சோதிடர்களையும் மனம்சார்ந்த சக்திகள்    கொண்டவர்களையும் தேவன் ஏவுகிறாரா?

 வேதபாடங்கள்  24

தன்னைத்தானே தீர்க்கதரிசி என்று அழைத்துக்கொள்ளுகிற ஒருவன் சடிதியாக எழும்பி, எழுப்புதல் செய்திகளைக் கூறி சுகப்படுத்தி, அற்புதம் செய்து, வானத்திலிருந்து அக்கினியை வருவித்து,

உங்களுடைய தனிப்பட்ட இரகசியங்களை வெளிக்காட்டி, கூட்டங்களைச் சேரத்தால் அவனை நீங்கள் நம்புவீர்களா?  அவனை நம்பவேண்டுமா? மெய்யான மற்றும் போலியான தீர்க்கதரிசிகளை அடையாளம் காணும் உங்கள் திறமையோடு உங்களுடைய நித்தியம் நேரடியாக கட்டப்பட்டிருக்கக்கூடும்.  எனவே, காலத்திற்குரிய இந்தச் செய்தியைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டியது அவசியம்.

1. இந்த பூமியின் கடைசி நாட்களில் மெய்யான தீர்க்கதரிசிகள் இருப்பார்கள் என்று வேதாகமம் போதிக்கிறதா?

“கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்” – அப்போஸ்தலர் 2:17.

பதில்:  ஆமாம்.  கடைசி நாட்களில் ஆண்களும் பெண்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் (யோவேல் 2:28-32).

2. இயேசுகிறிஸ்து தாம் பரமேறினபோது அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் (எபேசியர் 4:7-11) என்கிற வரங்களோடு தீர்க்கதரிசிகள் என்ற வரத்தையும் தமது சபையின்மேல் வைத்தார்.  ஏன் தேவன் இந்த வரங்களை சபைக்குக் கொடுத்தார்?

 “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,” – எபேசியர் 4:12.

பதில்:  பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டே இயேசு இந்த ஐந்து ஈவுகளையும் கொடுத்தார்.  இதில் எது ஒன்று குறைந்தாலும் தேவனுடைய சபை பரிபூரணமடைவது சாத்தியமில்லை.

3. வேதாகம காலங்களில் தீர்க்கதரிசன வரம் ஆண்களுக்கு மாத்திரம்தான்  இருந்ததா?

பதில்:  இல்லை!  திர்க்கதரிசன வரத்தைப் பெற்றிருந்த அநேக ஆண்களுடன், குறைந்தது 8 பெண்களுக்காவது தேவன் அதைக் கொடுத்திருந்தார்.  அவர்கள்:  அன்னாள் (லூக்கா 2:36-38); மிரியாம் (யாத்திரகமம் 15:20); தெபோராள் (நியாயதிபதிகள் 4:4); உல்தாள் (2 இராஜாக்கள் 22:14); மற்றும் சுவிசேஷகனாகிய பிலிப்புவின் நான்கு குமாரத்திகள் (அப்போஸ்தவர் 21:8,9).

4. இந்த வரங்கள் எத்தனைகாலம் சபையில் இருக்கவேண்டும்?

“நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்” – எபேசியர் 4:13.

பதில்:  தேவனுடைய மக்கள் ஒன்றுபட்டு தேறின கிறிஸ்தவர்களாகும்வரைக்கும் அவைகள் சபையில் இருக்கும்.  இது கடைசிகாலத்தில் சம்பவிக்கும்.

5. மெய்யான தீர்க்கதரிசிகள் எங்கிருந்து தங்களுடைய அறிவிப்புகளைப் பெற்றார்கள்?

“தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” – 2 பேதுரு 1:21.

பதில்:  “பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டபோது” தீர்க்கதரிசிகள் பேசினார்கள். ஆவிக்குரிய காரியங்களில் தீர்க்கதரிசிகள் தங்கள் சொந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை.  அவர்களுடைய சிந்தைகள் பரிசுத்த ஆவியானவர் வழியாக இயேசுவிடமிருந்து வருகின்றன.

6. தேவன் தீர்க்கதரிசிகளிடம் மூன்று வெவ்வேறு விதங்களில் பேசுகிறார்.  அவை யாவை?

 “அப்பொழுது அவர்:  என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி,  சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.”  “நான் அவனுடன் …முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்” – எண்ணாகமம் 12:6,8.

பதில்:  தரிசனங்கள் வழியாகவும் சொப்பனங்கள் வழியாகவும், முகமுகமாகவும் பேசுகிறார்.

7. மெய்யான தீர்க்கதரிசி தரிசனத்தில் இருக்கும்போது அவரிடம் காணப்படும் சரீரபிரகாரமான சான்றுகள் என்னென்ன?

பதில்:

அ. முதலில் அவர் சரீர பெலத்தை இழப்பார் (தானியேல் 10:8).

. பின்னர் இயற்கைக்கு அப்பாற்பட்ட பலத்தைப் பெறக்கூடும் (தானியேல் 10:18,19).

இ. சரீரத்தில் மூச்சு இருக்காது (தானியேல் 10:17).

ஈ. பேசமுடியும் (தானியேல் 10:16)

உ. பூமிக்குரிய சூழ்நிலையைக் குறித்த நினைவு இருக்காது (தானியேல் 10:5-8; 2 கொரிந்தியர் 12:2-4).

ஊ. கண்கள் திறந்திருக்கும் (எண்ணாகமம் 24:4).

குறிப்பு:  மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வேதாகம காரியங்களும் தரிசனத்திலிருக்கும் மெய்யான தீர்க்கதரிசியின் உடல்ரீதியான சான்றுகளாக இருப்பினும், இவை அனைத்தும் ஒரே நேரத்தில் காணப்படுவதில்லை.  இந்த ஆறு சான்றுகளையும் வெளிக்காட்டாதபோதும் தீர்க்கதரிசியின் தரிசனம் மெய்யாக இருக்கக்கூடும்.

8. மாபெரும் அற்புதங்களை நடப்பிப்பது தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வந்தவர் என்பதற்கான சான்றா?

 “அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்;” – வெளிப்படுத்தல் 16:14.

பதில்:  இல்லை.  பிசாசுக்கும் அவனது தூதுவர்களுக்குங்கூட அற்புதங்கள் நடப்பிக்கும் வல்லமை இருக்கிறது.  அற்புதங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை  மாத்திரமே நிரூபிக்கின்றன.  அப்படிபட்ட வல்லமை தேவனிடமிருந்தும் வரும்; சாத்தானிடமிருந்தும் வரும். (உபாகமம் 13:1-5; வெளிப்படுத்தல் 13:13,14).

