வேதபாடங்கள் 17
நாலாயிரம் வருடங்களுக்குமுன்பு பிரம்மாண்டமான சீனாயின் சிகரத்தில் தேவன் மோசேக்கு பத்து கற்பனைகளைக் கொடுத்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த நேரத்திலேதானே இதுவரை கட்டப்பட்டிருக்கிற கட்டட அமைப்புகளிலே மறைபொருட்கள் மிகுந்த ஆசரிப்புக்கூடார நகலையும் ஆண்டவர் மோசேயிடம் கொடுத்தார் என்பதை அநேகர் அறியார்கள்.

அது கட்டி முடிக்கப்படுமுன் இஸ்ரவேலர் வாக்குத்தத்த நாட்டிற்குள் பிரவேசிக்கக்கூடாது என்பதினாலே, அது முக்கியமானதாயிருந்திருக்கவேண்டும். இந்த நகர்த்தக்கூடிய தனித்தன்மைவாய்ந்த ஆலயம் தமது மக்களுக்கு நடுவே தேவன் தங்கியிருப்பதை சுட்டிக்காட்டியது. அடிமையாயிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்கு அதனுடைய ஆராதனைகள் இரட்சிப்பின் திட்டத்தினுடைய முப்பரிமாண காட்சியை கொடுத்தது. இந்த ஆசரிப்புக்கூடாரத்தின் மறைபொருட்களை கவனமாக பார்க்கும்போது, இயேசு எவ்விதம் இழந்துபோன தம்முடையவர்களை இரட்சித்து, தமது சபையை நடத்துகிறார் என்பதைக்குறித்த உங்களுடைய புரிந்துகொள்ளுதலை உறுதிப்படுத்தும். அநேக தீர்க்கதரிசனங்களை புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகவும் இந்த ஆசரிப்புக்கூடாரம் இருக்கிறது. ஆசரிப்புக்கூடாரத்திற்குள் சென்று மறைவான பொருட்களை கண்டுபிடிக்க நாம் படிக்கப்போகிற இந்த அற்புதமான பாடம் உங்களுக்கு உதவும். வியப்பூட்டும் பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது.
1. தேவன் மோசேயிடம் என்ன செய்யக்கூறினார்?

“அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்க ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக” – யாத்திராகமம் 25:8.
பதில்: பரலோகத்தின் மாபெரும் தேவன் தங்கியிருக்கும் விசேஷ கட்டடமான ஆசரிப்புக்கூடாரத்தை எழுப்பும்படி தேவன் மோசேக்குக் கட்டளையிட்டார்.
ஆசாரிப்புக்கூடாரத்தின் சுருக்கமான விளக்கம்
அந்த ஆலயம் நேர்த்தியான கூடார அமைப்புகொண்டிருந்தது. அதன் அளவு 15 x 45 முழமாக இருந்தது (ஒரு முழம் 18 அங்குலம்). இங்கே தெய்வீக பிரசன்னம் இருக்க, விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டன. அதன் சுவர்கள் நிற்கவைக்கப்பட்ட வேலமர பலகைகளால் செய்யப்பட்டு, வெள்ளிப் பாதங்களோடு பொன்னால் மூடப்பட்டிருந்தன (யாத்திராகமம் 26:15-19,29). அதன் கூரை மெல்லிய நூலாலும், ஆட்டு மயிர், ஆட்டுக்கடா தோல், தகசு தோல் ஆகியவற்றாலும் நான்கு அடுக்குகளாகச் செய்யப்பட்டிருந்தது. (யாத்திரகமம் 26:1, 4-16). பரிசுத்த ஸ்தலம் மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் என்னும் இரண்டு அறைகள் அதில் இருந்தன. கனமான திரை ஒன்று இரண்டு அறைகளையும் பிரித்தது. கூடாரத்திற்கு சுற்றிலும் இருந்த பிராகாரம் 75 x 150 முழத்தில் இருந்தது. (யாத்திரகமம் 27:18). வெண்கலத்தால் ஆன 60 தூண்களால் தாங்கப்பட்ட மெல்லிய பஞ்சு நூலினாலான திரையினால் அது வேலியடைக்கப்பட்டிருந்தது (யாத்திரகமம் 27:9-16).

