பேக்ட்ஸ் வேதபாடங்கள் 6
நூற்றாண்டுகளுக்குமுன்பு தேவன் தமது பிரமாணத்தை கற்பலகைகளில் எழுதினார். அவைகள் இன்றைக்கும் கைக்கொள்ளப்படவேண்டியதிருக்கிறது.

தேவனுடைய பிரமாணத்தின் எந்த ஒரு பகுதியை மீறுவதும் எதிர் விளைவுகளை கொண்டுவரும் என்பது நிச்சயமான உண்மை. நம் நகரங்களில் குற்றங்கள் மிதமிஞ்சிக்கொண்டிருக்க, சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், தேச சட்டங்களுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்ற உணர்வு நமக்கு வரவில்லையா? நல்லது. அதே கொள்கைதான் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரமாணமாகிய பத்துக் கற்பனைகளுக்கும் பொருந்தும். அவைகள் பத்து ஆலோசனைகள், பத்து பரிந்துரைகள் என்றோ அல்லது பத்து மாபெரும் கருத்துக்கள் என்றோ அழைக்கப்படவில்லை. நம்முடைய நித்தியப்பணயத்தில் இருப்பதால், ஒரு சில நிமிடங்கள் செலவுசெய்து, நம்முடைய பொறுப்பை நாம் தீவிரமாக கவனிக்கவேண்டும்.
1. உண்மையில் தேவன்தான் பத்துக்கற்பனைகளை எழுதினாரா?

“அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.” “அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது” – யாத்திராகமம் 31:18; 32:16.
பதில்: ஆமாம். பரலோகத்தின் மாபெரும் தேவன்தாமே பத்துப் பிரமாணங்களை கற்பலகைகளில் தமது சொந்த விரலினால் எழுதினார்.

2. பாவத்தைக்குறித்த தேவனுடைய விளக்கம் என்ன?
“நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” – 1 யோவான் 3:4.
பதில்: தேவனுடைய பத்துப் பிரமாணங்களை மீறுவதே பாவம். தேவனுடைய பிரமாணங்கள் பூரணமானவைகளாக இருப்பதால் (சங்கீதம் 19:7)
அனைத்து பாவத்தையும் அது உள்ளடக்குகிறது. தேவனுடைய பத்துப்பிரமாணங்களுக்கு வெளியே எந்த ஒரு பாவத்தையும் செய்யமுடியாது. “எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” – பிரசங்கி 12:13. எவரும் விடப்படவில்லை.
3. தேவன் ஏன் நமக்கு பத்துக் கற்கனைகளைக் கொடுத்தார்?
“வேதத்தைக் காக்கிறவனே பாக்கியவான்” – நீதிமொழிகள் 29:18;
“உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்” – நீதிமொழிகள் 3:1,2.
பதில் A: மனநிறைவான வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக:- சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நீண்ட வாழ்க்கையையும், மனநிறைவையும், சாதனைகளையும் மற்றும் நம் இருதயம் ஏங்குகிற அனைத்து ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கும்படியாக தேவன் நம்மை சிருஷ்டித்தார்.

இந்த மெய்யான உன்னத சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க பின்பற்றவேண்டிய சரியான பாதையை காட்டுகிற வரைபடமாக தேவனுடைய பிரமாணம் இருக்கிறது.
“பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்” – ரோமர் 3:20; “பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே” – ரோமர் 7:7.
பதில் B: நன்மைக்கும் தீமைக்குமிடையே வேறுபாட்டைக் காண:- தேவனுடைய பிரமாணம் ஒரு கண்ணாடியைப்போன்றது (யாக்கோபு 1:23-25). என் முகத்திலிருக்கும் அழுக்கை கண்ணாடி காண்பிப்பதைப்போல, என் வாழ்க்கையிலிருக்கும் தவறுகளை அது சுட்டிக்காண்பிக்கிறது. ஒரு நபர் தன் வாழ்க்கையில் பாவம் செய்கிறாரா என்கிறதை கண்டுபிடிக்கும் ஒரே வழி, தேவனுடைய பிரமாணம் என்கிற கண்ணாடியின்முன் தன் வாழ்க்கையை கவனமாக ஆராய்வதுதான். கலப்படமான, அமிழ்ந்துகொண்டிருக்கிற இந்த தலைமுறையினருக்கான நம்பிக்கை, தேவனுடைய பத்துக் கற்பனைனகளில் காணப்படுகிறது. அதுவே நன்மைக்கும் தீமைக்குமிடையே இருக்கிற கோடு.
“….எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்” – உபாகமம் 6:24; “என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன். உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப்போடுகிறீர்” – சங்கீதம் 119:117,118.
பதில் C: ஆபத்திலிருந்து காப்பதற்காக:- மிருகக்காட்சி சாலையில் மூர்க்கமான அழிவிற்கேதுவான மிருகங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிற பலமான கூண்டாக தேவனுடைய பிரமாணம் இருக்கிறது, அது நம்மை அசுத்தத்திலிருந்தும், பொய்யிலிருந்தும், கொலையிலிருந்தும், விக்கிரகாரதனையிலிருந்தும், திருட்டிலிருந்தும், இன்னும் வாழ்க்கையையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அழிக்கிற அநேக தீமைகளிலிருந்தும் பாதுகாக்கிறது. அனைத்து நல்ல சட்டங்களும் பாதுகாப்பதற்காகவே. தேவனுடைய பிரமாணம் அதற்கு விதிவிலக்கு அல்ல.
“அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்” (1 யோவான் 2:3)
பதில் D: தேவனை அறிவதற்கு இது உதவுகிறது.
விசேஷக்குறிப்பு: தேவனுடைய பிரமாணத்தின் நித்திய கொள்கைகள் நம்மை சிருஷ்டித்த தேவனால் ஒவ்வொரு மனிதனுடைய இயல்பிலும் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. எழுத்து மங்கலாகவோ அல்லது களங்கமடைந்ததாகவோ இருக்கலாம். எனினும் அது இன்னமும் அங்கே இருக்கிறது. அதாவது, தேவன் இந்தக் கொள்கைகளை எழுதியிருக்கிற உள்ளான இயல்பிற்கு இசைவாக வாழ விரும்பாதபட்சத்தில் உங்களால் மெய்யான சமாதானத்தைக் காண இயலாது. அந்த பிரமாணங்களுக்கு இணக்கமாக வாழவே நாம் உண்டாக்கப்பட்டோம். பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டாதபோது அது ஆபத்தான தீவிர பிரச்சனைகளுக்கு நம்மை நடத்திச்செல்லுவதைப்போலவே, தேவனுடைய பிரமாணங்களை புறக்கணிக்கும்போது அதன் விளைவு எப்போதுமே பதட்டமும், அமைதியின்மையும், சோகமுமாகத்தான் இருக்கும்.

