நாங்கள் தேவனை நம்புகிறோம்?

வேதபாடங்கள்  25

நீங்கள் தேவனை நம்புகிறீர்களா?  உண்மையாகவா?  உண்மை என்னவெனில் அநேகர் நம்புகிறோம் என்று சொல்லுகிறார்கள்.  ஆனால் அதற்கேற்றபடி நடப்பதில்லை.  அதிலும் மோசமாக, அவரை நம்பாததால் அவரிடமிருந்து திருடவுங்கூடத் துணிந்துவிடுகிறார்கள். 

“தேவனிடமிருந்து எவரும் பணத்தை திருடவோ அல்லது கையாடவோ முடியாது” என்று நீங்கள் சொல்லலாம். எனினும் “நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்” (மல்கியா 3:8) என்று தேவன் தமது மக்களிடம் சொல்லுகிறார். கோடிக்கணக்கானோர் தேவனிடமிருந்து திருடிக்கொண்டிருப்பதாகவே பதிவுகள் காண்பிக்கின்றன.  அது ஒருபுறம் அதிர்ச்சியாக இருக்க மறுபுறம் அந்த திருட்டுப்பணத்தை தங்களுக்காக ஊதாரித்தனமாக உபயோகிக்கின்றனர்.  தங்களுடையதல்லாததை திருடிக் கொண்டிருக்கிறோம் என்கிறதை அநேகர் அறியாதிருக்கின்றனர்.  அந்தத் தவறை நாம் எவ்விதம் தவிர்க்கலாம் என்றும், தேவன்மேல் வைக்கும் உண்மையான விசுவாசத்தின்வழியாக பொருளாதாரத்தில் நாம் எவ்விதம் செழிக்கலாம் என்றும் இந்த வேதபாடத்தில் நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கிறோம்.

1. வேதாகமத்தின்படி நம்முடைய சம்பாத்தியத்தில் எந்த பகுதி ஆண்டவருக்குச் சொந்தமானது?

“தேசத்திலே … தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது” – லேவியராகமம் 27:30.

பதில்:  தசமபாகம் தேவனுக்குச் சொந்தமானது.

2. “தசமபாகம்” என்றால் என்ன?

 “லேவியின் புத்திரர் … அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்தேன்.” 

“இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு எறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்திரமாகக் கொடுத்தேன்;” – எண்ணாகமம் 18:21,24.

பதில்:  தசமபாகம் என்பது ஒருவருடைய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி.  அது தேவனுக்குச் சொந்தமானது.  அதை வைத்திருக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை.  தசமபாகத்தை நான் கொடுக்கும்போது அவருக்கு பரிசு கொடுப்பதில்லை.  ஏற்கனவே தேவனுக்குச் சொந்தமானதை அவரிடம் கொடுக்கிறேன்.  என் வருமானத்தின் பத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுக்காதபோது நான் அவருக்கு தசமபாகம் கொடுப்பதில்லை.

3.தசமபாகத்தை ஆண்டவர் எங்கே கொண்டுவரும்படி கேட்கிறார்?

“தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்” – மல்கியா 3:10.

பதில்:   தசமபாகத்தை தமது பண்டசாலைக்குள் கொண்டுவரும்படி அவர் கேட்கிறார்.

4. தமது பண்டசாலை என்று சொல்லும்போது ஆண்டவர் எதைக் குறப்பிடுகிறார்?

“அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்”- நெகேமியா 13:12.

பதில்:  மல்கியா 3:10ல் பண்டசாலையை “என்னுடைய ஆலயம்” என்று தேவன் குறிப்பிடுகிறார்.  அதாவது சபை அவருடைய ஆலயம்.  தசமபாகம் தேவனுடைய பண்டசாலையாகிய ஆலயப் பொக்கிஷ அறைக்கு கொண்டுவரப்படவேண்டும் என்று நெகேமியா 13:12 மேலும் சுட்டிக்காட்டுகிறது.  பண்டசாலையை ஆலயப் பொக்கிஷ அறை  என்று, 1 நாளாகமம் 9:26; 2 நாளாகமம் 31:11,12; நெகேமியா 10:37,38 ஆகிய வசனங்களும் குறிப்பிடுகின்றன.  பழைய ஏற்பாட்டுக் காலங்களில், மிருகங்கள், விளைச்சல் உட்பட அனைத்திலும் தங்களின் வரவில் பத்தில் ஒருபங்கை தேவனுடைய மக்கள் பண்டசாலைக்குக் கொண்டுவந்தனர்.

5. லுவையோடு முடிவடைந்த – சடங்குகள்கொண்ட மோசேயினுடைய அமைப்பின் ஒருபகுதியே தசமபாகம் என்று சிலர் எண்ணுகிறார்கள்.  அது அப்படியல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேதாகமம் எவ்விதம் உதவுகிறது?