2. ஆசாரிப்புக்கூடாரத்திலிருந்து தம்முடைய மக்கள் என்ன கற்றுக்கொள்ளவேண்டுமென்று தேவன் எதிர்பார்த்தார்?
“தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?” – சங்கீதம் 77:13.
பதில்: தேவனுடைய வழியாகிய இரட்சிப்பின் திட்டம் பூமிக்குரிய ஆசரிப்புக்கூடாரத்தில் வெளிப்படுகிறது. ஆசரிப்புக்கூடாரத்திலிருந்த அனைத்து பொருட்களும், அதோடு தொடர்புடைய அனைத்து ஊழியங்களும் நம்மைக் காப்பாற்றும்படி இயேசு செய்கிறவைகளின் அடையாளமாகவே இருந்ததாக வேதாகமம் போதிக்கிறது. அதாவது ஆசரிப்புக்கூடாரத்தோடு தொடர்புடைய அடையாளங்களை நாம் புரிந்துகொள்ளும்வரையிலும் இரட்சிப்பின் திட்டத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது. எனவே இந்தப் பாடம் மிகவும் முக்கியமானது.
3. ஆசரிப்புக்கூடாரம் எதன் மாதிரியாக இருந்தது?
“மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில், பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.” “இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப் போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்”- எபிரெயர் 8:1,2,4,5.
பதில்: ஆசரிப்புக்கூடார நகலும் அதைக் கட்டுவதற்கான முழுமையான குறிப்புகளும் தேவனால் மோசேக்குக் கொடுக்கப்பட்டன. அவைகள் பரலோகத்திலிருக்கும் மெய்யான ஆசரிப்புக்கூடாரத்தின் நகலாயிருந்தன.
4. பிராகாரத்தில் என்னென்ன பொருட்கள் இருந்தன?
பதில்:

அ. பிராகாரத்தில் நுழைந்ததும், மிருகங்கள் பலிசெலுத்தப்பட்ட பலிபீடம் இருந்தது (யாத்திரகமம் 27:1-8). இந்த பலிபீடம் கிறிஸ்துவின் சிலுவையைச் சுட்டிக்காட்டியது. மிருகங்கள் உன்னத பலியான இயேசுவை சுட்டிக்காட்டின (யோவான் 1:29).
ஆ. பலிபீடத்திற்கும் ஆசரிப்புக்கூடார நுழைவி்ற்கும் இடையிலே வெண்கலத்தால் செய்யப்பட்ட பெரிய தண்ணீர்தொட்டி இருந்தது. இங்கே ஆசாரியர்கள் பலிகொடுக்குமுன்போ அல்லது கூடாரத்தினுள் நுழையுமுன்போ தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள் (யாத்திரகமம் 30:17-21; 38:8). தண்ணீர் பாவங்கள் கழுவப்படுதலை அல்லது புதிய பிறப்பை சுட்டிக்காட்டியது (தீத்து 3:5).

5.பரிசுத்த ஸ்தலத்திலிருந்த பொருட்கள் என்னென்ன?

பதில்:
அ. சமூகத்தப்ப மேஜை (யாத்திரகமம் 25:23-30). இது ஜீவ அப்பமாகிய இயேசுவை (யோவான் 6:51) சுட்டிக்காட்டியது.
ஆ. குத்துவிளக்கு (யாத்திரகமம் 25:31-40). இது உலகத்திற்கு ஒளியாகிய இயேசுவை (யோவான் 9:5; 1:9) சுட்டிக்காட்டியது. எண்ணெய் பரிசுத்த ஆவியானவரைச் சுட்டிக்காட்டியது (சகரியா 4:1-6; வெளிப்படுத்தல் 4:5).


இ. தூபபீடம் (யாத்திரகமம் 30:7,8). இது தேவனுடைய மக்களின் ஜெபங்களை (வெளிப்படுத்தல் 5:8) சுட்டிக்காட்டியது.
6. மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்ன இருந்தது?
பதில்: மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கைப்பெட்டி மாத்திரம் இருந்தது (யாத்திரகமம் 25:10-22).

அது வேலமரத்தால் செய்யப்பட்டு பொன்னினால் மூடப்பட்டிருந்தது. பெட்டியின்மேல் முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட இரண்டு தூதர்கள் இருந்தனர். இந்த தூதர்களுக்கு இடையிலே கிருபாசனம் இருந்தது (யாத்திரகமம் 25:17-22). அங்கே தெய்வீக பிரசன்னம் இருந்தது. இது பரலோகத்தில் இரண்டு தூதர்களுக்கு நடுவிலே இருக்கும் தேவனுடைய சிங்காசனத்தை அடையாளப்படுத்தியது (சங்கீதம் 80:1).
7. பெட்டிக்குள் என்ன இருந்தது?

