ளவர்களாக இருக்கிரீர்களா?
உங்கள் பதில்: ______________________________
சிந்தனைக் கேள்விகள்
1. வேதாகமம் நித்தியகால உபத்திரவத்தைக் குறித்து போதிக்கவில்லையா?
பதில்: இல்லை. நித்தியகால உபத்திரவம் என்கிற வார்த்தை வேதாகமத்தில் இல்லை.
2. அப்படியானால் துன்மார்க்கர் நித்திய அக்கினியில் அழிக்கப்படுவார்கள் என்று வேதாகமம் ஏன் சொல்லுகிறது?
பதில்: நித்திய அக்கினி என்பது அணைக்கப்படக்கூடாத ஒன்றாயிருந்து, அனைத்தையும் சாம்பலாக்கும்போது தானாகவே அணைந்துபோகிற ஒன்று. எருசலேம் நித்திய அக்கினியால் அழிக்கப்படும் என்று எரேமியா 17:27 சொல்லுகிறது. “கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு,” (2 நாளாகமம் 36:19-21) அக்கினி நகரத்தை எரித்து அதைப் பாழாக்கி விட்டது என்று வேதாகமம் சொல்லுகிறது. எருசலேம் இன்றைக்கு எரிந்துகொண்டிருக்கவில்லையாதலால், இந்த அக்கினி அணைந்துபோய்விட்டது என்பது நமக்குத் தெரியும்.
3. துன்மார்க்கர் நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்று மத்தேயு 25:46 சொல்லவில்லையா?
பதில்: ஆக்கினை என்கிற வார்த்தையை கவனியுங்கள். தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்றில்லை. தண்டிக்கப்பட்டுக்கொண்டிருப்பார்கள் என்பது தொடர்ந்து தண்டிக்கப்படுவதாயிருக்க, ஆக்கினை என்பது ஒரு செயல். துன்மார்க்கரின் ஆக்கினை மரணம். இந்த மரணம் என்பது நித்தியமான ஒன்றாக இருக்கும்.
4. “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்” என்கிற மத்தேயு 10:28ஐ விளக்கமுடியுமா?
பதில்: ஆத்துமா என்கிற வார்த்தை வேதாகமத்தில் 3 பொருட்களை உடையதாயிருக்கிறது.
- உயிருள்ள நபர் – ஆதியாகமம் 2:7
- மனம் – சங்கீதம் 139:14
- உயிர் – 1 சாமுவேல் 18:1.
இங்கே அது தமது இராஜ்யத்திற்குள் வருகிற அனைவருக்கும் தேவன் கொடுக்கிற நித்திய ஜீவனைக் குறிப்பிடுகிறது. ஒருவரும் அதை அவரிடமிருந்து எடுக்க முடியாது. மத்தேயு 10:28ன் கடைசி பகுதி ஆத்துமாவும் சரீரமும் நரகத்தில் அழிந்துபோகும் என்று சொல்லுகிறது.
5. துன்மார்க்கருக்கு நித்திய அக்கினி இருக்கிறதாக மத்தேயு 25:41 பேசுகிறதே. அது அணைந்துபோகுமா?
பதில்: ஆமாம். வேதாகமத்தை பொறுத்தவரையில் அது அணைந்துபோகும். வேதாகமமே தன்னை விளக்க நாம் அனுமதிக்கவேண்டும். சோதோமும் கொமோராவும் நித்திய அக்கினியினால் அழிக்கப்பட்டது (யூதா 1:7).
அந்த அக்கினி அவைகளை “சாம்பலாக்கி,” “பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு” (2 பேதுரு 2:6) எச்சரிப்பாக வைத்தது. இந்தப் பட்டணங்கள் இன்று எரிந்துகொண்டில்லை. அனைத்தும் எரிக்கப்பட்டபின் அந்த அக்கினி அணைந்துபோனது. அதைப்போலவே இந்த நித்திய அக்கினியும் துன்மார்க்கர் அனைவரையும் சாம்பலாக்கினபிறகு அணைந்துபோகும் (மல்கியா 4:3).
அக்கினியின் விளைவுகள் நித்திமானதாக இருக்கும். எரிதல் நித்தியமானதல்ல.
6. லூக்கா 16:19-31 வரை கொடுக்கப்பட்டிருக்கிற ஐசுவரியவான் மற்றும் லாசருவின் கதை நித்திய உபத்திரவம் இருக்கிற நரகத்தைக்குறித்து போதிக்கவில்லையா?
பதில்: இல்லை! அது ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய பாடத்தை வலியுறுத்தற்காக இயேசு பயன்படுத்திய உவமையாகும். இக்கதையின் கருத்து வசனம் 31ல் கூறப்பட்டுள்ளது. உவமைகள் அவை கூறப்பட்டவண்ணம் அப்படியே எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. அவ்வாறு செய்தால், மரங்கள் பேசுமென்று நாம் நம்பிவிடுவோம்! (நியாயதிபதிகள் 9:8-15ஐ படிக்கவும்). லூக்கா 16:19-31 ஒரு உவமை என்பதைத் தெளிவுபடுத்த ஒரு சில உண்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அ. பரலோகம் என்பது ஆபிரகாமின் மடியல்ல (எபிரெயர் 11:8-10,16).