 “ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.” – ஆதியாகமம் 14:20.  மேலும்  ஆதியாகமம் 28:22ல் யாக்கோபு: “தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று கூறினான்.

பதில்:  மோசேக்கு வெகுகாலத்திற்குமுன்பு வாழ்ந்திருந்த ஆபிரகாமும் யாக்கோபும் தங்களுடைய சம்பாத்தியத்தில் தசமபாகம் கொடுத்தார்கள் என்பதை இந்த வாக்கியங்கள் வெளிக்காட்டுகின்றன.  எனவே தசமபாகத்தைக்குறித்த தேவனுயை திட்டம் மோசேயின் பிரமாணங்களுக்கு முன்னதாகவே இருந்ததென்று நாம் அறியலாம்.

6. ஆனால் தசமபாக திட்டத்தை இயேசு ஒழித்துவிடவில்லையா?

“மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே” – மத்தேயு 23:23.

பதில்:  இல்லை. மாறாக அவர் ஆமோதித்தார்.  அவர்கள் குறையின்றி தசமபாகம் கொடுத்தபோதும், பிரமாணத்தின் மிக முக்கிய காரியமாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் தவறவிட்டுவிட்டதாக இயேசு யூதர்களைக் கடிந்துகொண்டார்.  பின்னர் தசமபாகம்  கொடுக்கவேண்டும் என்றும், கூடவே நீதியாயும், இரக்கமாயும், விசுவாசமாயும் இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்குத் தெளிவாகக் கூறினார்.

7. பழைய ஏற்பாட்டு நாட்களில் தசமபாகம் எதற்காக உபயோகப்படுத்தப்பட்டது?

“இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்” – எண்ணாகமம் 18:21.

பதில்:  தசமபாகம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசாரியர்களின் வருமானத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டது.  பதினொரு கோத்திரங்களுக்கும் பயிர் செய்வதற்கும் மற்ற தொழிலுக்குமான நிலம் ஒதுக்கப்பட்டிருந்தபோது, லேவி கோத்திரத்திற்கு (ஆசாரியர்களுக்கு) எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை. லேவியர்கள் ஆலயத்தை பராமரித்து மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக முழு நேரமும் உழைத்தார்கள்.  எனவே தசமபாகம் ஆசாரியர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் தாங்கவேண்டும் என்பது ஆண்டவருடைய திட்டம்.

8. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தசமபாக உபயோகத்தைக்குறித்த தமது திட்டத்தை தேவன் மாற்றினாரா?

 “ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?  அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்” – 1 கொரிந்தியர் 9:13,14.

பதில்: இல்லை.  அவர் அதைத் தொடர்ந்தார்.  முழுமையாக சுவிசேஷ ஊழியத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி தசமபாகத்தை உபயோகிக்கவேண்டும் என்பது இன்று அவருடைய திட்டம்.  அனைவரும் தசமபாகம் கொடுத்து, அது சுவிசேஷ ஊழியர்களுக்காக மாத்திரம் கண்டிப்புடன் உபயோகப்படுத்தப்பட்டால், சுவிசேஷ செய்தி உலக முழுவதையும் வேகமாகச் சென்றடைய போதுமான பணம் இருக்கும்.

9. தசமபாகத்தைக்குறித்த நிச்சயமின்றி இருக்கிற மக்களுக்கு என்ன அதிர்ச்சியூட்டும் அறிவிப்புகளை தேவன் கொடுக்கிறார்?

 “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்;  அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” – மல்கியா 3:10.

பதில்:  பெற்றுக்கொள்ளக்கூடாத அளவு உங்கள்மேல் அதிகமான “ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்” என்று அவர் கூறுகிறார். வேதாகமத்தில் இப்படிப்பட்ட ஒரு சவாலை தேவன் கொடுக்கும் ஒரே இடம் இதுதான்.  “ஒரு முயற்சிச் செய்யுங்கள்.  அது வேலைசெய்யுமென்று நான் வாக்குக்கொடுக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.  தேவனுடைய வாக்குறுதியைக்குறித்த உண்மைக்கு உலகமுழுவதிலும் தசமபாகம் கொடுக்கும் இலட்சக்கணக்கானோர் சாட்சிகொடுக்கமுடியும்.  தேவனைவிட நீங்கள் அதிகமாக  கொடுத்துவிடமுடியாது என்கிற வார்த்தைகளின் உண்மையை அவர்கள் கற்றிருக்கிறார்கள்.

10. நாம் தசமபாகம் கொடுக்கும்போது யார் அந்த பணத்தை பெற்றுக்கொள்ளுகிறார்கள்?

“இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயே, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் (இயேசு) வாங்கினான்” – எபிரெயர் 7:8.

பதில்:  நமது பரலோகப் பிரதான ஆசாரியராகிய இயேசுவே நம்முடைய தசமபாகங்களைப் பெற்றுக்கொள்ளுகிறார்.