பதில்: தேவனுடைய மக்கள் எப்போதும் கிழ்ப்படிகிற (வெளிப்படுத்தல் 14:12) தேவனுடைய சொந்த விரலினால் இரண்டு கற்பலகைகளில் எழுதப்பட்ட கற்பனைகள் பெட்டிக்குள் இருந்தன (உபாகமம் 10:4,5).
கிருபாசனம் அவைகளுக்கு மேலாக இருந்தது. அதன்மேல் ஆசாரியன் இரத்தம் தெளித்தான். தேவனுடைய மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிடும்போதெல்லாம் (நீதிமொழிகள் 28:13) இந்த இரத்தத்தின் வழியாக அவர்களுக்கு கிருபை கொடுக்கப்படும் என்று அது காட்டியது (லேவியராகமம் 16:15,16). மிருகத்தின் இரத்தம் நமக்கு பாவமன்னிப்பைக் கொண்டுவரும்படி சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தை சுட்டிக்காட்டியது (மத்தேயு 26:28; எபிரெயர் 9:22).
8. பழைய ஏற்பாட்டு ஆசரிப்புக்கூடார ஆராதனையிலே ஏன் மிருகங்கள் கொல்லப்பட்டன?

“”நியாப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” – எபிரெயர் 9:22; “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” – மத்தேயு 26:28.
பதில்: இயேசுவின் இரத்தம் சிந்தப்படாவிட்டால் தங்கள் பாவங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள மிருகங்களின் பலி அவசியப்பட்டது. பாவத்தின் தண்டனை நித்திய மரணமே என்பது (ரோமர் 6:23) விரும்பக்கூடாத ஒரு சத்தியமாயிருக்கிறது. அனைவரும் பாவம் செய்தபடியால் அனைவரும் மரிக்கவேண்டும். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது அதன் தண்டனை மரணத்தை அனைத்து மக்களுக்காகவும் செலுத்த கிறிஸ்து இடைபடாதிருந்திருந்தால் அவர்கள் உடனடியாக மரித்திருப்பார்கள் (வெளிப்படுத்தல் 13:8). பாவத்திற்குப்பின் ஒரு மிருகத்தை பலியாக கொண்டுவரும்படி தேவன் பாவியிடம் கோரினார் (ஆதியாகமம் 4:3-7). பாவி தன் சொந்த கைகளால் அந்த மிருகத்தைக் கொல்லவேண்டும் (லேவியராகமம் 1:4,5). அச்செயல் இரத்தம் சிந்துவதும் திகைப்பூட்டுவதுமாயிருந்தது. கூடவே, பாவத்தின் அச்சமூட்டும் விளைவின் (நித்திய மரணத்தின்) பவித்திரமான நிஜத்தையும், அதற்கு ஒரு பதிலாளியும் இரட்சகரும் எவ்வளவு அத்தியாவசியம் என்பதையும் மறக்கக்கூடாதவண்ணம் பாவியின் மனதில் பதித்தது. ஒரு இரட்சகர் இல்லாதபட்சத்தில் இரட்சிப்பைக் குறித்த நம்பிக்கை எவருக்கும் இருக்காது. அவர்களுடைய பாவங்களுக்காக தேவன் தமது குமாரனைக் கொடுப்பார் என்று (1 கொரிந்தியர் 15:3) கொல்லப்பட்ட மிருகத்தின் வழியாக பலிமுறைகள் போதித்தன. இயேசு அவர்களுடைய இரட்சகராக மாத்திரமல்ல, அவர்களுக்கு பதிலாளியுமாவார் (எபிரெயர் 9:28). யோவான்ஸ்நானகன் இயேசுவை சந்தித்தபோது: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்று கூறினான். பழைய ஏற்பாட்டில் மக்கள் இரட்சிப்பிற்காக சிலுவையை முன்னோக்கியிருந்தனர். நாம் இப்போது இரட்சிப்பிற்காக சிலுவையை பின்நோக்கிப் பார்க்கிறோம். இரட்சிப்பிற்கான வேறு எந்த ஆதாரமும் நமக்கில்லை (அப்போஸ்தலர் 4:12.