4. ஏன் தேவனுடைய பிரமாணம் எனக்குத் தனிப்பட்ட முறையில் மிக அதிக முக்கியம்?
“சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்” – யாக்கோபு 2:12.
பதில்: பரலோக நியாயத்தீர்ப்பில் தேவன் பத்துப் பிரமாணங்களைக் கொண்டுதான் நம்மை நியாயந்தீர்க்கிறார் என்பதினால், அவை மிகவும் முக்கியம். அந்தத் தரத்திற்கு எதிராக உங்கள் நிலை என்ன? இது வாழ்வா சாவா என்கிற விஷயம்.
5. தேவனுடைய பிரமாணம் (பத்துக் கற்பனைகள்) எப்போதாகிலும் மாற்றப்படவோ அல்லது அழிக்கப்படவோ கூடுமா?
“வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப்போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்” – லு|க்கா 16:17;
“என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்,” “அவருடைய கட்டளைகளெல்லாம் உணமையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள்” – சங்கீதம் 89:34; 111:7,8.
பதில்: கூடவே கூடாது. வேதாகமம் இந்தக் கருத்தில் மிகத்தெளிவாக இருக்கிறது. மாற்றப்படக்கூடுமானால், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தவுடனேயே, மீறப்பட்ட பிரமாணத்தின் தண்டனையை சுமக்கும்படி தமது குமாரனை மரிக்க அனுப்புவதற்குப்பதிலாக, அவர் பிரமாணத்தில் மாற்றங்கள் செய்திருப்பார். ஆனால் இது கூடாதகாரியம். ஏனெனில் அவ்வப்போது இணைக்கப்படுகிற சட்டங்களையும் ஒழுங்குகளையும் கொண்டதல்ல கற்பனைகள். உண்மையில் தேவன் இருக்கும்வரையிலும் இருக்கக்கூடிய வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய பரிசுத்த குணங்களின் கொள்கைகள் அவை. மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணையில் தேவனுக்கும் அவருடைய பிரமாணத்திற்கும் ஒரே குணம் இருக்கிறதை கவனியுங்கள். அப்படியென்றால் என்னவென்று புரிகிறதா? எழுதப்பட்ட தேவனுடைய குணங்களே பத்துப்பிரமாணங்கள். நாம் புரிந்துகொள்ளுவதற்காக அவை எழுதப்பட்டன. தேவனைப் பரலோகத்திலிருந்து இழுத்து மாற்றக்கூடுமானால் பிரமாணங்களும் மாற்றப்படமுடியும். (பரிசுத்த வாழ்க்கைக்கு மாதிரியாக இருக்கிற) பிரமாணங்கள் மனிதனுக்கு எப்படிப்பட்டவை என்பதைக் காண்பிக்கவே இயேசு வந்தார். தேவனுடைய குணம் ஒருபோதும் மாறாது. அவருடைய பிரமாணமும் மாற்றப்படக் கூடாது. எனவே அது மனித மொழியில் இருக்கும் அவருடைய எழுதப்பட்ட குணம்.
| தேவன் | அவருடைய பிரமாணம் | |
|---|---|---|
| நல்லவர் | லுக்கா 18:19 | 1 தீமோத்தேயு 1:8 |
| பரிசுத்தமானவர் | ஏசாயா 5:16 | ரோமர் 7:12 |
| பூரணமானவர் | மத்தேயு 5:48 | சங்கீதம் 19:7 |
| தூய்மையானவர் | 1 யோவான் 3:2,3 | சங்கீதம் 19:8 |
| நீதியானவர் | உபாகமம் 32:4 | ரோமர் 7:12 |
| உண்மையானவர் | யோவான் 3:33 | சங்கீதம் 19:9 |
| ஆவிக்குரியவர் | 1 கொரிந்தியர் 10:4 | ரோமர் 7:14 |
| நீதியானவர் | எரேமியா 23:6 | சங்கீதம் 119:172 |
| நம்பிக்கைக்குரியவர் | 1 கொரிந்தியர் 1:9 | சங்கீதம் 119:86 |
| அன்பானவர் | 1 யோவான் 4:8 | ரோமர் 13:10 |
| மாற்றக்கூடாதவர் | யாக்கோபு 1:17 | மத்தேயு 5:18 |
| நித்தியமானவர் | ஆதியாகமம் 21:33 | சங்கீதம் 111:7,8 |
6. இயேசு இந்த பூமியில் இருந்தபோது தேவனுடைய பிரமாணத்தை ஒழித்தாரா?
“நியாயப்பிரமாணத்தையானாலும்…. அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது” – மத்தேயு 5:17,18.
பதில்: இல்லவே இல்லை. பிரமாணத்தை அழிக்கிறதற்கு அல்ல மாறாக, அதை நிறைவேற்றவே (கைக்கொள்ளவே) தாம் வந்ததாக இயேசு குறிப்பாகக் கூறினார்.
பிரமாணத்தை ஒழிப்பதை விடுத்து, சரியான வாழ்க்கைக்கான பூரண வழிகாட்டியாக இயேசு அதை மேன்மைப்படுத்தினார் (ஏசாயா 42:21).