9. எப்படிப்பட்ட அழிவிற்கேதுவான கடைசிகால ஆபத்தைக் குறித்து இயேசு நம்மை எச்சரிக்கிறார்?

 “கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.” – மத்தேயு 24:24.

பதில்:  தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத்தவிர மற்ற அனைவரையும் வஞ்சிக்கக்கூடிய போலித் தீர்க்கதரிசிகளையும் போலி கிறிஸ்துக்களையுங்குறித்து இயேசு எச்சரிக்கிறார்.  கோடிக்கணக்கனோர் வஞ்சிக்கப்பட்டு இரட்சிப்பை இழந்துபோவார்கள்.

10. ஒரு தீர்க்கதரிசி உண்மையானவரா அல்லது போலியானவரா என்பதை நான் எவ்விதம் தீர்மானிக்கக்கூடும்? 

“வேதத்தையும் சாட்சி ஆகமாத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” – ஏசாயா 8:20.

பதில்:  அவர்களுடைய போதனைகளையும் நடக்கைகளையும் வேதவாக்கியங்களைக்கொண்டு சோதியுங்கள். வேதவாக்கியங்களுக்கு எதிராக போதித்து நடப்பார்களானால் அவர்கள் போலி தீர்க்கதரிசிகள்; அவர்களிடம் வெளிச்சமில்லை.

11.போலி தீர்க்கதரிசிகளின் வகைகளுள் சில வேதாகமத்தில் குறிப்பாக பெயரிடப்பட்டு கடிந்துகொள்ளப்பட்டிருக்கின்றனவா?

பதில்:  ஆமாம்.  உபாகமம் 18:10-12ம், வெளிப்படுத்தல் 21:8ம் கீழ்க்காணும் பொய் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகப் பேசுகின்றது.

அ. மந்திரவாதி :– வார்த்தைகளைப்  பேசி ஏவிவிடுகிறவர்கள் அல்லது மந்திரங்களை உபயோகிக்கிறவர்கள்.

ஆ. நாள் பார்க்கிறவர்கள் :- சோதிடர்கள்.

இ. சூனியக்காரர் :- மரித்தவர்களின் ஆவிகளோடு தொடர்புகொள்வதாக உரிமைபாராட்டுகிறவர்கள்.

ஈ. சன்னதக்காரர் :- பிரபலமான ஆவிகளோடு ஆலேசிக்கிறவர்கள்.

உ. குறிசொல்லுகிறவர்கள் :- எதிர்காலத்தைக் கூறுகிறவர்கள்.

ஊ. அஞ்சனம்பார்க்கிறவர்கள் :- மந்திரவாதிகளைப் போன்றவர்கள்.

எ. செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவர்கள் :- சூனியக்காரருக்கு மற்றொரு பெயர் இது.

ஏ. சூனியக்காரிகள் :- மனம்சார்ந்த சக்திகொண்ட பெண்கள்.

ஜ. மாயவித்தைக்காரர் :- மனம்சார்ந்த சக்திகொண்ட ஆண்கள்.

குறிப்பு:  இவர்களில் அநேகர் மரித்தவர்களின் ஆவிகளோடு தொடர்புகொள்ளுவதாக கூறுகிறார்கள்.  உயிரோடிருக்கிறவர்களால் மரித்தவர்களிடம் தொடர்புகொள்ளமுடியாது என்ற வேதாகமம் கூறுகிறது. (பாடம் 10).  மரித்தவர்களின் ஆவிகளாக சொல்லுகிறவர்கள் பிசாசுகள் அல்லது தீய தூதர்களே (வெளிப்படுத்தல் 16:13,14).  பளிங்கு பந்துகள், கைரேகை படிப்பது, சோதிடம் சொல்லுவது, இலை படிப்பது, மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுவது – இவைகளெல்லாம் தேவன் மனிதரோடு தொடர்புகொள்ளும் வழிமுறைகளல்ல.  இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களோடு இணைந்து கொள்ளுகிற அனைவரும் அருவருப்பானவர்கள் என்றும் (உபாகமம் 18:12), இதில் தொடருகிறவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு வெளியே அடைக்கப்படுவார்கள் என்றும் (கலாத்தியர் 5:19-21; வெளிப்படுத்தல் 21:8; 22:14,15) வேதவாக்கியம் தெளிவாக போதிக்கிறது.

12. மெய்யான தீர்க்கதரிசியின் ஊழியம் சபைக்காகவா அல்லது அவிசுவாசிகளுக்காகவா?

 “தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” – 1 கொரிந்தியர் 14:22.

பதில்:  வேதாகமம் தெளிவாக இருக்கிறது.  ஒரு தீர்க்கதரிசியின் செய்தி சிலவேளைகளில் பொதுமக்களை பக்தியடையச் செய்தாலும் தீர்க்கதரிசியின் முதல் நோக்கம் சபைக்கு ஊழியம் செய்வதே.

13. தேவனுடைய கடைசிகால சபையில் தீர்க்கதரிசன வரம் இருக்கிறதா?

பதில்:  தேவனுடைய கடைசிகால சபையை விவரிக்க இயேசு ஆறு குறிப்புகளைக் கொடுத்ததை பாடம் 23ல் நாம் பார்த்தோம்.   அவைகளை சற்றுத் திருப்பிப்பார்ப்போம்.

அ. கி.பி.538ம் 1798ம் இடையிலே அது அதிகாரப்பூர்வ அமைப்பாக இருந்திருக்காது.

ஆ. அது கி.பி.1798க்கு பிறகு எழும்பி தன் வேலையைச்  செய்யும்.

இ. அது ஏழாம்நாள் ஒய்வு உட்பட பத்துக் கற்பனைகளையும் கைக்கொள்ளும்.

ஈ. அது தீர்க்கதரிசன வரத்தை பெற்றிருக்கும்.

உ. அது உலகளாவிய ஊழியம் செய்கிற சபையாக இருக்கும்.

ஊ. வெளிப்படுத்தல் 14:6-14 வரை இருக்கும் முத்தூதை அது போதிக்கும்.

தேவனுடைய கடைசிகால மீதமான சபை தேவனுடைய ஆறு குறிப்புகளிலும் மிகச் சரியாகப் பொருந்தவேண்டும்.  அப்படியானால் கடைசிகால சபையில் தீர்க்கதரிசன வரம் இருக்கவேண்டும். அது ஒரு தீர்க்கதரிசியையும் பெற்றிருக்கும்.