9. மிருகங்கள் ஆசரிப்புக்கூடார ஆராதனையில் எவ்விதம் பலியிடப்பட்டன? அவைகளின் பொருள் என்ன?
“அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,” “கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்” – லேவியராகமம் 1:4,11.
பதில்: பாவி பலிசெலுத்தப்படும் மிருகத்தை பிராகார வாசலுக்குக் கொண்டுவந்தபோது ஒரு ஆசரியன் அவனிடம் ஒரு கத்தியையும் கின்னத்தையும் கொடுப்பான். பின்னர் பாவி தன் கைகளை மிருகத்தின் தலைமேல் வைத்து தன் பாவத்தை அறிக்கையிடுவான். இது பாவங்கள் பாவயிடமிருந்து மிருகத்திற்கு மாற்றப்பட்டதை அடையாளப்படுத்தியது. அந்த நேரத்தில் பாவி குற்றமற்றவனாகவும் மிருகம் குற்றவாளியாகவும் கருதப்படும். இப்போது மிருகம் அடையாளத்தின்படி குற்றவாளியென்னப்பட்டதால், பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அது சந்திக்கவேண்டும். தன் சொந்த கைகளாலேயே அந்த மிருகத்தைக் கொல்லுவதின் வழியாக, தன்னுடைய பாவமே குற்றமில்லாத மிருகத்தின் மரணத்திற்குக் காரணமாயிற்று என்றும், தன்னுடைய பாவம் குற்றமில்லாத இயேசுவின் மரணத்தைக் கொண்டுவரும் என்று பாவி கற்பிக்கப்பட்டான்.
10. சபை முழுமைக்குமாக ஒரு மிருகம் பலியிடப்பட்டபோது ஆசாரியன் என்ன செய்வான்? இது எதை அடையாளப்படுத்தியது?

“அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து, தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து” – லேவியராகமம் 4:16,17.
பதில்: சபை அனைத்தின் பாவங்களுக்காகவும் ஒரு மிருகம் பலியிடப்பட்டபோது, இயேசுவைச் சுட்டிக்காட்டிய ஆசாரியன்வழியாக (எபிரெயர் 3:1). அந்த இரத்தம் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் கொண்டுசெல்லப்பட்டு, இரண்டு அறைகளையும் பிரித்த திரையின்முன் தெளிக்கப்பட்டது. திரையின் அடுத்த பக்கத்தில் தேவனுடைய சமூகம் இருந்தது. இவ்விதம் மக்களுடைய பாவங்கள் அடையாளமாக ஆசரிப்புக்கூடாரத்திற்குள் மாற்றப்பட்டன. ஆசாரியனின் இந்த ஊழியம், இயேசு இப்போது பரலோகத்தில் நமக்காக செய்துகொண்டிருக்கும் ஊழியத்தைச் சுட்டிக்காட்டியது. இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தபின்னர், தமது இரத்தத்தை பரலோக ஆசரிப்புக்கூடாரத்திற்குள் தெளிக்கும்படி, நமது ஆசாரியராக பரலோகத்தில் பிரவேசித்திருக்கிறார் (எபிரெயர் 9:11,12). பூமிக்குரிய ஆசாரியனின் இரத்தம் தெளிக்கும் ஊழியம், மேலே இருக்கும் ஆசரிப்புக்கூடாரத்தில் இயேசு நம்முடைய பாவப்பதிவின்மேல் தமது இரத்தத்தைத் தெளிப்பதைச் சுட்டிக்காட்டியது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிடும்போது அவருடைய நாமத்தினால் அவைகள் மன்னிக்கப்படும் என்பதை அது காட்டியது (1 யோவான் 1:9).
11. ஆசரிப்புக்கூடார ஆராதனையின் அடிப்படையில் எந்த இரண்டு நிலைகளில் இயேசு தமது மக்களுக்காக ஊழியம் செய்கிறார் அவருடைய அன்பான ஊழியத்திலிருந்து நாம் பெறும் அற்புதமான நன்மைகள் என்ன?

“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே” – 1 கொரிந்தியர் 5:7; “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” – எபிரெயர் 4:14-16.