ஆ. நரகத்திலிருக்கிற மக்கள் பரலோகத்திலிருக்கிறவர்களோடு பேசமுடியாது. (ஏசாயா 65:17).
இ் மரித்தவர்கள் தங்கள் கல்லறைகளில் இருக்கிறார்கள் (யோபு 17:13; யோவான் 5:28,29). மரணத்தில் சரீரம் நரகத்திற்குப் போகிறதில்லை என்று நாம் படிக்கிறோம். எனினும் ஐசுவரியவான் சரீரத்தோடு-கண்களோடும் நாவோடும் மற்ற அவயவங்களோடும் நரகத்தில் இருந்ததாகக் காண்கிறோம். வேதாகமம் சொல்லுவதைப்போல சரீரம் கல்லறையில் இருக்கிறதென்பது மிகவும் வெளிப்படையாக இருக்கிறது.
ஈ. மனிதர்கள் மரணத்திலல்ல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலேயே பதிலளிக்கப்படுவார்கள் (வெளிப்படுத்தல் 22:11,12)
உ. இரட்சிப்பை இழந்துபோனவர்கள் மரிக்கும்போதல்ல, உலகத்தின் முடிவிலேயே நரகத்தில் தண்டிக்கப்படுகிறார்கள் (மத்தேயு 13:40-42). இந்தக் கதையின் முக்கிய கருத்து லூக்கா 16:31ல் இருக்கிறது. உவமானங்கள் அப்படியே நிஜமாக எடுத்துக்கொள்ளப்படமுடியாது. அப்படி எடுப்போமானால், மரங்கள் பேசுகின்றன என்று நம்பவேண்டும் (நியாயாதிபதிகள் 9:8-15 வரையிலும் இருப்பதை கவனியுங்கள்).
7. ஆனால் துன்மார்க்கர் என்றென்றைக்கும் வாதிக்கப்படுவார்கள் என்று வேதாகமம் பேசுகிறதே.
பதில்: வேதாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதன்படி என்றென்றைக்கும் என்கிற வார்த்தை ஒரு குறிப்பிட்ட காலத்தையே (முடிவுள்ள அல்லது முடிவற்ற) குறிப்பிடுகிறது. அது ஏற்கனவே முடிந்துபோன சம்பவங்களோடு இணைந்து 56 முறைகள் வேதாகமத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஒத்த வாக்கியத்தில் என்றென்றைக்கும் என்கிற வார்த்தையைத் தேடிப்பாருங்கள். இது உயரம் என்கிற வார்த்தையைப் போன்றது. மனிதரையோ மரங்களையோ அல்லது மலைகளையோ குறித்துப் பேசும்போது உயரம் என்கிற வார்த்தை எப்படிப்பட்டதோ, அப்படிப்பட்டதே இந்த வார்த்தையும். யோனா 2:6ல் என்றென்றும் என்கிற வார்த்தை 3 இரவையும் பகலையும் குறிக்கிறது. (யோனா 1:17ஐ பார்க்கவும்). உபாகமம் 23:3, ல் பத்துத் தலைமுறைகளை இது குறிக்கிறது. மனிதனுடைய சம்பவத்தில் இது அவன் “உயிரோடிருக்கும் வரையிலும்” அல்லது “மரிக்கும் வரையிலும்” என்று அர்த்தங்கொடுக்கிறது. (1 சாமுவேல் 1:22,28, யாத்திராகமம் 21:6, சங்கீதம் 48:14ஐ பார்க்கவும்). எனவே துன்மார்க்கர் உயிரோடிருக்கும்வரையிலும் அல்லது மரிக்கும்வரையிலும் அக்கினியில் எரிவார்கள். இந்த அக்கினி தண்டனை ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பாவத்தின் அளவிற்குத்தக்கதாக இருக்கும். ஆனாலும் தண்டனை முடிந்தபின்பு அக்கினி அணைந்துபோகும். பிசாசினுடைய மற்ற கண்டுபிடிப்புகளைவிட நித்திய ஆக்கினை என்கிற கண்டுபிடிப்பு, மக்களை தேவன் இல்லை என்கிற நாத்திகத்திற்கும் மடத்தனத்திற்கும் அதிகமாக நடத்திச் சென்றிருக்கிறது. அது இளகிய கிருபைநிறைந்த பரலோகத் தகப்பனுடைய அன்பான குணத்தை தூஷிக்கிறதாயிருந்து, கிறிஸ்தவத்திற்கு சொல்லமுடியாத தீங்கை இழைத்திருக்கிறது.