14. அனைத்து வரங்களையும் பெற்றிருக்கிற தேவனுடைய கடைசிகால சபையில் நீங்கள் சேரும்போது அது எவ்விதம் உங்களை பாதிக்கும்?

“நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்” – எபேசியர் 4:14.

பதில்:  அது ஆவிக்குரியவிதத்தில் நங்கூரமிடும்.  அதற்குப்பின் நீங்கள் ஒருபோதும் நிச்சயமற்றவராக, நிலையில்லாதவராக இருக்கமாட்டீர்கள்.

15. 1 கொரிந்தியர் 12:1-18ல் அப்போஸ்தலராகிய பவுல், இயேசு சபைக்குக் கொடுத்த வரங்களை சரீரத்தின் பகுதிகளோடு ஒப்புமைப்படுத்துகிறார்.  தீர்க்கதரிசன வரத்தை சரீரத்தின் எந்த பாகம் மிகச் சரியாக எடுத்துக்காட்டுகிறது?

 “முற்காலத்தில் இஸ்ரவேலில்  யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிருஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்” – 1 சாமுவேல் 9:9.

பதில்:  சிலவேளைகளில் தீர்க்கதரிசி ஞானதிருஷ்டிக்காரன் என்று (எதிர்காலத்தைக் காண்பவராக) அழைக்கப்படுவதால், கண்கள் என்பது தீர்க்கதரிசனவரத்தை மிகச் சரியாக எடுத்துக்காட்டும்.

16. தீர்க்கதரிசனம் என்பது சபையின் கண்களாக இருப்பதினால் தீர்க்கதரிசன வரம் இல்லாத சபை எந்த நிலையில் இருக்கும்?

பதில்: அது குருடாக இருக்கும். “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே” (மத்தேயு 15:14) என்று சொன்னபோது, அதன் ஆபத்தான விளைவுகளையே இயேசு குறிப்பிட்டார்.

17. இயேசு கொடுத்த அனைத்து வரங்களையும் தேவனுடைய மீதமான சபை பெற்றிருக்கவேண்டுமா?

பதில்  ஆமாம். தேவனுடைய கடைசிகால மீதமான சபை “யாதொரு வரத்திலும் குறைவில்லாத”தாக இருக்கும் என்று வேதவாக்கியம் தெளிவாகப் போதிக்கிறது.  அதாவது அது தீர்க்கதரிசனவரம் உட்பட (1 கொரிந்தியர் 1:5-8) அனைத்து வரங்களையும் பெற்றிருக்கவேண்டும்.

அப்போஸ்தலர்
 தீர்க்கதரிசிகள்
 சுவிசேஷகர்
 மேய்ப்பர்
போதகர்
18. தேவனுடைய கடைசிகால மீதமான சபை  இயேசுகிறிஸ்துவைக்குறித்தச் சாட்சியைக் கொண்டிருக்கும் என்று வெளிப்படுத்தல் 12: 17 குறிப்பிடுகிறது. 
வெளிப்படுத்தல் 19:10 “இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது” என்கிறது.  இப்படியிருக்க, சபை ஒரு தீர்க்கதரிசியை பெற்றிருக்கும் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாமா?

பதில்:  ஆமாம். வெளிப்படுத்தல் 19:10ல் ஒரு தூதன்: “உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதர்ரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்” என்று குறிப்பிட்டான்.  அதாவது இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பெற்றிருக்கிற சகோதரரில் நானும் ஒருவன் என்றான்.  அதே தூதன் வெளிப்படுத்தல் 22:9ல் யோவானுக்கு அதேவிதமாக தன்னை அடையாளப்படுத்தி “உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும் … நானும் ஒரு ஊழியக்காரன்” என்றான். எனவே இயேசு கிறிஸ்துவைக்குறித்த சாட்சியைப்பெற்றிருப்பதும் தீர்க்கதரிசியாயிருப்பதும் ஒன்றே என்று தெரிகிறது.

19. “இயேசுவைப்பற்றின சாட்சி” என்ற வார்த்தைகளின் மற்ற குறிப்படையாளங்கள் என்ன?

பதில்:  “இயேசுவைப்பற்றின சாட்சி” என்றால் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் இயேசுவிடமிருந்து வருகின்றன என்று பொருள்  இவ்விதம் மெய்யான தீர்க்கதரிசியின் வார்த்தைகளை இயேசுவிடமிருந்து வரும் விசேஷ செய்திகளாக நாம் கருதவேண்டும் (வெளிப்படுத்தல் 1:1; ஆமோஸ் 3:7) மெய்யான தீர்க்கதரிசியின்மேல் எவ்விதத்திலாகிலும் நிந்தனையை கொண்டுவருவது மிகவும் கொடிய  ஆபத்தாக இருக்கும்.  அது, அவர்களை அனுப்பி வழிநடத்தின இயேசுவின் மேலேயே நிந்தனையைக் கொண்டுவருவதாக இருக்கும். “என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள்” (சங்கீதம் 105:15) என்று தேவன் எச்சரிப்பதில் எந்தவொரு ஆச்சரியமுமில்லை.

20. மெய்யான தீர்க்கதரிசிக்கான வேதாகம தகுதிகள் யாவை?

பதில்:  மெய்யான தீர்க்கதரிசியை சோதிக்கும் வேதாகம குறிப்புகள்:

அ. தேவ பக்தியுள்ள வாழ்க்கை (மத்தேயு 7:15-20).

ஆ. தேவனால் ஊழியத்திற்கென்று அழைக்கப்படுதல் (ஏசாயா 6:1-10; ஏரேமியா 1:5-10; ஆமோஸ் 7:14,15).

இ. வேதாகமத்திற்கு இசைவாக பேசி எழுதுதல் (ஏசாயா 8:19.20).

ஈ. நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்னறிவித்தல் (உபாகமம் 18:20-22).

உ. தரிசனங்களைப் பெறுதல் (எண்ணாகமம் 12:6).

21. தமது கடைசிகால மீதமான சபைக்கு தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினாரா?