பதில்: இயேசு நம்முடைய பாவங்களுக்கான பலியாகவும், பரலோக ஆசாரியராகவும் ஊழியம் செய்கிறார். நமக்கான பலியாடாகவும் பதிலாளியாகவும் இருக்கிற இயேசுவின் மரணமும், பரலோக ஆசாரியராக அவர் செய்துகொண்டிருக்கிற தொடர் ஊழியமும், நம்புவதற்கரிய இரண்டு அற்புதங்களை நமக்குச் செய்கிறது.
- கடந்த காலத்தின் பாவங்களனைத்தும் மன்னிக்கப்பட்ட புதுபிறப்பு என்கிற முழுமையான வாழ்க்கை மாற்றத்தை நமக்குக் கொடுக்கிறது (யோவான் 3:3-6; ரோமர் 3:25).
- இப்போதும் எதிர்காலத்திலும் சரியான வாழ்க்கை வாழ வல்லமை கொடுக்கிறது (தீத்து 2:14; பிலிப்பியர் 2:13).
இந்த இரண்டு அற்புதங்களும் ஒரு நபரை நீதிமானாக்குகிறது. அதாவது தேவனுக்கும் அந்த நபருக்குமிடையிலே நீதியுள்ள ஒரு உறவு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கிரியைகளினால் (தன் சொந்த முயற்சியினால்) நீதிமானாகிறதற்கு மனிதனுக்கு எந்த வழியுமில்லை. ஏனெனில், நீதிமானாக்குவது இயேசு மாத்திரமே நடப்பிக்கக்கூடிய ஒரு அற்புதம் (அப்போஸ்தலர் 4:12). தன்னால் தனக்குச் செய்யக்கூடாத ஒன்றை, தனக்காக இயேசு செய்வார் என்று அவர்மேல் வைக்கும் விசுவாசத்தினால் ஒரு நபர் நீதிமானாகிறார். இதுவே “விசுவாசத்தினால் கிடைக்கும் நீதி” என்கிற வேதாகம வார்த்தையின் பொருள். என் வாழ்க்கையின் அதிபதியாக இருக்கும்படி நான் இயேசுவை அழைக்கிறேன். அவரோடு முழுமையாக ஒத்துழைக்கும்போது தேவையான அற்புதத்தை அவர் என்னில் செய்வார் என்று நான் நம்புகிறேன். எனக்காகவும் என்னிலேயும் இயேசுவால் செய்யப்படுகிற இந்த நீதிமாத்திரமே நமக்கிருக்கிற ஒரே நீதி. மற்ற அனைத்து விதமான நீதிகளும் போலியே.

12. இயேசுவின் வழியாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற நீதியைக் குறித்து என்ன ஆறு மேலான வாக்குறுதிகளை வேதாகமம் நமக்குக் கொடுக்கிறது?
பதில்:
- நம்முடைய கடந்தகால பாவங்களை மூடி நம்மைக் குற்றமற்றவர்களாக எண்ணுகிறார் (ஏசாயா 44:22; 1 யோவான் 1:9).
- நாம் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டோம் (ஆதியாகமம் 1:26,27). தேவனுடைய சாயாலை நம்மில் மீண்டும் கொண்டுவருவதாக இயேசு வாக்குக்கொடுக்கிறார் (ரோமர் 8:29).
- நீதியாக வாழும் வாஞ்சையை இயேசு நமக்குக் கொடுத்து, அதை நிறைவேற்றும்படியான வல்லமையையும் அருளுகிறார் (பிலிப்பியர் 2:13).
- தேவனுக்கு பிரியமானதை மாத்திரம் மகிழ்ச்சியோடு செய்ய இயேசு தமது அற்புதத்தின் வழியாக நம்மை நடத்துகிறார் (எபிரெயர் 13:20,21; யோவான் 15:11).
- அவருடைய பாவமில்லாத வாழ்க்கையையும் பாவநிவாரண மரணத்தையும் நமமேல் வைத்து, நம்மேலிருக்கிற பாவ தண்டனையை அகற்றுகிறார் (2 கொரிந்தியர் 5:21).
- பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல திரும்பி வரும்வரையிலும் உண்மையுள்ளவர்களாக நம்மை காத்துக்கொள்ளும் பொறுப்பையும் இயேசு எடுத்துக் கொள்கிறார் (பிலிப்பியர் 1:6; யூதா 24).
மகிமையான இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்ற இயேசு ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் ஆயத்தமா? முழங்கால்படியிட்டு உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும்படி அவரை அழையுங்கள்; அவர் கைவிடமாட்டார்.
13. விசுவாசத்தினால் நீதிமானாகிறதற்கு ஒரு நபர் செய்யக்கூடிய காரியம் ஏதாகிலும் உண்டா?