உதாரணமாக, கொலை செய்யாதிருப்பாயாக என்பது காரணமின்றி கோபப்படுகிறதையும் (மத்தேயு 5:21,22), வெறுப்பையும் (1 யோவான் 3:15) கடிந்துகொள்ளுகிறது என்றும், இச்சிப்பதே விபசாரத்திற்கு சமம் (மத்தேயு 5:27,28) என்றும் அவர் குறிப்பிட்டார். “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று அவர் கூறுகிறார்.

7. தேவனுடைய பிரமாணங்களில் ஒன்றை அறிந்தே மீறிக்கொண்டிருக்கிற மக்கள் இரட்சிக்கப்படுவார்களா?
“பாவத்தின் சம்பளம் மரணம்” – ரோமர் 6:23; “அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காக” – ஏசாயா 13:9; “ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்” – யாக்கோபு 2:10.
பதில்: இரட்சிக்கப்படமாட்டார்கள். அவர்கள் இரட்சிப்பை இழந்துபோவார்கள். தேவனிடத்திற்கும் பரிசுத்தமான வாழ்க்கைக்குமான வழியை கண்டுபிடிக்க நாம் உபயோகிக்கவேண்டிய வழிகாட்டியே பத்துப் பிரமாணங்கள். அதில் ஒரு பிரமாணத்தை நாம் நெகிழ்ந்தாலும், தெய்வீக மாதிரி அல்லது நகலின் ஒரு பகுதியை நிராகரிக்கிறோம். சங்கிலியின் ஒரு இணைப்பு அறுந்தாலும் அதன் முழு நோக்கமும் வீணாகிவிடும். தேவனுடைய கட்டளைகளில் ஒன்றை அறிந்து மீறும்போது நாம் பாவம் செய்கிறதாக (யாக்கோபு 4:17) வேதாகமம் சொல்லுகிறது. ஏனெனில் நமக்கான அவருடைய திட்டத்தை நாம் நிராகரிக்கிறோம். அவருடைய சித்தத்தை செய்கிறவர்கள் மாத்திரமே பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கமுடியும். பாவிகள் இராட்சிப்பை இழந்துபோவார்கள்.
8. பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதினால் யாராகிலும் இராட்சிக்கப்பட முடியுமா?
“எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” – ரோமர் 3:20;

“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இராட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” – எபேசியர் 2:8,9.
பதில்: இல்லை! இதற்கான பதில் தவறவிடக்கூடாதபடி தெளிவாக இருக்கிறது. பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதால் எவரும் இராட்சிக்கப்படுவதில்லை. இரட்சிப்பு கிருபையினால் மாத்திரமே வருகிறது; அது இயேசுவிடமிருந்து வரும் இலவச ஈவு. இந்த ஈவை, கிரியைகளினாலல்ல, விசுவாசத்தினாலேயே பெறுகிறோம். நம் வாழ்க்கையிலிருக்கும் பாவத்தைச் சுட்டிக் காட்டும் கண்ணாடியாகவே பிரமாணம் செயல்படுகிறது. பாவ சுத்திகரிப்பும் மன்னிப்பும் இயேசுவின் மூலமாக மாத்திரமே.