பதில்:   ஆமாம். அனுப்பினார்

 அதைக் குறித்த சுறுக்கம்:

தேவன் ஒரு வாலிபப் பெண்ணை அழைக்கிறார்: தேவனுடைய கடைசிகால சபை 1840களின் ஆரம்பத்தில் உருவாகத் துவங்கி, அதற்கான நடத்துனரின் அவசியத்தில் இருந்தது.  எனவே ஆமோஸ் 3:7ல் வரும் வாக்குத்தத்தத்திற்கு இசைவாக, தேவன் எலன் ஹார்மன் என்று அழைக்கப்பட்ட ஒரு வாலிபப் பெண்ணை தமது தீர்க்கதரிசியாக இருக்க அழைத்தார். எலன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.  அவர் தனது ஒன்பதாவது வயதில் ஒரு அசம்பாவிதத்தினால் காயப்பட்டு, மூன்றாவது வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தும்படி நிர்பந்திக்கப்பட்டார்.  பதினேழாவது வயதில் தேவனால் அழைக்கப்படும் வரையிலும் அவருடைய ஆரோக்கியம் குறைந்து கொண்டே வந்தது.  32 கிலோ எடை மாத்திரமே கொண்டிருந்து மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தார்.

அவர்கள் எழுபது வருடங்கள் உழைத்தார்கள்

தேவன் சரீரப்பிரகாரமாக தன்னைத் தகுதிப்படுத்தி, தாழ்மையாக வைத்திருப்பார் என்கிற புரிந்துகொள்ளுதலின்பேரில் எலன் தேவனுடைய அழைப்பை ஏற்றார்.  பின்னர் எழுபது வருடங்கள் கூடுதலாகப் பிழைத்திருந்து தனது 87வது வயதில் மரித்தார்.  தன்னுடைய நோக்கமும் வேலையும், சபையோரை சபையின் நம்பிக்கையான வேதாகமத்திற்கும், இயேசுகிறிஸ்துவின் இலவச ஈவாகி நீதிக்கும் திருப்புவதே என்று அவர் வலியுறுத்தினார்.  இந்த வேதபாடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற தீர்க்கதரிசிக்கான அனைத்துச் சோதனைகளையும் எலன் நிறைவேற்றினார்.

புனைப்பெயரும் புத்தகங்களும்

 சபை பொறுப்பிலிருந்த ஜேம்ஸ் உவைட்-ஜ திருமணம் புரிந்து, எலன் ஜி உவைட் என்னும் பெயரில் அவர் எழுதினார்.  உலகத்தின் அருமையான எழுத்தாளர்களில் அவரும் ஒருவராவார்.  உலகமுழுவதும் வாசிக்கப்படுகிற அவருடைய புத்தகங்கள் ஆரோக்கியத்திலும், கல்வியிலும், இச்சையடக்கத்திலும், கிறிஸ்தவ இல்லத்திலும், பிள்ளை வளர்ப்பிலும், புத்தகம் எழுதுவதிலும் மற்றும் அதனை வெளியிடுவதிலும், தேவையிலிருப்போருக்கு உதவுவதிலும், ஊழியத்திலும், உக்கிராணத்துவத்திலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும், இன்னும் அநேக காரியங்களிலும் தேவனால் ஏவப்பட்ட அநேக ஆலோசனைகளை கொடுக்கிறது.  கல்வி என்கிற அவர்களுடைய புத்தகம் அந்தத் துறையில் அதிகாரம்கொண்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.  உலக பல்கழைக்கழகங்களில் அது பாடப்புத்தகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.  அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் காலத்திற்குப் பொருந்துவாதகவும் இருப்பதால், ஒரு குறிப்பிட்ட நாட்டின் கல்வி அமைச்சரால் ஒருமுறை களவாடப்பட்டு, அவருடைய சொந்தப் பெயரில் வெளியிடப்பட்டது. கொலம்பியா பல்கழைக்கழகத்தின் முன்னாள் பேராசியராக இருந்த டாக்டர் ஃபிளாரன்ஸ் ஸ்டிரேட் மேயர்:  அந்தப் புத்தகம் “மிகவும் முன்னேறிய கல்விக் கொள்கைகளைக்” கொண்டிருப்பதாகவும், “தன்னுடைய காலத்திற்கு 50 வருடங்கள் மேம்பட்டு” இருப்பதாகவும் கூறினார்.  கார்னல் பல்கழைக்கழகத்தின் ஊட்டச்சத்துப் பகுதியின் முன்னாள் பேராசிரியராயிருந்த டாக்டர் கிளைவ் மெக்கே என்பவர் ஆரோக்கியத்தைப் பற்றின அவருடைய எழுத்துக்களைக்குறித்து:  “ஊட்டச்சத்தைப்பற்றின நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு வெகு காலத்திற்குமுன்பே வந்த திருமதி உவைட் அவர்களின் எழுத்துக்களைத் தவிர, வேறு மேன்மையான நடத்துதல் இன்றைக்கு இல்லை” என்கிறார்.  செய்தி ஒலிபரப்பாளரான பால் ஹார்வே என்பவர்:  “ஊட்டச்சத்தைக் குறித்து அத்தனை ஆழமான தெளிவோடு அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  அவர்கள் வெளிக்கொண்டுவந்திருக்கிற அநேக கொள்கைகளில் இரண்டு மாத்திரமே அறிவியல் ரீதியாக இதுவரை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்.  “யுகங்களின் வாஞ்சை” “The Desire of Ages” என்கிற கிறிஸ்துவின் வாழ்க்கையைக் குறித்த அவருடைய புத்தகம் இலண்டனின் Stationers Hall – லில் “English Masterpiece” “ஆங்கிலத்தின் தலைசிறந்த படைப்பு” என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.  அது, இருதயத்தைத் தூண்டக்கூடியதாகவும், வர்ணிக்கக்கூடாதளவு உயர்த்துகிறதாகவும் இருக்கிறது.  வல்லுனர்கள் ஒப்புக்கொண்டதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, ஒரு நபருடைய IQ உயர்த்தப்படமுடியும் என்று – அறிவைக்குறித்த கருத்தில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.  1905ல் புற்றுநோய் என்பது ஒரு கிருமி வைரஸ்)  என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதை மருத்துவ அறிவியல் 1950ல்தான் ஒப்புக்கொள்ளத்துவங்கியது.  யுகம் நெடுகிலும் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களில் எலன் ஜி உவைட் நான்காவது இடத்தில் இருக்கிறார்.  “தேவனிடத்திற்கு வழி” (Steps to Christ) என்கிற கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்த புத்தகம் 150க்கும் மேலான மொழிகளிலும் வட்டார பாஷைகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

22. எலன் உவைட் தரிசனங்கள் கண்டாரா?