11. அவருடைய பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்கவேண்டுமெனில் ஆதாமும் ஏவாளும் தோல்வியடைந்த எந்த சோதனையில் நாம் அனைவரும் வெற்றிபெறவேண்டும்?

பதில்:  தங்களுடையதல்ல என்று தேவன் சொல்லியிருந்தவைகளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.  ஏதேனில், நன்மை தீமை அறியத்தக்க மரத்தைத் தவிர மற்ற அனைத்து மரங்களின் கனிகளையும் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்திருந்தார் (ஆதியாகமம் 2:16,17).  அந்த மரத்தின் கனி புசிப்பதற்கு அவர்களுடையதல்ல.  அவர்கள் அதை விட்டுவிடவேண்டும்.  அதைத் தொடவும் கூடாதென்று தேவன் சொல்லியிருந்ததாக (ஆதியாகமம் 3:3) ஏவாள் கூறினாள்.  எனினும் ஏவாள் அதை நம்பவில்லை.  அந்தக் கனியைப் புசித்து விழுந்தார்கள்.  இவ்விதம் நீண்ட, பயங்கரமான, பாவத்திற்குள்ளான  நெருக்கும் யாத்திரை துவங்கியது.  இன்றைக்கு தேவன் மக்களுக்கு தம்முடைய ஐசுவரியத்தையும், ஞானத்தையும், உலகத்தின் அனைத்து சொத்துக்களையும், பரலோக ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறார்.  நம்முடைய வருமானத்தில்  அவருக்குச் சொந்தமான பத்தில் ஒருபங்கைத் தவிர (லேவியராகமம் 27:30) எல்லாம் நம்முடையதே.  ஆனால் ஆதாம் ஏவாளிடம் இருந்ததைப்போலவே, அதை அவர் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வதில்லை.  நம்முடைய எல்லைக்குள் அதைவிட்டுவிட்டு, அதை எடுக்காதே, அது பரிசுத்தமானது, அது என்னுடையதென்று எச்சரிப்பு கொடுக்கிறார்.  தேவனுடைய தசமபாகத்தை அறிந்தே எடுத்து நம்முடைய சொந்தக் காரியத்திற்கு உபயோகிக்கும்போது, ஆதாம் ஏவாளின் பாவத்தையே திரும்பவும் செய்து, நம் மீட்பரின் மேலிருக்கும் நம்பிக்கைக்குறைவை காட்டுகிறோம். தேவனுக்கு நம்முடைய பணம் அவசியமல்ல.  நம்முடைய உண்மையும் நம்பிக்கையுமே தேவை.

தேவனை உங்களுடைய பங்காளியாக்குங்கள்:

நாம் தேவனுடைய தசமபாகத்தைத் திரும்ப கொடுக்கும்போது நான் செய்யும் அனைத்திலும் அவரை என்னுடைய பங்காளியாக்குகிறேன்.  என்ன ஆச்சரியமான, ஆசீர்வாதமான பாக்கியம்!  தேவனும் நானும் பங்காளிகள்! என்னுடைய பங்காளியாக அவர் இருக்கும்போது, இழப்பதற்கு ஒன்றுமில்லாமல் அனைத்தையும் நான் ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறேன்.  ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கான  தேவனுடைய சொந்த பணத்தை எடுத்து, அதை நம்முடைய சொந்த செலவுகளுக்காக உபயோகிப்பது பயப்படும்விதத்தில் ஆபத்தான துணிவான காரியம்.

12. தேவனுக்குச் சொந்தமான தசமபாகத்தோடு தேவன் இன்னும் வேறு எதை நம்மிடம் கேட்கிறார்?

“காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்” – சங்கீதம் 96:8.

பதில்:  அவர்மேலிருக்கும் நம்முடைய அன்பின் வெளிப்பாடாகவும் அவர் நம்மை ஆசீர்வதித்திருப்பதற்கான நன்றிக்காகவும் அவருடைய ஊழியத்திற்கான காணிக்கைகளை கொடுக்கும்படி அவர் கேட்கிறார்.

13. காணிக்கையாக நான் தேவனுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும்?

“அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” – 2 கொரிந்தியர் 9:7.

பதில்:  குறிப்பிட்ட அளவு காணிக்கையை வேதாகமம் குறிப்பிடவில்லை.  ஒவ்வொரு நபரும் எவ்வளவு கொடுக்கவேண்டும் (தேவன் உணர்த்தும் விதமாக) என்பதை தீர்மானித்து, அதை மகிழ்வோடு கொடுக்கவேண்டும்.

14. கொடுப்பதைக்குறித்த இன்னும் என்ன கூடுதலான வேதாகமக் கொள்கைகளை தேவன் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்?

பதில்:

அ. என்னுடைய முதல் நோக்கம் என்னையே ஆண்டவருக்குக் கொடுப்பதாயிருக்கவேண்டும் (2 கொரிந்தியர் 8:5).