கேள்விகள்
1. பாவிகள் நரக அக்கினியில் தள்ளப்படுவது: (1)
_____ மரிக்கும்போது.
_____ உலகத்தின் முடிவில்.
_____ பிசாசினால்.
2. நரக அக்கினியில் பாவிகள் பெரும் பிரதிபலன்: (1)
_____ மரணம்.
_____ நித்திய உபத்திரவம்.
_____ அதற்குப் பொறுப்பாளியான பிசாசினால் உபத்திரவம்.
3. நரக அக்கினி: (1)
_____ தேவனால் இந்த முழு உலகமும் கொளுத்தப்படுவது.
_____ இப்போது எரிந்துகொண்டிருப்பது.
_____ முடிவில்லாது நித்தியத்திற்கும் எரிந்துகொண்டிருக்கும்.
4. மரித்த பாவிகள் எங்கே இருக்கிறார்கள்? (1)
_____ உத்தரிக்கும் ஸ்தலத்தில்.
_____ நரக அக்கினியில்.
_____ தங்கள் கல்லறைகளில்.
5. இன்றைய நரக மக்கள் தொகை: (1)
_____ பூஜியம்.
_____ இலட்சக்கணக்கில் இருக்கும்.
_____ சொல்லவே முடியாது.
6. நரக அக்கினி: (1)
_____ துன்மார்க்கரின் சரீரத்தை மாத்திரம் அழிக்கும்.
_____ நித்தியத்திற்குமாக துன்மார்க்கரின் ஆத்துமாக்களை உபத்திரவப்படுத்தும்.
_____ பாவிகளுடைய ஆத்துமாவையும் சரீரத்தையும் அழித்து, சாம்பலாக்கி பின்னர் அணைந்துபோகும்.
7. நித்திய நரக ஆக்கினை என்பது: (1)
_____ தேவனுடைய மாபெரும் திட்டத்தில் மிக முக்கியமான ஒன்று.
_____ வேதனைப்படுகிற பிள்ளைகளை பார்க்க விரும்பாத தேவனுடைய பரிசுத்த அன்பான நாமத்திற்கு தூஷணத்தைக் கொண்டுவரும் பிசாசின் மூல உபதேசம்.
_____ சாத்தானுக்கு நித்தியத்திற்குமாக ஒரு வேலையைக் கொடுக்கிறது.
8. வேதாகமத்தில் நரகம் என்பது: (1)
( ) எப்போதுமே எரியும் இடத்தைக் குறிப்பிடுகிறது.
( ) அநேக அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று கல்லறை என்பது.
( ) பூமிக்குள்ளிருக்கும் சாத்தானுடைய உபத்திரவத்தின் குகைகளைக் குறிப்பிடுகிறது.
9. நரகத்தின் நோக்கம்: (1)
_____ தேவனுடைய சத்துருக்களுக்கு பிரதிபலன் கொடுத்து உபத்திரவப் படுத்துவது.
_____ நல்லவர்களாயிருப்பதற்காக மக்களை பயமுறுத்துவது.
_____ பாவத்தையும் தீமையையும் அண்ட சராசரத்திலிருந்தும் முற்றிலும் அழித்து, நீதிமான்களை என்றைக்கும் பாதுகாப்பாக வைப்பது.
10. நரகத்தில் மக்களை அழிப்பது: (1)
_____ பரலோகத்தின் மாபெரும் தேவனுக்கு இன்பமானது.
_____ அது மக்களை பாதுகாக்கும் தேவ திட்டத்திற்கு அந்நியமாகையால். தேவனுடைய அபூர்வ செய்கை என்று அழைக்கப்படுகிறது.
_____ தேவனுடைய திட்டத்தோடு இணைந்த பிசாசின் வேலை அது.
11. நரக அக்கினி அணைந்தபிறகு: (1)
_____ தேவன் சாத்தானை வெகுதூரத்திற்குத் துரத்திவிடுவார்.
_____ பாவம் மீண்டும் எழும்பாத ஒரு புதிய பூமியை உண்டாக்கி தமது மக்களுக்குக் கொடுப்பார்.
_____ பாவம் மீண்டும் எழும்பும் என்கிற பயத்தில் நீதிமான்கள் வசிப்பார்கள்.
12. ஐசுவரியவான் மற்றும் லாசருவின் கதை: (1)
_____ ஒரு உவமானம்; அதை மெய்யான சம்பவமாக எடுக்கக்கூடாது.
_____ நித்திய ஆக்கினையின் போதனைக்கான வேதாகம ஆதாரம்.
_____ நரகத்திலிருக்கும் ஆத்துமாக்கள் பரலோகத்திலிருக்கும் ஆத்துமாக்களோடு பேசமுடியும் என்று நிர௹பிக்கிறது.
13. “என்றைக்கும்” என்று வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ள வார்த்தை: (1)
_____ முடிவில்லாத காலத்தை குறிக்கிறது.
_____ அது இரகசியமானது. எனவே புரிந்துகொள்ளப்படமுடியாது.
_____ பொதுவாக மனிதனுடைய வாழ்நாளை அல்லது அவன் மரிக்கும் வரையிலுள்ள காலத்தை குறிக்கிறது.
14. துன்மார்க்கரை தேவன் நித்தியத்திற்குமாக நரக அக்கினியில் தண்டிக்கமாட்டார்கள் என்பதை அறிந்து நன்றியுள்ளவராய் இருக்கிறேன்.
_____ ஆம்.
_____ இல்லை.