பதில்:  ஆமாம்.  அநேக தரிசனங்களைப் பெற்றார்.  அவைகள்:  சில நிமிடங்களிலிருந்து ஆறுமணி நேரம்வரை நீண்டிருக்கின்றன.  இந்த வேதபாடத்தில் ஏழாவது கேள்வியின் பதிலாக கொடுக்கப்பட்டிருக்கிற தரிசனத்தின் வேதாகமத் தரத்தை அவைகள் எட்டுகின்றன.

23. எலன் உவைட்டின் வார்த்தைகள் வேதாகமத்தின் ஒருபகுதியா அல்லது வேதாகமத்திற்கு கூடுதலா?

பதில்:  இல்லை! மூலகோட்பாடுகள் வேதாகமத்திலிருந்து மாத்திரமே வருகின்றன.  கடைசிகால தீர்க்கதரிசியாக அவர்கள் நோக்கமெல்லாம், இயேசுவின் அன்பையும் அவருடைய அதிசீக்கிர வருகையையும் அழுத்திக் கூறுவதே!  இயேசுவை சேவித்து அவருடைய நீதியை இலவச ஈவாக ஏற்றுக்கொள்ள அவர்கள் மக்களை நெருக்கினார்கள்.  முடிவுகாலத்திற்கான வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கு – விசேஷமாக இன்றைய உலகிற்குக் கொடுக்கப்பட்ட இயேசுவின் முத்தூதிற்கு – மக்களுடைய கவனங்களை அவர்கள் திருப்பினார்கள். (வெளிப்படுத்தல் 14:6-14) இந்த நம்பிக்கையின் செய்திகளை வேகமாக உலகம் முழுவதும் பகிர்ந்துகொடுக்க அவர்கள் வேண்டினார்கள்.

24. எலன் உவைட் வேதவாக்கியங்களுக்கு இசைவாகப் பேசினார்களா?

பதில்:  ஆமாம்.  அவருடைய எழுத்துக்களில் வேதவாக்கியங்கள் நிரம்பியிருக்கின்றன.  அவரின் வெளிப்படையான நோக்கம் – மக்களுக்கு வேதாகமத்தைச் சுட்டிக் காட்டுவதே!  அவருடைய வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளுக்கு ஒருகாலும் முரணாக இல்லை.

25. அவர்கள் எழுதியிருப்பதை நான் அறியாதபோது, எவ்விதம் அவர்களை மெய்யான தீர்க்கதரிசியாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?

பதில்:  அவர்கள் எழுதியிருக்கிறதை வாசிக்கும்வரை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது தான். எனினும் (1) தேவனுடைய மெய்யான கடைசிகால சபையில் ஒரு மெய்யான தீர்க்கதரிசி இருந்தார்கள் என்றும், (2) அவர்கள் தீர்க்கதரிசிக்கான சோதனைகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றும், (3) தீர்க்கதரிசியினுடைய வேலையை செய்தார்கள் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.  அவருடைய புத்தகங்களில் ஒன்றைப் பெற்று வாசித்து, அது வேதாகமத்திற்கு இசைவாக இருக்கிறதா என்றும், உங்களை இயேசுவிடம் இழுக்கிறதா என்றும் உங்களையே நீங்கள் கேட்கலாம்.  அது உங்களுக்காக எழுதப்பட்டது!  பரபரப்பான சவால்களை கண்டுபிடிப்பீர்கள்!

26.தீர்க்கதரிசியைக் குறித்த என்ன மூன்று குறிப்புகளை பவுல் கொடுக்கிறார்?

பதில்:  “தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்” – 1 தெசலோனிக்கேயர் 5:20,21.  ஒரு தீர்க்கதரிசியை நாம் நெகிழக்கூடாது என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.  மாறாக, அவர் வேதாகமத்திற்கு இசைவாக அறிவித்து நடக்கிறாரா என்கிறதை கவனமாக சோதிக்கவேண்டும்.  ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகளோ நடக்கையோ வேதாகமத்திற்கு இணக்கமாக இருக்கும்போது அவைகளுக்கு நாம் செவிகொடுக்கவேண்டும்.  இதைத்தான் தேவன் தமது கடைசிகால மக்களிடம் கேட்கிறார்.  (தீர்க்கதரிசியின் புத்தகத்தைப் பெற, இப்புத்தகத்தின் முகவரியை தொடர்பு கொள்ளவும்).

27. மெய்யான தீர்க்கதரிசியின் வார்த்தைகளையும் ஆலோசனைகளையும் நெகிழுகிறவர்களை இயேசு  எவ்விதம் கருதுகிறார்?

பதில்:  மெய்யான தீர்க்கதரிசியை நிராகரிப்பதை தேவனுடைய ஆலோசனைகளை நிராகரிப்பதாக இயேசு கருதுகிறார் (லூக்கா 7:28-30). மேலும் தமது தீர்க்கதரிசிகளை நம்புவதைப் பொறுத்துதான் ஆவிக்குரிய செழிப்பு இருக்கிறது என்றும் அவர் தெளிவாக கூறுகிறார் (2 நாளாகமம் 20:20).

28. கடைசிகால மெய்யான தீர்க்கதரிசிகள் புதிய உபதேசங்களை புகுத்துகிறார்களா? அல்லது மூலஉபதேசங்கள் வேதாகமத்திலிருந்து மாத்திரம் வருகிறதா?

பதில்:  மெய்யான கடைசிகால தீர்க்கதரிசிகள் புதிய மூலஉபதேசங்களை கூறமாட்டார்கள் (வெளிப்படுத்தல் 22:18,19). வேதாகமமே அனைத்து மூலஉபதேசங்களுக்கும் ஆதாரம்.  எனினும் மெய்யான தீர்க்கதரிசிகள்: 

அ. தீர்க்கதரிசியால் சுட்டிக்காட்டப்படும்வரையிலும் வெளிப்படாமலிருந்த மூலஉபதேசங்களின் புதிய முகப்புகளை வெளிக்காட்டுவார்கள் (ஆமோஸ் 3:7).

ஆ. தேவனுடைய மக்களை இயேசுவோடு நெருங்கி நடக்கிற ஒரு வாழ்க்கைக்கும், அவருடைய வார்த்தைகளை ஆழமாக ஆராய்வதற்கும் நடத்துவார்கள்.

இ. கடினமான, தெளிவில்லாத, கவனித்திராத வேத பகுதிகளை புரிந்துகொள்ள தேவமக்களுக்கு உதவுவார்கள்.  இவ்விதம் அவைகள் உயிர்பெற்று அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.

ஈ. மாய்மாலத்திலிருந்தும், வஞ்சகத்திலிருந்தும், ஆவிக்குரிய உறக்கத்திலிருந்தும் தேவனுடைய மக்களை அவர்கள் பாதுகாப்பார்கள்.