ஆ. என்னுடைய மிகச் சிறந்ததை நான் தேவனுக்குக்கொடுக்கவேண்டும் (நீதிமொழிகள் 3:9).

இ. தாராளமாக கொடுக்கிறவனை தேவன் ஆசீர்வதிக்கிறார் (நீதிமெழிகள் 11:24.25).

ஈ. வாங்குவதைக்காட்டிலும் கொடுப்பதே அதிக பாக்கியம் (அப்போஸ்தலர் 20:35).

உ. கஞ்சத்தனம் பண்ணும்போது தேவன் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை நான் சரியாக உபயோகிப்பதில்லை. (லூக்கா 12:16-21).

ஊ. நான் கொடுப்பதைக்காட்டிலும் தேவன் எனக்கு அதிகம் கொடுக்கிறார் (லூக்கா 6:38).

எ. தேவன் என்னை செழிப்பாக்கி ஆசீர்வதித்திருப்பதற்கேற்ப நான் கொடுக்கவேண்டும் (1 கொரிந்தியர் 16:2).

ஏ. என்னால் முடிந்த அளவு நான் கொடுக்கவேண்டும் (உபாகமம் 16:17).

ஏற்கனவே தேவனுக்குச் சொந்தமான தசமபாகத்தை நாம்  தேவனுக்குத் திரும்பக் கொடுக்கிறோம்.  கூடவே காணிக்கைகளையும் கொடுக்கிறோம்.  காணிக்கைகள் தன்னார்வத்தோடும் மகிழ்வோடும் கொடுக்கப்படவேண்டும்.

15. ஆண்டவருக்குச் சொந்தமானது என்ன?

பதில்:

அ. உலகத்திலுள்ள அனைத்து வெள்ளியும் பொன்னும் (ஆகாய் 2:8)

ஆ. உலகமும் அதிலுள்ள குடிகளும் (சங்கீதம் 24:1).

இ. உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் ஆண்டவர் தமக்குச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார் (சங்கீதம் 50:10-12). எனினும் தமது பெரிய ஐசுவரியங்களை உபயோகிக்க, அவர் மக்களை அனுமதிக்கிறார்.  கூடவே செழிப்படைந்து செல்வம் சேர்ப்பதற்குத் தேவையான ஞானத்தையும் வல்லமையையுங்கூட அவர் அருளுகிறார் (உபாகமம் 8:18).  எல்லாவற்றையும் அமைத்துக்கொடுத்ததற்காக தேவன் நம்மிடம் கேட்பதெல்லாம், நம்முடைய பிழைப்பிற்காக அவர் செய்திருக்கும் மாபெரிய முதலீட்டை அறிக்கை செய்வதற்கான பத்தில் ஒரு பகுதியையும் நம்முடைய அன்பு மற்றும் நன்றியின் வெளிப்பாடான காணிக்கையையும்தான்.

16. பத்தில் ஒரு பகுதியையும் காணிக்கையையும் கொடுக்காது இருப்பவர்களை ஆண்டவர் எவ்விதம் குறிப்பிடுகிறார்?

“மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?  நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே” – மல்கியா 3:8.

பதில்:  அவர்கள் தம்மை வஞ்சித்ததாக கூறுகிறார். தேவனை வங்சிப்பதைக்குறித்து உங்களால் கற்பனை செய்யமுடியுமா?

17.தசமபாகத்திலும் காணிக்கைகளிலும் தேவனைத் தொடர்ந்து வஞ்சிப்பவர்களுக்கு என்ன சம்பவிக்கும் என்று தேவன் கூறுகிறார்?

“நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்” – மல்கியா 3:9;  “திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” – 1 கொரிந்தியர் 6:10.

பதில்:  தேவனுடைய சாபம் அவர்கள்மேல் தங்கும்; தேவனுடைய பரலோக இராஜ்யத்தை அவர்கள் சுதந்தரிக்கமாட்டார்கள்.

18. இச்சைக்கு எதிராக தேவன் நம்மை எச்சரிக்கிறார். ஏன் அது அவ்வளவு ஆபத்தானது?

  “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” – லூக்கா 12:34.

பதில்:  ஏனெனில் நம்முடைய இருதயங்கள் நம்முடைய முதலீடுகளின் பின்பாகவே செல்லும்.  என் நோக்கம் அதிகம் அதிகமாக பணத்தை சேகரிப்பதாக இருக்குமானால், என் இருதயம் பிடுங்குவதாகவும், இச்சையுள்ளதாகவும், பெருமையானதாகவும் மாறும்.  அதற்குமாறாக என் நோக்கம் மற்றவர்களுக்கு உதவிசெய்து, அவர்களோடு பகிர்ந்து, தேவனுடைய ஊழியத்தை நடத்துவதாக இருக்குமானால், என் இருதயம் கரிசனையுள்ளதாகவும், அன்பானதாகவும், தாராளமானதாகவும், தாழ்மையானதாகவும் மாறும்.  கடைசிநாட்களின் இருபது பயங்கரமான பாவங்களில் ஒன்றாக இருக்கிற இச்சை, பரலோகத்தைவிட்டு மக்களை வெளியே அடைக்கும் (2 தீமோத்தேயு 3:1-7).