9. அப்படியானால் கிறிஸ்தவ குணத்தைப் பூரணப்படுத்துவதற்கு பிரமாணம் ஏன் அவசியம்?
“தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” – பிரசங்கி 12:13;
“பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்” – ரோமர் 3:20.
பதில்: கிறிஸ்தவனாக வாழ்வதற்கான மனிதனுடைய பூரண மாதிரி அல்லது முழுமையான கடமை தேவனுடைய பிரமாணத்தில் இருக்கிறது. தன்னுடைய சொந்த சட்டத்தை உண்டாக்கி, தன்னைத்தானே அளந்துகொண்டு, நான் 12 அடி உயரமாக இருக்கிறேன் என்று கூறின 6 வயது குழந்தையைப்போன்று, நம்முடைய சொந்தத் தரம் பாதுகாப்பானதல்ல. தேவனுடைய பிரமாணம் என்கிற கண்ணாடியான பரிபூரணத் தரத்தோடு என்னை ஒப்பிட்டு கவனமாக பார்க்காவிடில், நான் ஒரு பாவிதான் என்கிறதையே அறியாதிருப்பேன். பிசாசுகளைத் துரத்தி, தீர்க்கதரிசனம் கூறி, இயேசுவின் நாமத்தில் அநேக அற்புதங்களைச் செய்த இலட்சக்கணக்கானோர் இரட்சிப்பை இழந்துபோவார்கள் (மத்தேயு 7:21-23). ஏனெனில், அவர்கள் மாபெரும் பிரமாணம் என்கிற மாதிரியோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. எனவே, தாங்கள் நீதிமான்கள் எனவும் இரட்சிக்கப்பட்டவர்கள் எனவும் நினைத்துக்கொண்டிருக்க, அதற்கு மாறாக, அவர்கள் பாவிகளாகவும் இரட்சிப்பை இழந்தவர்களாகவும் இருப்பார்கள். “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்” – 1 யோவான் 2:3.
10. தேவனுடைய பிரமாணத்தை கைக்கொள்ள மனம்மாறிய கிறிஸ்தவனை மெய்யாகவே தகுதிப்படுத்துவது எது?
“என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்” – எபிரெயர் 8:10;

“கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” – பிலிப்பியர் 4:13;
“தம்முடைய குமாரனை…. அனுப்பி….நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்” – ரோமர் 8:3,4.
பதில்: கிறிஸ்து மனந்திரும்பின பாவிகளை மன்னிப்பது மாத்திரமல்ல, அவர்களில் தேவனுடைய சாயலை புதுப்பிக்கவும் செய்கிறார். உள்ளே தங்கியிருக்கும் அவருடைய சமூகத்தின் வல்லமையினால் தம்முடைய பிரமாணத்திற்கு இசைவாக அவர்களைக் கொண்டுவருகிறார். “செய்யாதிருப்பாயாக” என்ற கற்பனைகள், இயேசு உள்ளே வசித்திருந்து கட்டுப்படுத்துவதால் வாக்குறுதிகளாக மாறுகிறது. தேவனால் தமது பிரமாணத்தை மாற்றமுடியாது. அதினால் பாவியை இயேசுவின் வழியாக தம்முடைய பிரமாணத்திற்கு இசைவாக மாற்றிகொண்டுவர ஆசிர்வாதமான ஒரு ஏற்பாட்டை அவர் செய்திருக்கிறார்.

11. ஆனால் கிருபையின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிற விசுவாசமுள்ள கிறிஸ்தவன் பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதிலிருந்து விடுவிக்கப்படவில்லையா?
“நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே” – ரோமர் 6:14,15;
“அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே” – ரோமர் 3:31.
பதில்: அப்படியல்ல. வேதவாக்கியம் அதற்கு எதிரானதையே போதிக்கிறது. கிருபை என்பது ஒரு கைதிக்கு கொடுக்கப்படும் குடியரசுத்தலைவரின் மன்னிப்பைப் போன்றது. அது அவனை மன்னிக்கிறதே ஒழிய, சட்டத்தை (ஒன்றைக்கூட) மீறுவதற்கான சுதந்தரத்தைக் கொடுப்பதில்லை. மன்னிக்கப்பட்ட மனிதன் கிருபையின்கீழ் வாழ்ந்தவனாக, சட்டத்தைக் கைக்கொள்ள இரண்டுமடங்கு கடமைப்பட்டிருக்கிறான். தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள மறுக்கிற ஒரு நபர் கிருபையின்கீழ் வாழ்கிறதாக சொல்லும்போது தவறிழைக்கிறார். அவர் கிருபையின்மையின்கீழேயே வாழ்கிறார்.
12. தேவனுடைய பத்துக் கற்பனைகளும் புதிய ஏற்பாட்டில் மீண்டும் உறுதிபண்ணப்பட்டுள்ளதா?
பதில்: ஆம்! மிகத் தெளிவாகவே உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை மிக கவனமாக கவனியுங்கள்.

1. “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” – மத்தேயு 4:10.
2. “நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி” – 1 யோவான் 5:21;
“நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது” – அப்போஸ்தலர் 17:29.
3. “தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு” – 1 தீமோத்தேயு 6:1.
4. “தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.” “தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்” – எபிரெயர் 4:4,9,10.
5. “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” – மத்தேயு 19:18.
6. “கொலை செய்யாதிருப்பாயாக” – ரோமர் 13:9.
7. “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக” – மத்தேயு 19:18.
8. “களவு செய்யாதிருப்பாயாக” – ரோமர் 13:9.
9. “பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக” – ரோமர் 13:9.
10. “இச்சியாதிருப்பாயாக” – ரோமர் 7:7.
1. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்” – யாத்திராகமம் 20:3.
2. “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
பழைய ஏற்பாட்டில் தேவனுடைய பிரமாணம்.
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலை முறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்” – யாத்திராகமம் 20:4-6.
3. “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்” – யாத்திரகமம் 20:7.
4. “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரானானலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்” – யாத்திரகமம் 20:8-11.
5. “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” – யாத்திராகமம் 20:12.
6. “கொலை செய்யாதிருப்பாயாக” – யாத்திராகமம் 20:13.
7. “விபசாரம் செய்யாதிருப்பாயாக” – யாத்திராகமம் 20:14.
8. “களவு செய்யாதிருப்பாயாக” – 20:15.
9. “பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக” – யாத்திராகமம் 20:16.
10. “பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக” – யாத்திராகமம் 20:17.