உ. அன்றாட செய்திகளின் சம்பவங்களோடு ஒப்பிட்டு, புதிய அர்த்தங்களைக் கொடுக்கும் முடிவுகால தீர்க்கதரிசனங்களை  புரிந்துகொள்ள தேவனுடைய மக்களுக்கு அவர்கள் உதவுவார்கள். 

ஊ.  இயேசுவின் அதிசீக்கிர வருகையையும் உலக முடிவின் நிச்சயத்தையும் உணர அவர்கள் தேவனுயை பிள்ளைகளுக்கு உதவுவார்கள்.

இயேசுவின் மேலிருக்கிற அன்பு ஆழமாகவும், வேதாகமத்தைக் குறித்த புதிய எழுப்புதலை பெறவும், வேதாகம தீர்க்கதரிசனங்களை புரிந்துகொள்ளவும் தேவனுடைய கடைசிகால தீர்க்கதரிசியை கவனித்துக்கேளுங்கள்.  உங்களுடைய வாழ்க்கை மகிமையான புதிய கோணங்களில் உயிர்பெறுவதை நீங்கள் காண்பீர்கள்.  தம்முடைய கடைசிகால சபையை மிகவும் உபயோகமான தீர்க்கதரிசன செய்திகளினால் ஆசிர்வதிப்பதாக இயேசு கூறுகிறார்.  கர்த்தருக்கு தோத்திரம், தமது கடைசிகால மக்களுக்கு பரலோகம் நினைக்கிற ஒவ்வொன்றையும் அவர் செய்கிறார்!  தம்முடைய மக்களை இரட்சித்து, தமது மகிமையுள்ள இராஜ்யத்திற்கு அவர்களை எடுத்துச்செல்ல அவர் எண்ணங்கொண்டிருக்கிறார்.  அவரைப் பின்பற்றுகிறவர்கள் பரலோக நுழைவிற்கான உத்தரவாதத்தைப் பெறுகிறார்கள் (மத்தேயு 19:27-29).

குறிப்பு:  வெளிப்படுத்தல் 14:6-14ன் முத்தூது பாடவரிசையில் இது ஒன்பதாவதும் கடைசியுமான பாடம். இன்னும் முக்கியமான மூன்று காரியங்களைக் குறித்த அற்புதமான பாடங்கள் இருக்கின்றன.

29. எலன் உவைட் அவர்களின் எழுத்துக்கள் வேதவாக்கியங்களோடு இணக்கமாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுப்பார்த்து சோதிக்கவும், அவைகள் ஒத்திருந்தால் அவைகளை ஏற்றுக்கொள்ளவும் நீங்கள் விரும்புகிறீர்களா?

பதில்: ___________________________________________

சிந்தனைக்  கேள்விகள்

1. ஒரு சபையில் தீர்க்கதரிசி இல்லாதபோது என்ன சம்பவிக்கிறது?

பதில்:  “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்” – நீதிமொழிகள் 29:18.  தனக்கு ஆலோசனை கூறி, தன்னை நடத்தி, இயேசுவிடமும் வேதாகமத்திடமும் திரும்ப கொண்டுவருவதற்கு தீர்க்கதரிசி இல்லாதபோது மக்கள் ஒழுங்கில்லாதுபோய், முடிவாக அழிந்துவிடுவார்கள் (சங்கீதம் 74:9,10).

2. இப்போதைக்கும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கும் இடையிலே கூடுதலான தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்: யோவேல் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் (யோவேல் 2:28-32), அது நடக்கும் என்றே தோன்றுகிறது. பொய் தீர்க்கதரிசிகளும் இருப்பார்கள் (மத்தேயு 7:15; 24:11,24). வேதாகமத்தைக்கொண்டு தீர்க்கதரிசிகளை சோதிக்க ஆயத்தப்பட்டு (ஏசாயா 8:19,20; 2 தீமோத்தேயு 2:15) அவர்களுடைய ஆலோசனைகள் மெய்யானவைகளாக இருந்தால்மாத்திரம் ஏற்றுக்கொள்ளவும், போலியாக இருக்கும்போது அவர்களை நிராகரிக்கவும் நாம் ஆயத்தப்படவேண்டும். மக்களை எழுப்புவதற்காகவும் அவர்களை எச்சரித்து இயேசுவிடமும் அவருடைய வார்த்தையிடமும் திருப்புவதற்காகவும் எப்போது தீர்க்கதரிசிகள் அவசியம் என்பதை தேவன் அறிந்திருக்கிறார்.  தமது மக்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துவரும்படி தேவன் ஒரு தீர்க்கதரிசியை (மோசே) அனுப்பினார் (ஒசியா 12:13).  இயேசுவின் முதலாம் வருகைக்கு (மாற்கு 1:1-8)  மக்களை ஆயத்தப்படுத்தி அவர் ஒரு தீர்க்கதரிசியை (யோவான்ஸ்நாகன்) அனுப்பினார்.  இந்த கடைசிகாலத்திற்கான தீர்க்கதரிசன செய்தியையும் அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். வேதாகமத்திற்கும், முக்கிய கடைசிகால தீர்க்கதரிசனத்திற்கும் நடத்தி, நம்மை பெலப்படுத்தி, உற்சாகப்படுத்தி, நிச்சயம் கொடுத்து, ஆண்டவர் வரும்போது “பிழையற்றவர்களாக” அவரை சந்திப்பதற்கேதுவாக இயேசுவைப்போல நம்மை மாற்ற தேவன் அவர்களை அனுப்புகிறார்.  ஒரு தீர்க்கதரிசியின் உதவி இல்லாதபோது பின்வாங்கிப்போவாதினாலோ அல்லது ஆவிக்குரியவிதத்தில் தூங்கிப்போவதனாலோ அல்லது எப்போதும் உழைப்பதாலோ நித்தியத்தை நாம் இழந்துவிடக்கூடும்.  எனவே நாம் தீர்க்கதரிசன செய்திகளை வரவேற்று, நம்முடைய சொந்த நன்மைக்காக அவைகளை அனுப்பினதற்காக தேவனை துதிப்போமாக.

3. ஏன் இன்றைக்கு மிக அதிக சபைகளில் தீர்க்கதரிசன வரம் இல்லை?