19. தேவனுடைய பரிசுத்தமான தசமபாகத்தையும் பிரியமான காணிக்கைகளையும் வஞ்சிக்கும்போது இயேசு எவ்விதம் உணருகிறார்?

“ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி” – எபிரெயர் 3:10).

பதில்:  தன்னிடமிருந்து பணத்தைத் திருடும் குழந்தையைக்குறித்து பெற்றோர் உணரும்விதமாகவே பெரும்பாலும் அவர் உணரவேண்டும்.  பணம் பெரிய விஷயமல்ல; குழந்தையின் உண்மையின்மையும் அன்பின்மையும் நம்பிக்கையின்மையுமே மிகவும் ஏமாற்றத்தை உண்டாக்குகிறது.

20.மக்கெதோனியாவின் விசுவாசிகளுடைய உக்கிராணத்துவத்தைக் குறித்து பவுல் குறிப்பிடும் சிலிர்ப்பூட்டுகிற காரியங்கள் என்ன?

பதில்:  தொடர் பஞ்சத்தினால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்ட எருசலேமிலிருந்த தேவனுடைய மக்களுக்காக கொஞ்சம் பணத்தை தயவாக ஒதுக்கிவைக்கும்படி மக்கெதோனியாவிலிருந்த சபைக்கு பவுல் எழுதினார்.  அடுத்த சந்திப்பில் அவர்களுடைய பட்டணங்களுக்கு வரும்போது இந்த ஈவுகளை தாம் எடுத்துக்கொள்ளுவதாகவும் அவர் கூறினார். 2 கொரிந்தியர் 8ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கிற மக்கெதோனியா சபையிலிருந்து வந்த சிலிர்ப்பூட்டும் பதில், இருதயத்தைத் தொடுகிறதாயிருக்கிறது.

அ. வசனம் 5: தான் முதல் படி. அவர்கள் தங்கள் வாழ்க்கைகளை தேவனுக்கு பிரதிஷ்டைபண்ணினார்கள்.

ஆ. வசனம் 2,3: அவர்கள்தானே வறுமையிலிருந்தபோதும் கொடுக்கும் தங்கள் திராணிக்கும்மேலாக அவர்கள் கொடுத்தார்கள்.

இ. வசனம் 4: வந்து தங்களுடைய ஈவுகளை எடுத்துச்செல்லும்படி பவுலை வலியுறுத்தினார்கள்.

ஈ. வசனம் 9: அவர்களுடைய ஈவுகள் இயேசுகிறிஸ்துவின் தியாக உதாரணத்தைப் பின்பற்றியிருந்தது.

குறிப்பு:  நாம் மெய்யாகவே இயேசுவை நேசிக்கும்போது, அவருடைய வேலைக்காக தியாகத்துடன் கொடுப்பது நமக்கு பாராமாயிருக்காது.  மாறாக, மிகுந்த மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் செய்கிற மகிமையுள்ள சம்பவமாக இருக்கும்.

21.தசமபாகங்களையும் காணிக்கைகளையும் உண்மையாக கொடுப்பவர்களுக்கு தேவன் என்ன வாக்குத்தத்தத்தை கொடுக்கிறார்?

“என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.  பூமியின் கனியைப் பட்சித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”- மல்கியா 3:10-12.

பதில்:  தங்களைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி, உண்மையுள்ள உக்கிராணக்காரரை வர்த்திக்கப்பண்ணுவதாக தேவன் வாக்குக்கொடுக்கிறார்.

தேவன் ஆசீர்வதிக்கும் கீழ்க்கண்ட வழிகளை கருத்தில் கொள்ளுங்கள்.

அ. உங்களுடைய சம்பளம் பத்தில் ஒருபங்கு இல்லாது எவ்வளவுதூரம் போகுமோ, அதையும் தாண்டிப் போகும் என்று தேவன் வாக்குக்கொடுக்கிறார்.  உங்களுக்குச் சந்தேகம் இருக்குமாயின் உண்மையாக தசமபாகம் கொடுக்கிற மற்றவர்களை கேட்டுப்பாருங்கள்.

ஆ. ஆசீர்வாதம் எப்போதும் பணம் சம்பந்தப்பட்டதல்ல.  அவைகள் ஆரோக்கியத்தையும், சமாதானமான மனதையும், பதிலளிக்கப்பட்ட ஜெபங்களையும், பாதுகாப்பையும், நெருக்கமான அன்பான குடும்பத்தையும், கூடுதலான சரீர பெலத்தையும், ஞானமுள்ள தீர்மானம் எடுக்கும் திறமையையும், நன்றியறிதலான ஆவியையும், கிறிஸ்துவுடனான நெருங்கிய உறவையும், ஆத்தும ஆதாயம் செய்வதின் வெற்றியையும், தொடர்ந்து பயன்படும் ஒரு பழைய வாகனத்தையுங்கூட உள்ளடக்கியிருக்கும்.