13. தேவனுடைய பிரமாணமும் மோசேயின் பிரமாணமும் ஒன்றா?
பதில்: இல்லை. அவைகள் ஒன்று அல்ல.
குறிப்பு: மோசேயின் பிரமாணம் பழைய ஏற்பாட்டின் தற்காலிக சடங்குப்பிரமாணம். அது பலிகள், ஆசாரியத்துவம், சடங்கு, போஜன மற்றும் பானபலிகளை ஒழுங்கு படுத்தியது. இவைகளெல்லாம் சிலுவையை நிழலாகக்காட்டி, கிறிஸ்துவின் பலியைச் காட்டின. “சந்ததி வருமளவும்” இந்தப் பிரமாணம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டது. அந்த சந்ததி கிறிஸ்துவே (கலா. 3:16,19). கிறிஸ்து மரித்தபோது இந்தப் பிரமாணம் முடிவிற்கு வந்தது. ஆனால் பத்துக் கற்பனைகள் (தேவனுடைய பிரமாணம்) “என்றென்றைக்குமுள்ள சமாகாலங்களுக்கும் உறுதியானவைகள்” – சங்கீதம் 111:8. தானியேல் 9:10,11ல் இரண்டு வகையான பிரமாணங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.
விசேஷக் குறிப்பு: பாவம் இருக்கும் வரையிலும் தேவனுடைய பிரமாணம் இருக்கும் என்பதை கவனியுங்கள். “நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை” (ரோமர் 4:15) என்று வேதாகமம் கூறுகிறது. எனவே தேவனுடைய பத்துக் கற்பனைகளும் ஆதியிலிருந்தே இருந்தன. மனிதன் அந்தப் பிரமாணத்தை மீறி பாவம் செய்தான் (1 யோவான் 3:4). பாவத்தினிமித்தம் கிறிஸ்து வந்து மரிக்கும்வரையிலும் மோசேயின் பிரமாணம் கூடுதலாக கொடுக்கப்பட்டது (கலா. 3:16,19). இவ்விதம் தேவனுடைய பிரமாணம் மோசேயினுடைய பிரமாணம் என்று இரண்டு வெவ்வேறு பிரமாணங்கள் இருக்கின்றன.
| மோசேயின் பிரமாணம் | தேவனுடைய பிரமாணம் |
|---|---|
| “மோசேயின் நியாயப்பிரமாணம்” (லூக்கா 2:22) | “கர்த்தருடைய வேதம்” (ஏசாயா 5:24) |
| “சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணம்” (எபே. 2:15) | “ராஜரிக பிரமாணம்” (யாக்கோபு 2:8) |
| மோசே புத்தகத்தில் எழுதினான் (2 நாளா. 35:12) | தேவன் கற்களில் எழுதினார் (யாத். 31:18; 32:16) |
| பெட்டியின் பக்கத்தில் வைக்கப்பட்டது (உபா. 31:26) | பெட்டியினுள் வைக்கப்பட்டது (யாத். 40:20) |
| சிலுவையில் முடிவடைந்தது (எபேசியர் 2:16) | என்றென்றும் நிற்கும் (லூக்கா 16:17) |
| பாவத்தினிமித்தம் கூட்டப்பட்டது (கலா. 3:19) | பாவத்தைச் சுட்டிக்காட்டுகிறது (ரோமர் 7:7; 3:20) |
| நமக்கு எதிரிடையானது, விரோதமானது (கொலோ. 2:14) | பாரமானதல்ல (1 யோவான் 5:3) |
| எவரையும் தீர்க்கிறதில்லை (கொலோ. 2:14-16) | அனைவரையும் நியாயந்தீர்க்கிறது (யாக்கோபு 2:10-12) |
| மாம்சத்திற்குரியது (எபிரெயர் 7:16) | ஆவிக்குரியது (ரோமர் 7:14) |
| ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை (எபிரெயர் 7:19) | குறைவற்றது (சங்கீதம் 19:7) |