பதில்: தமது சபை தமது பிரமாணங்களை கைக்கொள்ளும்போதுமாத்திரமே தேவன் பொதுவாக திர்க்கதரிசிகளை அனுப்புகிறார்.  “வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை” என்று புலம்பல் 2:9 கூறுவதை கவனியுங்கள்.  எசேக்கியேல் 7:26; எரேமியா 26:4-6; எசேக்கியேல் 20:12-16; நீதிமொழிகள் 29:18 ஆகிய வசனங்களைத் திருப்பிப்பாருங்கள். தேவனுடைய மக்கள் அவருடைய பிரமாணங்களை அலட்சியப்படுத்தும்போது அவர் தீர்க்கதரிசியை அனுப்புவதில்லை என்கிறதை இந்த வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.  அவர்கள் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும்போது, அவர்களை உற்சாகப்படுத்தி நடத்த அவர் தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார்.  எனவே கடைசிகாலத்திற்கான தேவனுடைய மீதமான சபை அவருடைய பிரமாணங்களைக் கைக்கொண்டதாக எழும்பினபோது ஒரு தீர்க்கதரிசி அவசியப்பட்டார்.  அது தீர்க்கதரிசி தோன்றுவதற்கான காலமாக இருந்தது.  எனவே தேவன் ஒருவரை அனுப்பினார்.

4. தீர்க்கதரிசன வரம் எனக்கு அர்த்தமுள்ளதாக இருக்க நான் என்ன செய்யமுடியும்?

பதில்:  தீர்க்கதரிசன வரத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமெனில், இயேசு உங்களை வழிநடத்தி, பாதுகாத்து, தமது வருகைக்கு ஆயத்தப்படுத்தும்படி அவைகளை உங்களுக்கென்று படித்து ஜெபத்தோடு பின்பற்றவேண்டும்.  “கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்பட்டபடியே … அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக் குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்” – 1 கொரிந்தியர் 1:4-8.

5. தேவனுடைய கடைசிகால மீதமான சபையில் தீர்க்கதரிசன வரமா அல்லது அந்நியபாஷையின் வரமா எது முக்கிய பங்கு வகிக்கும்?

பதில்:  தீர்க்கதரிசன வரமே முக்கிய பங்கு வகிக்கும்.  1 கொரிந்தியர் 12:28ல், வரங்களில் இரண்டாவதாக தீர்க்கதரிசன வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  அந்நிய பாஷையின் வரம் கடைசியாக வருகிறது. தீர்க்கதரிசன வரமில்லாத சபை குருடான ஒன்று. (இந்த  பாடத்தின் 16வது கேள்வியை பார்க்கவும்).  இயேசு தமது கடைசிகால சபை குருடாயிருப்பதன் ஆபத்தைக்குறித்து பவித்திரமாக எச்சரிக்கிறார்.  தங்களுடைய கண்களை பார்பதற்கேதுவாக பரலோக கலிக்கத்தினால் அபிஷேகிக்கும்படியும் வலியுறுத்துகிறார் (வெளிப்படுத்தல் 3:17,18). கலிக்கம் சபைக்கு அனைத்து வரங்களையும் கொடுக்கிற (1 கொரிந்தியர் 12:4, 7-11) பரிசுத்த ஆவியானவரை

(1 யோவான் 2:20,27; யோவான் 14:26)  எடுத்துக்காட்டுகிறது. தேவனுடைய தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்பது, வேதவாக்கியத்தை தெளிவாக புரிந்துகொள்ளவும், நிச்சயமின்மையும் குழப்பத்தையும் தடுக்கவும் அவருடைய மீதமான சபைக்கு உதவும்.

6. கிறிஸ்தவ வாழ்க்கைக்கான ஆதாரமாகவும் நடத்துதலாகவும் நான் “வேதாகமத்தை, வேதாகமத்தை மாத்திரமே” நம்புகிறேன்.  எனவே அனைத்துவிதமான நவீன தீர்க்கதரிசியையும் நான் நிராகரிக்கிறேன்.

பதில்:  நீங்கள் வேதாகமமே கிறிஸ்தவ மூலகோட்பாடுகளுக்கான ஆதாரம் என்று நம்புவதில் சரியாக இருக்கிறீர்கள்.  எனினும் வேதாகமம் குறிப்பிடும் கீழ்கண்டவற்றையும் நினைவுகூருங்கள்.

அ. முடிவுகாலம்வரையிலும் தேவனுடைய சபையில் தீர்க்கதரிசன வரம் இருக்கும் (எபேசியர் 4:11,13).

ஆ. தேவனுடைய முடிவுகால சபை தீர்க்கதரிசன வரத்தைப் பெற்றிருக்கும் (வெளிப்படுத்தல் 12:17; 19:10; 22:9).

இ. தீர்க்கதரிசியின் ஆலோசனையை நிராகரிப்பது தேவனுடைய ஆலோசனையை நிராகரிப்பதாகும் (லூக்கா 7:28-30).

ஈ. தீர்க்கதரிசிகளை சோதிக்கவும், வேதாகமத்திற்கு இசைவாக பேசி வாழ்வார்களெனில் அவர்களுடைய ஆலோசனைகளை பின்பற்றவும் நாம் கட்டளை பெற்றிருக்கிறோம் (1 தெசலோனிக்கேயர் 5:20,21).  “வேதாகமத்தில், வேதாகமத்தில் மாத்திரமே” தங்கள் விசுவாசத்தை வைக்கும் மக்கள், தீர்க்கதரிசிளைக்குறித்த அதன் ஆலோசனையை பின்பற்றவேண்டும். மெய்யான தீர்க்கதரிசிகள் வேதாகமத்திற்கு இணக்கமாகவே எப்போதும் பேசுவார்கள்.  தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருக்கிற தீர்க்கதரிசிகள் பொய்யானவர்களும் நிராகரிக்கப்படவேண்டியவர்களுமாம்.  தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்கவோ, அவர்களை சோதிக்கவோ தவறும்போது, அவ்விதம் செய்யும்படி கட்டளையிடுகிற வேதாகமத்தின்மேல் நான் என்னுடைய நம்பிக்கையை வைக்கவில்லை.

கேள்விகள்

1. ஒரே பொருளை உடையவை: (4)

_____ இயேசுவைக் குறித்த சாட்சி.
_____ அந்நிய பாஷையின் வரம்.
_____ தீர்க்கதரிசன ஆவி.
_____ மனம்சார்ந்த சக்தி கொண்டவர்களின் யூகங்கள்.
_____ தீர்க்கதரிசன வரம்.
_____ மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுதல்.
_____ சபையின் பேசும் தீர்க்கதரிசிகள்.