இ. எல்லாவற்றிலும் அவர் உங்களுக்குப் பங்காளியாகிறார்.  இப்படிப்பட்ட ஆச்சரியமான ஒரு திட்டத்தை தேவனைத்தவிர வேறு எவரும் போடமுடியாது.

22. உங்களுடைய வருமானத்தில் தசமபாகத்தைக் கொடுக்கத் துவங்கவும், அன்பையும் நன்றியையும் விளக்கும் காணிக்கைகளை கொடுக்கவும் விரும்புகிறீர்களா?

பதில்: _________________________________________________

சிந்தனைக் கேள்விகள்

1. என்னுடைய சபை என் பணத்தை உபயோகிக்கும்விதம் எனக்கு பிரியமாக இல்லை.  எனவே நான் தசமபாகம் கொடுப்பதில்லை.

பதில்: தசமபாகம் கொடுப்பது தேவனுடைய கட்டளை.  தசமபாகம் ஆண்டவருக்குச் சொந்தமான பரிசுத்த பணம் (லேவியராகம்ம் 27:30). நீங்கள் தசமபாகம் கொடுக்கும்போது, தேவனுக்கே கொடுக்கிறீர்கள்.  சபையில் நீங்கள் கொடுக்கும் பணத்தைப் பொறுப்பெடுத்துக்கொள்ள தேவன் பெரியவராயிருக்கிறார்.  உங்கள் பொறுப்பெல்லாம் தசமபாகம் கொடுப்பதே. தேவனுடைய பணத்தை தவறாக உபயோகிப்பவர்களை நடத்துவதை தேவன் கையிலே கொடுத்துவிடுங்கள்.

2. என்னுடைய தசமபாகத்தைத்தாண்டி மிகக் குறைவான காணிக்கையே கொடுக்குமளவு என்னுடைய பொருளாதார நெருக்கடிகள் என்னை நெருக்கிவிட்டது. சுவிசேஷத்திற்கு அதிகம் தேவைப்பட, நான் குற்றவாளியாக உணருகிறேன்.

பதில்:  உங்கள் சிறப்பானதை கொடுக்கும்போது, நீங்கள் கொடுக்கும் அளவு முக்கியமானதல்ல. மாற்கு 12:41-44ல், இரண்டே காசுகளை கொடுத்த விதவை, “காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் … அதிகமாய்ப் போட்டாள்.” என்று இயேசு கூறினார். ஏனெனில் மற்றவர்கள் தங்கள் ஏராளத்திலிருந்து கொடுத்தனர். அவளோ தனக்கிருந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டாள்.  நாம் செய்கிற தியாகத்தின் அளவுப்படியும், என்ன ஆவியோடும் நினைவோடும் கொடுக்கிறோமோ அதன்படியுமே ஆண்டவர் அளக்கிறார்.  இயேசு உங்களுடைய காணிக்கையைப் பெரியதாக எண்ணி திருப்தியடைகிறார் என்பதை அறியுங்கள். உற்சாகமடையும்படி 2 கொரிதியர் 8:12ஐ வாசியுங்கள்.

3. உக்கிராணத்துவம் என்பது என்னுடைய பணத்தை முறையாக கையாள்வதைக்காட்டிலும் அதிகமானதை உள்ளடக்கியிருக்கிறதா?

பதில்:  ஆமாம்.  எனக்கு எல்லாவற்றையும் கொடுக்கிற தேவனிடமிருந்து நான் பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொரு தாலந்தையும் ஆசீர்வாதத்தையும் முறையாக கையாளுவதை உக்கிராணத்துவம் உள்ளடக்கியிருக்கிறது (அப்போஸ்தலர் 17:24,25).  உண்மையில் அது என்னுடைய வாழ்க்கையையே உள்ளடக்கியிருக்கிறது.  தேவனுடைய ஈவுகளில் உண்மையான உக்கிராணக்காரனாயிருப்பது என்பது, என்னுடைய நேரத்தை நான் செலவளிப்பதையும், உள்ளடக்கியிருக்கிறது.

அ. தேவன் எனக்கு நியமித்திருக்கும் வேலையை நான் செய்வதையும் (மாற்கு 13:34).

ஆ. கிறிஸ்துவிற்காக உயிரோட்டமான சாட்சியாக இருப்பதையும் (அப்போஸ்தலர் 1:8).

இ. வேதவாக்கியத்தை ஆராய்வதையும் (2 தீமோத்தேயு 2:15).

ஈ. ஜெபிப்பதையும் (1 தெசலோனிக்கேயர் 5:17).