14. தேவனுடைய பத்துக் கற்பனைகளின்படி தங்கள் வாழ்க்கையை அமைக்கிறவர்களைக்குறித்து பிசாசு எவ்விதம் உணருகிறான்?
“அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற…. அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று” – வெளி. 12:17;
“தேவனுடைய கற்பனைகளை…. காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்” – வெளி. 14:12.
பதில்: பிரமாணம் சரியான வாழ்க்கைக்கான மாதிரியாகையால், தேவனுடைய பிரமாணங்களை உயர்த்திப்பிடிக்கிறவர்களை பிசாசு கசப்பாக வெறுக்கிறான் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேவனுடைய பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரியை பின்பற்ற தீர்மானிக்கும் பொதுவான பிசாசின் சீற்றமான கோபத்தை நீங்கள் உணரலாம். ஆனால் தேவனுடைய பத்துக் கற்பனைகளின் கட்டுப்படுத்தும் கோரிக்கைகளை மறுதலித்து, அதேநேரம் மனிதருடைய பாரம்பரியங்களை உயர்த்திப்பிடிக்கிற மதத் தலைவர்களைக்குறித்து கேட்பதுதான் அதிர்ச்சியூட்டுகிறது. “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?” “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” (மத்தேயு 15:3,9) என்று இயேசு கூறியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. “நீதியைச் செய்யச் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்” (சங்கீதம் 119:126) என்று தாவீது கூறினான். கிறிஸ்தவர்கள் விழித்து தேவனுடைய பிரமாணத்தை அதனுடைய சரியான உயர்த்தப்பட்ட இடத்தில் திரும்பவும் வைக்கவேண்டும். ஜீவனுள்ள தேவனுடைய கற்பனைகளை தண்டனையின்றி மீறலாம் என்று யூகித்துக் கொள்ளுவது கண்டிப்பில்லாத தலைமுறையின் மதியீனம்.
15. ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய பத்துக் கற்பனைகளை கடைபிடிக்கவேண்டும் என்று நீ விசுவாசிக்கிராயா?
உங்கள் பதில்: ___________