2. தேவன் தீர்க்கதரிசன வரத்தை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தருகிறாரா? (1)

_____ ஆம்.
_____ இல்லை.


3. எபேசியர் 4ன்படி இயேசு தாம் பரமேறினபோது சபைக்குக் கொடுத்த ஐந்து வரங்கள்? (5)

_____ தீர்க்கதரிசிகள்.
_____ போதகர்.
_____ பாடகர்.
_____ தேவையானோரிடம் பகிருதல்.
_____ மேய்ப்பர்.
_____ அப்போஸ்தலர்.
_____ சாட்சி பகிருதல்.
_____ சுவிசேஷகர்.


4. தீர்க்கதரிசனம் உட்பட இந்த ஐந்து வரங்களும் சபையில் எதுவரையிலும் நிலைத்திருக்கும்? (1)

_____ புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மரிக்கும் வரையிலுமே.
_____ நியாயத்தீர்ப்பு துவங்கும் வரையிலும்.
_____ உலகத்தின் முடிவுவரையிலும்.


5. வேதாகமத்தின்படி தரிசனத்தில் இருக்கும் தீர்க்கதரிசியைக் குறித்த உண்மைகள்: (5)

_____ அறியப்படாத மொழிகளில் பேசுதல்.
_____ தரிசனத்தில் ஒருபோதும் பேசாதிருத்தல்.
_____ கண்கள் திறந்திருத்தல்.
_____ பலவேளைகளில் கொடூரமாகுதல்.
_____ சரீரத்தில் மூச்சில்லாதிருத்தல்.
_____ தரிசனத்தில் இருக்கும்போது சிலவேளைகளில் பேசுதல்.
_____ உலக சுற்றுச்சூழலைக்குறித்த நினைவின்றி இருத்தல்.
_____ இயற்கைக்கு அப்பாற்பட்ட பலத்தைப் பெறுதல்.


6. தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வந்தார் என்பதற்கு அற்புதங்கள் ஆதாரமே. (1)

_____ ஆம்.
_____ இல்லை.


7. தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வருகிறாரென்று இதினால் நிச்சயமாக அறியலாம்: (1)

_____ அவர் அன்பாகவும், தயவாகவும் இருக்கிறார்.
_____ ஆச்சரியமான அற்புதங்களை நடப்பிக்கிறார்.
_____ கண்களைப் பறிக்கும் பிரகாசத்தோடு இருக்கிறார்.
_____ வேதாகமத்தை நன்கு அறிந்திருக்கிறார்.
_____ இயேசுவைப்போலத் தோன்றுகிறார்.
_____ வேதாகமத்திற்கு இணக்கமாக பேசி நடக்கிறார்.


8. வேதாகத்தால் கடிந்துகொள்ளப்படாதவை: (1)

_____ குறிசொல்லுதல்.
_____ ஆண் மற்றும் பெண் சோதிடம்.
_____ சோதிடர்.
_____ சூனியக்காரன்.
_____ மந்திரவாதி.
_____ ஆவிகளின் வழியாக பேசுதல்.
_____ வேதாகத்திற்கு இணக்கமாகப் பேசி வாழும் ஒரு தீர்க்கதரிசி.


9. சபைக்கு ஊழியம் செய்வதே ஒரு தீர்க்கதரிசியின் முதல் வேலை: (1)

_____ ஆம்.
_____ இல்லை.


10. ஒரு தீர்க்கதரிசியைப் பெற்றிராத சபை தேவனுடைய முடிவுகால மெய்யான சபையாக இருக்கமுடியாது. (1)

_____ ஆம்.
_____ இல்லை.


11. சரீரத்தின் எந்த பகுதி தீர்க்கதரிசனத்தை எடுத்துக்காட்டுகிறது? (1)

_____ வாய்.
_____ கண்கள்.
_____ செவிகள்.
_____ பாதங்கள்.
_____ கைகள்.


12. இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன் அதிக மெய்தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள்: (1)

_____ ஆம்.
_____ இல்லை.


13. “வேதாகமத்தை, வேதாகமத்தை மாத்திரமே” பின்பற்றுவது – மெய்யான தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்வதையும் உள்ளடக்கும். (1)

_____ ஆம்.
_____ இல்லை.


14. தீர்க்கதரிசனத்தைக்குறித்து 1 தெசலோனிக்கேயர் 5:20,21ல் கட்டளையிடும் மூன்று காரியங்கள்: (3)

_____ தீர்க்கதரிசிகளையோ அல்லது தீர்க்கதரிசனத்தையோ அலட்சியம் செய்யாதே.
_____ அனைத்து தீர்க்கதரிசிகளையும் பின்பற்று.
_____ தீர்க்கதரிசியின் வார்த்தை, செயல்கள், நடக்கைகளை வேதாகமத்தைக்கொண்டு சோதித்து நிரூபிக்க.
_____ மெய்யானவர்களா போலியானவர்களா என்று தீர்க்கதரிசிகளையே கேட்க.
_____ நன்மையானதை நம்பி அதைப் பற்றிக்கொள்ள.
_____ அனைத்து தீர்க்கதரிசிகளையும் அலட்சியம்பண்ண.


15. மெய்யான தீர்க்கதரிசியின் ஆலோசனையை நிராகரிக்கும்போது தேவனுடைய ஆலோசனையை நாம் நிராகரிக்கிறோம். (1)

_____ ஆம்.
_____ இல்லை.


16. கடைசிகால மெய் தீர்க்கதரிசிகள் வேதாகமத்தில் காணப்பட்டிராத புதிய மூல உபதேசங்களைப் போதிப்பார்கள்: (1)

_____ ஆம்.
_____ இல்லை.


17. ஏன் அநேக சபைகளில் மெய்யான தீர்க்கதரிசியோ அல்லது தீர்க்கதரிசனங்களோ இல்லை? (1)

_____ தீர்க்கதரிசிகள் வந்தால் நம்பமாட்டார்கள்.
_____ அவர்கள் தேவனுடைய அனைத்து கற்பனைகளையும் கைக்கொள்ளுகிறதில்லை.
_____ தீர்க்கதரிசி இல்லாதபோதே அனைத்து ஆலோசனைகளையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.


18. தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்: (1)

_____ உண்மை.
_____ பொய்.


19. தீர்க்கதரிசன வரம் இல்லாத சபை குருட்டு சபை. (1)

_____ ஆம்.
_____ இல்லை.


20. வேதவாக்கியங்களைக்கொண்டு எலன் உவைட்-ன் எழுத்துக்களை சோதிக்கவும், இசைவாக இருப்பின் ஏற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கிறேன்.

_____ ஆம்.
_____ இல்லை.