உ. தேவையிலிருப்போருக்கு உதவுவதையும் (மத்தேயு 25:31-46).

ஊ. ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையை புதிதாக இயேசுவுக்கு அர்ப்பணிப்பதையும் (ரோமர் 12:1,2; 1 கொரிந்தியர் 15:31) உள்ளடக்கியிருக்கிறது.

4. சில பிரசங்கிமார்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறதாக நீங்கள் உணரவில்லையா?

பதில்:  ஆம் சந்தேகமின்றி!  இன்றைக்கு சில பாதிரிமார்களின் பெருமையான ஐசுவரியத் தோற்றம் மற்ற ஊழியர்களின் செல்வாக்கைக் குறைக்கிறது.  அது இயேசுவின் நாமத்திற்கு ஒரு நிந்தனையைக் கொண்டுவருகிறது.  அது, சபையிலிருந்தும் ஊழியத்திலிருந்தும் வெறுப்படைந்து பின்வாங்க இலட்சக்கணக்கானோரை நடத்துகிறது.  அப்படிப்பட்ட தலைவர்கள் நியாயத்தீர்ப்பில் பயங்கரமான தீர்ப்பைச் சந்திப்பார்கள்.

தேவனுடைய கடைசிகால மீதமான சபையின் ஊழியர்கள்

எனினும் தேவனுடைய கடைசிகால மீதமான சபையின் எந்த ஊழியக்காரரும் அதிகமாக கொடுக்கப்படுவதில்லை.  படிப்பை முடித்தபின்னர் அனைத்து ஊழியக்காரரும் அவர்களுடைய சபையின் அங்கத்தினர் அளவையோ, அல்லது அவருடைய பதவியையோ வைத்து அல்லாது, (மிகக் குறைவான வித்தியாசங்கள் இருக்கும்) ஒரேஅளவு சம்பளத்தையே பெறுகிறார்கள்.  அநேக இடங்களில் போதகர்களின் வருமானத்தை ஈடுசெய்யும்படியாக அவர்களுடைய துணைவிகள் வேறு ஏதாவது வேலை செய்கிறார்கள்.

5. தசமபாகம் கொடுக்க என்னால் முடியாதபோது நான் என்ன செய்வது?

பதில்:  தேவனை முதன்மைப்படுத்தும்போது நமது தேவைகள் எல்லாம் சந்திக்கப்படும் என்று அவர் கூறுகிறார் (மத்தேயு 6:33).  மனிதர்கள் புரிந்துகொண்டிருப்பதற்கு எதிரிடையாகவே அவருடைய கணக்கு அநேக வேளைகளில் வேலைசெய்கிறது.  அவருடைய திட்டத்தின்கீழ் தசமபாகம் கொடுத்தபின்னர் மீதம் இருப்பது, அவருடைய அந்த ஆசீர்வாதம் இல்லாது அனைத்தையும் செலவுசெய்வதைக்காட்டிலும் அதிகமாக இருக்கும்.  தசமபாகம் கொடுக்கமுடியாது என்று நம்மால் சொல்லமுடியாது.

கேள்விகள்

1. தசமபாகம் என்றால் பத்தில் ஒன்று. (1)

_____ ஆம்.
_____ இல்லை.


2. தசமபாகம் ஏற்கனவே தேவனுக்குச் சொந்தமானது. (1)

_____ உண்மை.
_____ பொய்.


3. என்னுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தேவனுக்குக்கொடுக்காதபோது நான் தசமபாகம் கொடுப்பதில்லை. (1)

_____ உண்மை.
_____ பொய்.


4. தசமபாகம் கொடுப்பதை இயேசு ஒப்புக்கொள்ளுகிறார். (1)

_____ ஆம்.
_____ இல்லை.


5. உதாரத்துவமாக கொடுப்பதற்கான கொள்கைகளும் வேதாகம குறிப்புகளும்:(5)

_____ ஏதாகிலும் மீதமிருந்தால் அதைக் கொடுங்கள்.
_____ மகிழ்ச்சியோடு கொடுங்கள்.
_____ தாராளமாக கொடுங்கள்.
_____ நன்றாக உணருவதற்காக கொடுங்கள்.
_____ தேவன் உங்களை ஆசீர்வதித்து இருப்பதற்கேற்ப கொடுங்கள்.
_____ வாங்குவதைக்காட்டிலும் கொடுப்பது அதிக ஆசீர்வாதமானது.
_____ நீங்கள் கொடுப்பதைக்காட்டிலும் தேவன் அதிகம் கொடுப்பார்.
_____ கொடுக்கவேண்டும் என்று உணரும்போது கொடுங்கள்.
_____ மக்கள் உங்களை கஞ்சன் என்று நினைக்காதிருக்க கொடுங்கள்.