சிந்தனைக் கேள்விகள்
1. பிரமாணம் குற்றமானது என்று வேதாகமம் கூறவில்லையா?
பதில்: இல்லை. மக்கள்தான் குற்றத்திலிருந்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தர் “அவர்களைக் குற்றப்படுத்தினார்” (எபிரெயர் 8:8). ரோமர் 8:3-ல் “மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம்” என்று வேதாகமம் கூறுகிறது. அது எப்போதும் அவ்விதமே. பிரமாணம் பூரணமானது. ஆனால் மக்கள் குற்றமுள்ளவர்களாக அல்லது பெலவீனர்களாக இருக்கிறார்கள். எனவே கிறிஸ்து நமக்குள் வசிப்பதினால் “நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படி” (ரோமர் 8:4) தமது குமாரன் நமக்குள் வசிக்கவேண்டுமென்று தேவன் வாஞ்சிக்கிறார்.
2. நாம் பிரமாணத்தின் சாபத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறோம் என்று கலாத்தியர் 3:13 கூறுகிறது. இதை உங்களால் விவரிக்கமுடியுமா?
பதில்: பிரமாணத்தின் சாபம்-மரணம் (ரோமர் 6:23). கிறிஸ்து “ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை” ருசிபார்த்தார் (எபிரெயர் 2:9). இவ்விதம் அவர் பிரமாணத்தின் சாபத்திலிருந்து (மரணத்திலிருந்து) அனைவரையும் விடுவித்து, அந்த இடத்தில் நித்திய ஜீவனை ஏற்பாடு செய்திருக்கிறார்.
3. தேவனுடைய பிரமாணம் சிலுவையில் முடிவடைந்தது என்று கொலோசெயர் 2:14-17-ம் எபேசியர் 2:15-ம் போதிக்கவில்லையா?
பதில்: இல்லை. இந்த வார்த்தைகள் மோசேயின் பிரமாணத்தில் இருந்த சடங்குகளைக் குறிப்பிடுகிறது. அது ஆசாரியத்துவத்தையும் பலிமுறைமைகளையும் ஆட்சி செய்த சடங்குப்பிரமாணம். சிலுவையை சுட்டிக்காட்டிய இந்த அனைத்து சடங்குகளும் தேவன் எண்ணியிருந்தவிதமாக கிறிஸ்துவின் மரணத்தோடு முடிவிற்கு வந்தன. மோசேயின் பிரமாணம் “சந்ததி வரும்வரையிலும்” இருக்கும்படி கூட்டிக்கொடுக்கப்பட்டது. “அந்த சந்ததி கிறிஸ்துவே” – கலாத்தியர் 3:19,16. தேவனுடைய பிரமாணத்தை இங்கே குறிப்பிடமுடியாது. ஏனெனில் பவுல் சிலுவைக்குப்பின் அநேக வருடங்கள் கழிந்தபிறகு,அது பரிசுத்தமும் நீதியும் நன்மையுமானது என்று (ரோமர் 7:7,12) கூறினார்.
4. “அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது” (ரோமர் 13:10) என்று வேதாகமம் கூறுகிறது. மத்தேயு 22:37-40-ல், தேவனை நேசித்து, மனிதர்களையும் நேசிக்கவேண்டும் என்று கட்டளை கொடுத்து, “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்க தரிசனங்களும் அடங்கியிருக்கிறது” என்றும் கூறியிருக்கிறது. இவைகள் பத்துப் பிரமாணங்களை அப்புறப்படுத்தவில்லையா?
பதில்: இல்லை. நம்முடைய பத்து விரல்களும் இரண்டு கைகளில் தொங்கிக்கொண்டிருப்பதைப்போல பத்துக் கற்பனைகள் இந்த இரண்டு கட்டளைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவைகளை பிரிக்கமுடியாது. அன்பு, முதல் நான்கு பிரமாணங்களை (தேவனுக்குக் கொடுக்கும் கீழ்ப்படிதல்) கைக்கொள்ளுவதை இன்பமானதாகவும், கடைசி ஆறு பிரமாணங்களை (மனிதரை நேசிப்பது) கடைபிடிப்பதை மகிழ்ச்சியானதாகவும் மாற்றுகிறது. முறுமுறுப்பை நம்மிடமிருந்து எடுத்து, பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதை பிரியமானதாக (சங்கீதம் 40:8) மாற்றுவதால், அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. நாம் உண்மையில் ஒரு மனிதரை நேசிக்கும்போது அவருடைய அல்லது அவளுடைய கோரிக்கைகளுக்கு கவனம் கொடுப்பது நமக்கு மகிழ்ச்சியானதாக மாறுகிறது. “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசு கூறினார். ஆண்டவரை நேசித்துக்கொண்டே அவருடைய கட்டளைகளை மீறுவது கூடாத காரியம். ஏனெனில் “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்” (1 யோவான் 5:3) “அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை” (1 யோவான் 2:4) என்று வேதாகமம் கூறுகிறது.
5. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்று ரோமர் 10:4 சொல்லுகிறதே. அப்படியானால் அது முடிவுக்கு வந்துவிட்டது. அப்படிதானே?
பதில்: யாக்கோபு 5:11-ல் சொல்லப்பட்டிருப்பதைப் போன்று “முடிவு” என்கிற வார்த்தை ஒரு நோக்கத்தை குறிப்பிடுகிறது. அதன் பொருள் தெளிவாக இருக்கிறது. நீதி கிடைக்கும் இடமான கிறிஸ்துவண்டை மனிதனை நடத்திச் செல்வதே அதனுடைய நோக்கம் அல்லது பிரமாணத்தின் முடிவு.
6. ஏன் தேவனுடைய பிரமாணத்தின் கோரிக்கைகளை அநேக மனிதர்கள் மறுதலிக்கிறார்கள்?
பதில்: “எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக்கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்.” – ரோமர் 8:7-9.
7. பழைய ஏற்பாட்டின் நீதிமான்கள் பிரமாணத்தினால் இரட்சிக்கப்பட்டார்களா?