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தவே! கர்த்தவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” – மத்தேயு 7:21.
பதில்: ஆமாம். நாம் பிாதவின் சித்தத்தை கட்டாயம் செய்யவேண்டுமென்று இயேசு கூறுகிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மெய்யாகவே மனமாறின ஒரு நபர், பாவத்திற்கான தன் வருத்தத்தையும், நடத்தும்படி இயேசுவிடம் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் முழு மனதோடுகூடிய வாஞ்சையையும் காட்டும்படி தொடர்ந்து பலிஆட்டை கொண்டுவந்தான். நீதிமானாக அவசியமான அற்புதங்களை இன்று நம்மால் செய்ய முடியாவிட்டாலும், அவைகள் நடப்பதற்கேதுவாக நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தும்படி இயேசுவை அழைத்து, அவருக்கு அனுதினமும் ஒப்புக்கொடுக்கவேண்டும் (1 கொரிந்தியர் 15:31). கீழ்ப்படியவும் இயேசு நடத்தும் விதத்தில் அவரைப் பின்பற்றவும் நாம் விருப்பத்தோடிருக்கவேண்டும் (யோவான் 12:26; ஏசாயா 1:18-20). நம்முடைய சொந்த வழியையே விரும்பவும் (ஏசாயா 53:6), இவ்விதமாக, சாத்தான் ஆதியில் செய்ததைப்போல ஆண்டவருக்கு எதிராக கலகம் செய்யவும் பாவம் நம்மை நடத்துகிறது (ஏசாயா 14:12-14). பாவம் அடிமைப்படுத்துகிறதாயும், தேவனுடைய அற்புதமான வல்லமையினால் மாத்திரமே மேற்கொள்ளப்படக்கூடியதாகவும் (மாற்கு 10:27) இருப்பதினால், நம்முடைய வாழ்க்கையை ஆட்சி செய்ய இயேசுவை அனுமதிப்பது, ஒரு கண்ணைப் பிடுங்குவதைப்போல அல்லது ஒரு கையை வெட்டுவதைப்போல கடினமானதாக இருக்கிறது (மத்தேயு 5:29.30). மனிதர்களுடைய நடத்தையைக் கருத்தில் கொள்ளாது, இரட்சிக்கப்பட்டதாக அறிக்கையிடுகிற அனைவரையும் இயேசு பரலோகத்திற்குக் கொண்டுசெல்வார் என்று அநேகர் நம்புகிறார்கள். ஆனால் இது அப்படியல்ல. இது சாத்தனுடைய கற்பனை. ஒரு கிறிஸ்தவன் இயேசுவின் வாழ்க்கையை பின்பற்றவேண்டும் (1 பேதுரு 2:21). இயேசுவுக்கு நம்முடைய வாழ்க்கையின்மேல் முழுஅதிகாரமும் கொடுத்து, அவர் நடத்தும் வழி சில நேரங்களில் கரடுமுரடாக இருப்பினும் மகிழ்ச்சியோடு அதில் நடக்க ஒப்புகொடுக்கும்போதுமாத்திரமே (மத்தேயு 7:13,14,21) இயேசுவினுடைய இரத்தத்தின் வல்லமை நமக்காக அனைத்தையும் செய்துமுடிக்கும் (எபிரெயர் 13:12).

14. பாவநிவாரண நாளை புரிந்து கொள்ள எனக்கு உதவமுடியுமா?
பதில்:
அ. வருடத்தில் ஒருமுறை-பாவநிவாரண நாளில், இஸ்ரவேலில் பவித்திரமான நியாயத்தீர்ப்பு நாள் வந்தது (லேவியாராகமம் 23:27). அனைவரும் ஒவ்வொரு பாவத்தையும் அறிக்கை செய்யவேண்டும். செய்யமறுத்தவர்கள் அந்த நாளிலேதானே இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து அறுப்புண்டுபோயினர் (லேவியராகமம் 23:29).
ஆ. இரண்டு ஆடுகள் தெரிந்துகொள்ளப்பட்டன. ஒன்று கர்த்தருடைய ஆடென்றும், மற்றது சாத்தனைச் சுட்டக்காட்டிய போக்காடென்றும் அழைக்கப்பட்டது (லேவியராகமம் 16:8).

கர்த்தருடைய ஆடு கொல்லப்பட்டு மக்களின் பாவங்களுக்காகச் செலுத்தப்பட்டது (லேவியராகமம் 16:9), இந்த நாளில் இரத்தம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு கிருபாசனத்தின்முன் தெளிக்கப்பட்டது (லேவியராகமம் 16:14). இந்த விசேஷ நியாயத்தீர்ப்புநாளில் பிரதான ஆசாரியன் தேவனைசந்திப்பதற்காக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கிருபாசனமுன்பு சென்றான். தெளிக்கப்பட்ட இரத்தம் (இயேசுவின் பலியை சுட்டிக்காட்டிய) தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிக்கைபண்ணப்பட்ட மக்களுடைய பாவங்கள் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து பிரதான ஆசாரியனிடம் மாற்றப்பட்டது. பின்னர் அவன் அறிக்கைபண்ணப்பட்ட பாவங்களை போக்காட்டின்மேல் மாற்றினான். அது பின்னர் வனாந்திரத்திற்கு, நடத்தப்பட்டது (லேவியராகமம் 16:16,20-22). இவ்விதமாக, தெளிக்கப்பட்ட இரத்தத்தின்வழியாக வருடம் முழுவதும் சேர்த்துவைக்கப்பட்டிருந்த மக்களின் பாவங்களிலிருந்து ஆசரிப்புக்கூடாரம் சுத்தகரிக்கப்பட்டது.
15. ஆசரிப்புக்கூடாரத்தின் மற்ற ஆராதனைகளைப்போல பாவநிவாரண நாளும் தேவனுடைய மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தின் ஒரு பகுதியை நிழலிட்டுக் காட்டியதா?

“ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷத்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே” – எபிரெயர் 9:23.
பதில்: ஆமாம்! அந்த நாளின் ஆராதனை, பரலோக ஆசரிப்புக்கூடாரத்தில் மெய்யான மகா பிரதான ஆசாரியரால் நம்முடைய பாவங்கள் அழிக்கப்படப்போகிறதை சுட்டிக்காட்டியது. சிந்தப்பட்ட இரத்தத்தை ஜீவ புத்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள்மேல் செலுத்துவதினால், நித்தியத்திற்கும் அவரை சேவிப்பதான அவர்களுடைய தீர்மானத்தை கிறிஸ்து உறுதிப்படுத்துகிறார். இந்த விசேஷமான நியாயத்தீர்ப்பு நாள் இஸ்ரவேலரின் பாவநிவாரண நாளைப்போல பூமியின் கடைசி பாவநிவாரணத்தைச் சுட்டிக்காட்டியது. பரலோகத்தில் மத்தியஸ்த ஊழியம் செய்துவருகிற நம்முடைய உண்மையுள்ள பிரதான ஆசாரியனான இயேசு, சிந்தப்பட்ட தம்முடைய இரத்தத்தின்மேல் விசுவாசமாயிருக்கும் அனைவருடைய பாவங்களையும் அழித்துப்போட ஆயத்தமாயிருக்கிறார் என்று, வருடாந்தர பாவநிவாரண நாள் மனுக்குலத்திற்கு உறுதியளித்தது. ஜீவனிலோ அல்லது மரணத்திலோ முடியப்போகிற ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையிலும் பாவத்தை முடிவிற்குக் கொண்டுவருகிற இறுதி நியாயத்தீர்ப்பிற்கு இந்த இறுதி பாவநிவாரணநாள் நடத்துகிறது.
மிக முக்கியமான சம்பவங்கள்
பூமிக்குரிய ஆசரிப்புக்கூடாரத்தின் அடையாளங்கள், விசேஷமாக பாவநிவாரண நாள், தேவன் தமது பரலோக ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து கடைசி காலத்தில் நடப்பிக்கவிருக்கிற முக்கியமான சம்பவங்களை எவ்விதம் நிழலிட்டுக்காட்டியது என்பதை அடுத்த இரண்டு பாடங்களில் நீங்கள் காண்பீர்கள்.
நியாயத்தீர்ப்பின் தேதி
பரலோக நியாயத்தீர்ப்பைத் துவக்க தேவன் நியமித்த தேதியைக்குறித்த முக்கியமான வேதாகம தீர்க்கதரிசனத்தை அடுத்த வேதபாடத்தில் நாம் ஆராயலாம். மெய்யாகவே சிலிர்பூட்டும் சத்தியம்!
16. தேவன் உங்களிடத்தில் புதியதாக தோன்றும் உண்மையை வெளிப்படுத்தினால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறீர்களா?
பதில்:_____________________________________________
கேள்விகள்
1. ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் என்னென்ன இருந்தது? (2)
_____ கிருபாசனம்.
_____ தண்ணீர்தொட்டி.
_____ நாற்காலிகள்.
_____ பலிபீடம்.
2. தேவனுடைய பிரசன்னம் கிருபாசனத்தின்மேலிருந்தது: (1)
_____ ஆம்.
_____ இல்லை.
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கோடிட்ட இடங்களில் நிரப்பவும்:
| சிலுவை | இயேசு | சுத்திகரிப்பு | ஜெபங்கள் | வெளிச்சம் |
எடுத்துக்காட்டு: தகனபலிபீடம் சிலுவை குறிப்பிடுகிறது.
தண்ணீர்த்தொட்டி பாவத்திலிருந்து ________________ குறிப்பிடுகிறது.
சமுகத்து அப்பம் ஜீவ அப்பமாகிய ______________குறிப்பிடுகிறது.
ஏழு தண்டுகளுள்ள குத்துவிளக்கு உலகத்திற்கு _______________ குறிப்பிடுகிறது.
தூபபீடமானது ஜனங்களின் ________________ குறிப்பிடுகிறது.
4. ஆசரிப்புக்கூடாரம் மற்றும் அதன் ஊழியங்களின் நோக்கம்: (1)