6. வேதாகமத்தின்படி சுவிசேஷ ஊழியர்களின் வருமானத்திற்கான ஆதாரம்:(1)

_____ பிங்கோ விளையாட்டு.
_____ வெள்ளை யானை விற்பனை.
_____ தசமபாகம்.
_____ பேக்கரி விற்பனை.
_____ குலுக்குச்சீட்டு பரிசுமுறை.


7. மோசேயின் நாட்களுக்குமுன்பாகவே தேவனுக்குத் தசமபாகம் கொடுத்த எந்த முற்பிதாக்களை இந்த வேதபாடம் குறிப்பிட்டிருக்கிறது? (2)

_____ ஆதாம்.
_____ யாக்கோபு.
_____ நோவா.
_____ ஈசாக்கு.
_____ ஆபிரகாம்.
_____ மெத்துசலா.


8. மல்கியா 3:8ன்படி தசமபாகத்தையும் காணிக்கையையும் கொடுக்காதவர்கள் எந்த பாவத்தைக் குறித்த குற்றத்தில் இருக்கிறார்கள்? (1)

_____ விக்கிரகாராதனை.
_____ ஓய்வுநாளை மீறுவது.
_____ கொலை.
_____ களவு.


9. எபிரெயர் புத்தகத்தின்படி நாம் தசமபாகம் கொடுக்கும்போது, யார் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள்? (1)

_____ போதகர்.
_____ தேவையிலிருப்பவர்கள்.
_____ நம் பரலோக பிரதான ஆசாரியராகிய கிறிஸ்து.


10. 2 தீமோத்தேயு 3:1-7ன்படி தேவனுடைய இராஜ்யத்திலிருந்து மக்களை வெளியே அடைக்கிற கடைசிநாட்களின் இருபது பாவங்களில் ஒன்று இச்சை. (1)

_____ ஆம்.
_____ இல்லை.


11. தசமபாகங்களை தேவனுடைய பண்டசாலைக்கு கொண்டுவருவது என்றால்:(1)

_____ ஆவிக்குரிய புத்தகங்களை வாங்க அதை உபயோகிப்பது.
_____ ஆவிக்குரிய காரியத்திற்கு அதை செலவுசெய்வது.
_____ தேவனுடைய சபையின் பொக்கிஷத்திற்குள் அதை கொடுப்பது.


12. மல்கா 3:10ல் உண்மையாக தசமபாகம் கொடுக்கிறவர்களுக்கு தேவன் என்ன வாக்குத்தத்தம் கொடுக்கிறார்? (1)

_____ அவர்கள் ஒருபோதும் வியாதியடையமாட்டார்கள்.
_____ அவர்கள் ஒருபோதும் வேலையை இழக்கமாட்டார்கள்.
_____ அவர்கள் சமாளிப்பதற்கும் அதிகமான ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.


13. ஒரு பழத்தைச் சாப்பிடுவதைக்குறித்த சோதனையை தேவன் ஆதாம் ஏவாளுக்குக் கொடுத்தார். இந்த பாடத்தின்படி இன்றைக்கு எப்படிப்பட்ட சோதனையை அவர் தம் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார்? (1)

_____ வேதாகமத்தை தினமும் வாசிப்பதைக்குறித்த சோதனையை.
_____ சாட்சியளிப்பதைக்குறித்த சோதனையை.
_____ தசமபாகத்தை திரும்பவும் செலுத்துவதைக்குறித்த சோதனையை.
_____ ஜெபத்தைக்குறித்த சோதனையை.


14. தசமபாகம் கொடுப்பது சிலுவையோடு முடிவுக்கு வந்த மோசேயின் பிரமாணத்தின் ஒரு பகுதி.(1)

_____ ஆம்.
_____ இல்லை.


15. நான் தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கையை அவர் எவ்விதம் அளவிடுகிறார்? (2)

_____ நான் எவ்வளவு கொடுக்கிறேன் என்பதை வைத்து அளவிடுகிறார்.
_____ என்னுடைய தியாகத்தின் அளவை வைத்து அளவிடுகிறார்.
_____ என்ன கண்ணோட்டத்தோடு நான் கொடுக்கிறேன் என்பதை வைத்து அளவிடுகிறார்.


16. உண்மையான உக்கிராணத்துவம் என்பது என் பணத்தை எவ்விதம் கையாளுகிறேன் என்பதை மாத்திரமல்ல, ஜெபம், சாட்சி பகருதல், வேதவாக்கியத்தை ஆராய்தல், மற்றவர்களுக்கு உதவிசெய்தல் போன்ற செய்கைகளில் எவ்வளவு நேரம் செலவுசெய்றேன் என்பதையும் உள்ளடக்கியிருக்கிறது: (1)

_____ ஆம்.
_____ இல்லை.


17. தசமபாகத்தையும் மற்ற காணிக்கைகளையும் கொடுக்க நான் விருப்பமாயிருக்கிறேன்.

_____ ஆம்.
_____ இல்லை.