பதில்: எவரும் ஒருபோதும் பிரமாணத்தினால் இரட்சிக்கப்படவில்லை. அனைத்து யுகத்திலும் இராட்சிக்கப்பட்ட அனைவரும் கிருபையினாலேயே இராட்சிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கிருபை “ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்டது” (2 தீமோத்தேயு 1:9). பிரமாணம் பாவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்து மாத்திரமே இரட்சிக்கமுடியும். நோவா கிருபையை கண்டடைந்தான் (ஆதியாகமம் 6:8); மோசே கிருபையை கண்டடைந்தான் (யாத்திராகமம் 33:17); வனாந்திரத்திலிருந்த இஸ்ரவேலர்கள் கிருபையைப் பெற்றனர் (எரேமியா 31:2); ஆபேல், ஏனோக்கு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, இன்னும் பழைய ஏற்பாட்டின் அநேக மனிதர்கள் எபிரெயர் 11-ன்படி விசுவாசத்தினாலேயே இரட்சிக்கப்பட்டனர். அவர்கள் சிலுவையை எதிர்பார்த்து இருந்ததினால் இரட்சிக்கப்பட, நாம் சிலுவையை பின்நோக்கிப்பார்ப்பதினால் இராட்சிக்கப்படுகிறோம். கற்பனைகள் ஒரு கண்ணாடியைப்போல இருந்து நம்முடைய வாழ்க்கையிலிருக்கும் அசுத்தங்களை வெளிக்காட்டுவதால் அது அவசியம். அது இல்லாதபோது மக்கள் பாவிகளாயிருந்தும் அதைக்குறித்து ஜாக்கிரதையற்று இருப்பார்கள். எனினும் பிரமாணத்திற்கு எந்த இரட்சிக்கும் வல்லமையும் கிடையாது. அதினால் பாவத்தை சுட்டிக்காட்ட மாத்திரமே முடியும். இயேசு, அவர் மாத்திரமே ஒரு மனிதனை பாவத்திலிருந்து இரட்சிக்கமுடியும். பழைய ஏற்பாட்டுக் காலத்திலுங்கூட இதுவே உண்மையாயிருந்தது. இது எப்போதும் உண்மையாயிருக்கிறது (அப்போஸ்தலர் 4:10,12; 2 தீமோத்தேயு 1:9).
8. ஏன் கற்பனையைக்குறித்து இவ்வளவு விசனப்படுகிறீர்கள்? நம் மனச்சாட்சி பாதுகாப்பானதில்லையா?
பதில்: இல்லை. ஆயிரம் முறை இல்லை என்று சொல்லலாம். வேதாகமம் தீய மனச்சாட்சியை, கெட்டுப்போன மனச்சாட்சியை, குற்றமுள்ள மனச்சாட்சியைக்குறித்தே பேசுகிறது. இதில் எதுவும் பாதுகாப்பானதல்ல. “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” (நீதிமொழிகள் 14:12; 28:26) என்று தேவன் கூறுகிறார்.
கேள்விகள்
1. பத்துக் கற்பனைகள் யாரால் எழுதப்பட்டன? (1)
_____ தேவனால்.
_____ மோசேயினால்.
_____ தெரியாத ஒரு நபரால்.
2. வேதாகமத்தின்படி பாவம் என்பது? (1)
_____ ஒரு நபரின் தனித்தன்மையிலிருக்கும் குறை.
_____ தேவனுடைய பிரமாணத்தை மீறுவது.
_____ தவறாகத் தோன்றுகிறதெல்லாம்.
3. தேவனுடைய பிரமாணத்தைக் குறித்த உண்மைகள்: (4)
_____ அது மகிழ்ச்சியான வாழ்வுக்கான பூரண வழிகாட்டி.
_____ அது ஒரு கண்ணாடியைப்போல பாவத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
_____ அது பாராமானதும் ஒடுக்குகிறதும்.
_____ தீமையிலிருந்து என்னை அதினால் பாதுகாக்கமுடியும்.
_____ அதற்கு தேவனைப்போன்ற குணம் உண்டு.
_____ புதிய ஏற்பாட்டில் அது நீக்கப்பட்டது.
_____ அது ஒரு சாபம்.
4. தேவனுடைய பத்துக் கற்பனைகள்: (1)
_____ பழைய ஏற்பாட்டுக் காலத்திற்கு மாத்திரமே.
_____ சிலுவையில் இயேசுவினால் ஒழிக்கப்பட்டது.
_____ முற்றிலும் மாற்றப்படக்கூடாதது.
5. நியாயத்தீர்ப்புநாளில் நான் காப்பாற்றப்பட: (1)
_____ நல்ல காரியங்களைக்குறித்த மேன்மையான பதிவைக் கொண்டிருக்கவேண்டும்.
_____ பத்துக் கற்பனைகளை கீழ்ப்படிகிறேனோ இல்லையோ ஆண்டவரை நேசிக்கவேண்டும்.
_____ இயேசுவோடிருக்கும் என் தனிப்பட்ட உறவு அவருடைய கற்பனைகளை கீழ்ப்படிய என்னை நடத்தவேண்டும்.
6. மக்கள் இரட்சிக்கப்படுவது: (1)
_____ பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதால்.
_____ பிரமாணத்தை மீறுவதால்.
_____ இயேசுகிறிஸ்துவினால் மாத்திரம்.
7. மெய்யாலும் மனமாறினகிறிஸ்தவன்: (1)
_____ கிறிஸ்துவின் வல்லமையினால் தேவனுடைய பிரமாணத்தைக் கைக்கொள்ளுவான்.
_____ பிரமாணம் ஒழிந்துபோனதினால் அதை அலட்சியப்படுத்துவான்.
_____ கற்பனைகளைக் கைக்கொள்ளுவது அவசியமல்ல என்று நினைப்பான்.
8. கிருபையின்கீழ் வாழும் ஒரு நபர்: (1)
_____ பாவம் செய்யாமலே பத்துக் கற்பனைகளை மீறலாம்.
_____ கற்பனைகளைக் கைக்கொள்ளுவதிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
_____ மகிழ்ச்சியோடு தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுவார்.
9. அன்பு பிரமாணத்தை நிறைவேற்றுகிறது; எப்படியெனில்: (1)
_____ பிரமாணத்தை அப்புறப்படுத்துவதால்.
_____ தேவனிடமும் மனிதரிடமும் காட்டும் மெய்யான அன்பு பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவதை இன்பமாக்குகிறது.
_____ கீழ்ப்படிதலைக்காட்டிலும் அன்பு அதிக முக்கியமானது.
10. மோசேயின் பிரமாணம்: (1)
_____ தேவனுடைய பிரமாணமும் அதுவும் ஒன்று.
_____ கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டி சிலுவையுடன் முடிவடைந்த சடங்குகளையும் பலிகளையும் குறித்த கட்டளை.
_____ இன்றும் கட்டுப்படுத்துகிறது.
11. பத்துக் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள்: (1)
_____ கிரியையினால் இரட்சிக்கப்படுகிறார்கள்.
_____ தேவனையும் அவருடைய பிரமாணத்தையும் வெறுக்கிற பிசாசினால் மிகக் கொடுமையாக எதிர்க்கப்படுவார்கள்.
_____ கற்பனையைக் கைக்கொள்ளுவதால் இரட்சிக்கப்படுவார்கள்.
12. கிறிஸ்துவையும் அவருடைய பிரமாணத்தையும் குறித்த உண்மைகள்: (4)
_____ இயேசு கற்பனையை மீறினார்.
_____ பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதில் இயேசு பரிபூரண மாதிரி.
_____ இயேசு பிரமாணத்தை ஒழித்துவிட்டார்.
_____ இயேசு: “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்றார்.
_____ இயேசு பிரமாணத்தை மேன்மைப்படுத்தி, அது பாவங்களைச் சுட்டிக்காட்டுவதைக் காண்பித்தார்.
_____ பிரமாணம் மாற்றப்படமுடியாதது என்று இயேசு கூறினார்.
13. தேவனுடைய பத்து பிரமாணங்களை ஒரு கிறிஸ்தவன் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிவான் என்பதை விசுவாசியுங்கள். மேலும் என்னுடைய வாழ்க்கையை அவருக்குள் இசைவாக நான் கொண்டுவர எனக்கு உதவுமாறு இயேசுவிடம் கேட்கிறேன்.
_____ ஆம்.
_____ இல்லை.