_____ தூதர்களை புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவது.
_____ மக்களுக்கு மாமிச உணவை ஏற்பாடு செய்வது.
_____ இரட்சிப்பின் திட்டத்தை அடையாளப்படுத்துவது.
5. ஆசரிப்புக்கூடார திட்டத்தை யார் வகுத்தார்கள்? (1)
_____ நோவா.
_____ ஒரு தூதன்.
_____ ஆரோன்.
_____ தேவன்.
6. உடன்படிக்கைப் பெட்டியினுள் பத்து கற்பனைகள் இருந்தன: (1)
_____ ஆம்.
_____ இல்லை.
7. பலியிடப்பட்ட மிருகம்: (1)
_____ பரிசுத்த ஆவியானவரை குறித்தது.
_____ யுத்தத்தைக் குறித்தது.
_____ இயேசுவை குறித்தது.
8. ஆசரிப்புக்கூடாரத்தின் அடிப்படையில், எந்த இரண்டு நிலைகளில் இயேசு நமக்காக ஊழியம் செய்கிறார்? (2)
_____ அரசன்.
_____ பலி.
_____ பிரதான ஆசாரியன்.
_____ பிரபஞ்சத்தின் அதிபதி.
9. பூமிக்குரிய ஆசரிப்புக்கூடாரத்தை குறித்த உண்மைகள்: (2)
_____ அதில் 3 அறைகள் இருந்தன.
_____ அது ஒரு கூடாரமாக இருந்தது.
_____ அதன் அளவு 500* 1000 முழங்கள்.
_____ பிரகாரம் வெண்கல தூண்களாலும் மெல்லிய துணியினாலும் செய்யப்பட்டது.
_____ மேற்கூரை எகிப்தின் ஓடுகளால் செய்யப்பட்டது.
_____ தண்ணீர்தொட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தது.
10. விசுவாசத்தினால் கிடைக்கும் நீதியே ஒரே மெய்யான நீதி: (1)
_____ ஆம்.
_____ இல்லை.
11. விசுவாசத்தினால் வரும் நீதி எவ்விதம் வருகிறது? (1)
_____ மனிதனுடைய கிரியைகளால்.
_____ ானமுழுக்கு எடுப்பதால்.
_____ இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதால் மாத்திரம்.
12. பாவி கொண்டுவந்த பலி மிருகத்தை யார் கொன்றது? (1)
_____ தேவன்.
_____ ஆசாரியன்.
_____ பாவி.
13. இயேசு வழங்கும் நீதியைக் குறித்த உண்மைகள்: (3)
_____ அது நம்மை தேவனுடைய சாயலில் நிலைநிறுத்தும்.
_____ அது அற்புதமானதல்ல.
_____ நம்முடைய நற்கிரியைகள் அதில் பெரும் பங்கு வகிக்கிறது.
_____ அது நம்முடைய கடந்தகால பாவங்களை மூடுகிறது.
_____ நீதியுள்ள வாழ்க்கை வாழ அது ஒரு வாஞ்சையை நமக்குக் கொடுக்கிறது.
_____ நாம் விட்டுவிடக்கூடாது என்று நினைக்கிற பாவங்களை அது மூடுகிறது.
14. பாவநிவாரண நாளைக்குறித்த உண்மைகள்: (4)
_____ மாதந்தோறும் அது வந்தது.
_____ அது ஒரு நியாயத்தீர்ப்பு நாள்.
_____ விளையாட்டுகளும் மகிழ்ச்சியுமான நாள் அது.
____ அது இறுதி நியாயத்தீர்ப்பை அடையாளப்படுத்தியது.
_____ போக்காடு சாத்தனை அடையாளப்படுத்தியது.
_____ அன்று இரத்தம் மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் எடுத்துச்செல்லப்பட்டது.
15. நீதி என்பது தேவனுடனான சரியான உறவு: (1)
_____ ஆம்.
_____ இல்லை.
16. பாவம் அனைவர்மேலும் மரண தண்டனையைக் கொண்டுவந்தது என்பதை பலியிடப்பட்ட மிருகம் உணர்த்தியது: (1)
_____ ஆம்.
_____ இல்லை.
17. இன்றைக்கும் எதிர்காலத்திலும் மன்னிப்பையும், பாவம் கழுவப்படுதலையும், சரியான வாழ்க்கை வாழ வல்லமையையும் உள்ளடக்கியிருக்கிற கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?
_____ ஆம்.
_____ இல்லை.